Published : 26 Nov 2024 06:15 AM
Last Updated : 26 Nov 2024 06:15 AM

பூமியின் எதிர்காலத்தை கணித்த வானியலாளர்கள் | புதுமை புகுத்து 44

கிட்டத்தட்ட 600 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு என்னவாகும் என்பது இப்போதே தெரிந்தால் எப்படி இருக்கும்! தற்போது அது கண்கூடாகத் தெரிகிறது. ஆம்! எதிர்காலத்தில் பூமி எப்படி இருக்குமோ அதேபோன்று தற்போது இருக்கக்கூடிய ஒரு கோள், 4,000 ஒளி ஆண்டு தொலைவில் உள்ள KMT-2020-BLG-0414L எனும் விண்மீனைச் சுற்றி வருகிறது.

மைக்ரோலென்சிங் எனும் நவீன உத்தியைக் கொண்டு பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர் கெமிங் ஜாங் தலைமையிலான குழுவின் கண்டுபிடிப்பு இது. பிறப்பு, இளம் பருவம், நடுத்தர வயது, மூப்பு பின்பு மரணம் என மனிதனுக்கு இருப்பதுபோலவே விண்மீன்களுக்கும் வாழ்க்கை சக்கரம் உண்டு. சூரியன் இப்படித்தான் 500 கோடி ஆண்டுகள் முன்னர் பிறந்த நட்சத்திரமாகும்.

நடுத்தர வயதில் சூரியன்: சில நூறு கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் நடுத்தர வயதை அடைந்து இன்றைக்கு இருக்கும் வடிவத்தை சூரியன் எட்டியுள்ளது. சீனா, பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் செயற்கை சூரியனை அமைத்து ஆற்றலை உற்பத்தி செய்யும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆய்வின்படி தற்போதைய கட்டத்தில் சூரியனின் மையத்தில் ஹைட்ரஜன் அணுக்கள் பிணைந்து ஹீலியம் உருவாகும்.

ஒரு கட்டத்தில் விண்மீனின் மையத்தில் உள்ள ஹைட்ரஜன் தீர்ந்து போகும். அப்போது மையம் நோக்கி உள்ள இழுவை ஈர்ப்பு விசைக்கு எதிராக எந்த விசையும் இருக்காது. எனவே அந்த விண்மீன் சுருங்கத் தொடங்கும். ஈரமாக உள்ள ஸ்பான்சை பிழிந்தால் நீர் வெளியேறுவதுபோல சுருங்கும் விண்மீனுக்குள் இருக்கும் ஆற்றல் வெளியேறும். அப்போது அந்த விண்மீனின் மேற்பரப்பு விரிவடையும். இன்னும் 500 கோடி ஆண்டுகள் கடந்த பின்னர் சூரியன் இந்த நிலையை எட்டும். சிவப்பு ராட்சச விண்மீன் நிலை என்று இது அழைக்கப்படும்.

மையத்தில் சுருங்கும் கருவில் மேலும் அதிக அழுத்தத்தால் வெப்பம் ஏற்பட்டு ஹீலியம் இணைந்து கார்பன் உருவாகும். மறுபடி அந்த விண்மீன் ஒளிரும். அணையும் விளக்கு பிரகாசமாக எரிவது போலத்தான். மேலும் பல கோடி ஆண்டுகளில் இதுவும் நின்றுபோய் கார்பன் செறிவான வெள்ளைக்குள்ள விண்மீனாக மாறிவிடும். இன்னும் 600 கோடி ஆண்டுகளில் இந்த நிலையைச் சூரியன் எட்டும். அப்போது பூமி அளவுக்கு சூரியன் சுருங்கிவிடும்.

பூமி என்னவாகும்? - ஊதிய பலூன்போல, சில லட்சம் ஆண்டுகளில் தொந்தி பெருத்த சூரியன் விரிவடைந்து முதலில் மெர்குரியை (புதன்), பின்னர் வீனஸை (வெள்ளி) விழுங்கி விடும். சிவப்பு ராட்சத நிலையை சூரியன் எட்டும்போது அதன் 30% நிறை வெளியேறிவிடும். எனவே நிறை குறைந்த சூரியனுக்கு இப்போது உள்ள அதே ஈர்ப்பு ஆற்றல் இருக்காது. ஈர்ப்பு ஆற்றல் குறைவதால் பூமியின் சுற்றுப்பாதை விரிவடைந்து இன்று உள்ள தொலைவைப்போல இருமடங்காகும்.

இதனிடையில், 600 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியக் குடும்பத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வு ஏற்கெனவே KMT-2020-BLG-0414L-ல் ஏற்பட்டு விட்டது. இந்த விண்மீன் சிவப்பு ராட்சச நிலையைக் கடந்து வந்த வெள்ளைக்குள்ள விண்மீன் ஆகிவிட்டது. பூமியைப் போன்ற திடக்கோள் ஒன்றும் வியாழன் கோள் போல 17 மடங்கு பெரிய வாயுக்கோள் ஒன்றும் இந்த விண்மீனை சுற்றி வருகின்றன. அப்படியானால், சிவப்பு ராட்சச நிலையை ஆபத்தை இந்த திடக்கோள் கடந்துவிட்டது என்றே பொருள். எனவே, தலைக்கு வந்தது தலைபகையோடு போச்சு என்பது போல பலூன் போல விரிவடையும் சூரியனிடமிருந்து பூமி தப்பிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நீங்கள் வருங்காலத்தில் மூப்பு அடைந்தால் எப்படி இருப்பீர் என்பதை உங்களுடைய தாத்தாவைப் பார்த்து ஓரளவு ஊகித்துவிடலாம் இல்லையா!? அதுபோல் ஏற்கெனவே மூப்பு அடைந்த KMT-2020-BLG-0414L குடும்பம் வருங்காலத்தில் சூரியக் குடும்பத்துக்கு என்னவாகும் என்பதைச் சுட்டி நிற்கிறது.

- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி; tvv123@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x