Published : 10 Dec 2024 06:15 AM
Last Updated : 10 Dec 2024 06:15 AM

தித்திப்பான பண்டத்தை நினைத்தாலே இனிக்குமா? | புதுமை புகுத்து 46

கண், மூக்கு, நாக்கு போன்ற உணர்வு உறுப்புக்கள் மூலம் பெறப்படும் தகவல்களைக் கொண்டு மூளை எவ்வாறு
பார்வை, நுகர்வுச் சுவைப் போன்றவற்றைத் தூண்டுகிறது? வலிப்பு நோய் சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட ஸ்டீரியோ - எலக்ட்ரோ என்செபலோகிராபி (stereo - electroencephalography) எனும் கருவியைப் பயன்படுத்தி ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் இதனை அண்மையில் ஆய்வு செய்தனர்.

ஆய்வில் பங்கேற்ற நபர்களைப் பூண்டு, ரோஜா, காபி போன்ற பல்வேறு வாசனைகளை முகரச் செய்தனர். மூக்கின் மேற்பகுதியில் உள்ள மோப்பக்குமிழ் உறுப்பு வாசனை வேதியியல் பொருட்களை உணர்கிறது. இந்தத் தரவு மோப்ப நரம்பு வழியே மூளையின் பைரிஃபார்ம் - கார்டெக்ஸ் பகுதிக்குச் சென்றடைகிறது.

இந்த மூளைப் பகுதி தவிர அமிக்டாலா, என்டார்ஹினல் கோர்டெக்ஸ், ஹிப்போகாம்பஸ், பாராஹிப்போகாம்பல் கார்டெக்ஸ் என மொத்தம் மூளையின் 5 பகுதிகளில் நூற்றுக்கணக்கான நியூரான்களின் இயக்கத்தைப் பதிவு செய்தனர்.

துடிக்கும் நரம்புகள்: ஒவ்வொரு வாசனைக்கும் இந்த 5 பகுதிகளின் நியூரான்கள் எப்படி வினைப் புரிகின்றன என்பதை முதலில் பதிவு செய்தனர். ரோஜாவை முகரும்போது குறிப்பிட்ட நியூரான்கள் துடிக்கும். வேறு வாசனைகளை முகரும்போது ஏற்படும் இயக்கத்திலிருந்து வேறுபட்டு அவற்றின் இயக்கம் தனித்துவமாக இருக்கும் என்பது அதில் துல்லியமாகத் தெரியவந்தது.

ஒவ்வொரு மூளைப் பகுதியிலும் நியூரான்கள் துடிக்கும் விதத்துக்கும் குறிப்பிட்ட வாசனைக்கும் இடையே உள்ள தொடர்பைக் கணக்கிட்டு அறியப் பதிவுசெய்யப்பட்ட நரம்பியல் தரவுகளைச் சேகரித்தனர். இந்த தரவுகளுக்கு ‘வகைப்படுத்திகள்’ எனப்படும் இயந்திரக் கற்றல் வழிமுறைக் கொண்டு செயற்கை நுண்ணறிவைப் பயிற்றுவித்தனர்.

அமிக்டாலா, ஹிப்போகாம்பஸ், என்டார்ஹினல் கோர்டெக்ஸ் ஆகிய மூன்று பகுதிகளில் அந்தந்த வாசனையைப் பொருத்து துடிக்கும் விதத்தில் வித்தியாசம் தெரிந்தது. ஆயினும் பைரிஃபார்ம் கோர்டெக்ஸைப் போல துல்லியமாக இல்லை. இறுதியாக பாராஹிப்போகாம்பல் கார்டெக்ஸி இயக்கப் பாங்கில் எந்த வாசனைத் தகவலும் இல்லை.

அடுத்ததாகப் பல்வேறு வகை மணங்களை முகரச் செய்து எவை நறுமணமாகவும், எவை துர்நாற்றமாகவும் உள்ளன எனப் பங்கேற்பாளர்களின் உணர்வைப் பதிவு செய்தனர். உணர்ச்சிகளோடு தொடர்புடைய அமிக்டாலா மூளைப் பகுதிதான் இனிமை - துர்நாற்றம் எனும் பகுப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதை கண்டனர்.

வாசனையை பிரித்தறியும் பணியை பைரிஃபார்ம் கோர்டெக்ஸ் மேற்கொள்ள, இனிமை- அருவருப்பு என்கிற பகுப்பை அமிக்டாலா மேற்கொள்கிறது. இந்த வாசனைதான் என இனம் காணும் பணியை ஹிப்போகாம்பஸ் பகுதி மேற்கொள்கிறது என்பது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

பொருள் வேறு விடை ஒன்று: ஆச்சரியத்துக்கு இடமாக வாசனை காட்டாமலேயே பொருளின் பெயரை அல்லது படத்தைப் பார்த்தால்கூட குறிப்பிட்ட மூளைப் பகுதி தூண்டல் பெற்றது. எடுத்துக்காட்டாக, அதிமதுரத்தின் வாசனையால் தூண்டப்பட்ட பைரிஃபார்ம் கோர்டெக்ஸில் உள்ள ஒரு நியூரான் ‘அதிமதுரம்’ எனத் துண்டு காகிதத்தில் எழுதிக் காண்பிக்கும்போதும், அதிமதுரத்தின் படத்தைப் பார்க்கும்போதும் துடித்தது. அதேபோல அதிமதுரத்தின் வாசனைக்கு இணையான சோம்பு எனும் பெருஞ்சீரகத்தை முகரும்போதும் இதே நியூரான் இயங்கியது.

அதாவது குறிப்பிட்ட வாசனை (அதிமதுர வாசனை) எனும் கருத்துரு இந்த நியூரான் இயக்கத்தோடு இணைந்துள்ளது. வாசனைக் குறித்த பல்வேறு தகவலை ஒருங்கிணைத்து வாசனை உணர்வைத் தூண்டுவதில் பைரிஃபார்ம்-கார்டெக்ஸ் பகுதிக்கு முக்கிய பங்குண்டு என இதிலிருந்து அறிகிறோம்.

எலுமிச்சை வாசனையை முகர்ந்தாலோ, எலுமிச்சைப் படத்தைப் பார்த்தாலோ அல்லது எலுமிச்சை என்று எழுதி வாசித்தாலோ மூளையின் நுகர்வு உணர்வு பகுதி தூண்டப்படுகிறது. ஆனால், எலுமிச்சை என்று நமது மனத்தில் யோசனைச் செய்தால் அதே பகுதி தூண்டப்படுமா? இந்தக் கேள்விக்கு விடை இல்லை.

- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புதுடெல்லி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x