Published : 15 Oct 2024 06:10 AM
Last Updated : 15 Oct 2024 06:10 AM
தும்மல் நியூரான்கள், இருமல் நியூரான்கள் என இருவகை நியூரான்கள் மூக்கில் உள்ளன. இவற்றில் எது தூண்டப்படுகிறதோ அதற்கு ஏற்றவாறு தும்மல் அல்லது இருமல் ஏற்படுகிறது. இதனை எலிகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் மயக்கவியல் துறை வலி ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹாவுஜியாங் தலைமையிலான ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ளது. ஒவ்வாமை, தொடர்ந்த இருமல் போன்ற அவதிக்குள்ளாகும் நோயாளிகளுக்கு புதிய மேம்படுத்தப்பட்ட சிகிச்சை அளிக்க இந்த ஆய்வுகள் உதவும்.
ஜாடிக்கு ஏற்ற மூடி: செல்களின் மேற்பரப்பில் அயணி சேனல்கள் எனப்படும் நுண்கதவு போன்ற அமைப்பு இருக்கும். ஜாடிக்கு ஏற்ற மூடிபோல ஒருசில குறிப்பிட்ட வடிவம் கொண்ட புரதங்கள் மட்டுமே இந்த சேனல்கள் வழியே நுழைந்து செல்லமுடியும். எலிகளின் மூக்கு துவாரத்தில் மேலடுக்காக உள்ள நியூரான் உணர்வி செல்களின் சேனல்கள்களை ஆய்வு செய்து ஏற்கனவே வகைப்படுத்தி இருந்தனர். இந்த ஆய்வில் பல்வேறு பொருட்களை நுகர செய்து எந்த பொருள் தும்மல், இருமல் சேனல்களை தூண்டுகிறது என ஆய்வு செய்தனர். BAM 8-22 என்கிற ஒரு வேதிப்பொருள் தும்மலை தூண்டியது.
இந்த பொருள் MrgprC11 என்கிற அயணி சேனலோடு ஜாடிக்கு ஏற்ற மூடிபோல பொருந்தியது. MrgprC11 நீக்கம் செய்த மரபணு மாற்ற எலி எவ்வளவுதான் BAM 8-22 வேதிப்பொருளை நுகர்ந்தாலும் தும்மலே வரவில்லை. ஆனால் ஃப்ளு காய்ச்சல் ஜலதோஷம் ஏற்பட்டது. அதாவது MrgprC11 இல்லை என்றால் தும்மல் இல்லை. MrgprC11 தூண்டப்பட்டால் தும்மல் என்பது புலனாகியது. மரபணு நீக்கப்பட்ட எலிக்கு தும்மல் வரவில்லை என்றாலும் ஃப்ளு காய்ச்சல் தாக்கி இருமல் தொடர்ந்து ஏற்பட்டது. சோமாடோஸ்டாடின் (somatostatin SST) எனும் அயணி சேனல்தான் இருமலை தூண்டுகிறது என கண்டுபிடித்தனர்.
இந்த நியூரான்கள் மூக்கில் இருக்கவில்லை மூக்கிலிருந்து நுரையீரலுக்கு செல்லும் மூச்சுக்குழலின் மேலடுக்கு செல்களில் செறிவாக இருந்தது. இந்த நியூரான் செல்கள் தூண்டப்பட்டால் சோமாடோஸ்டாடின் எனும் வேதிப்பொருளைச் சுரக்கும். அதாவது தும்முவதும் இருமுவதும் ஒருசேர நடந்தாலும் இரண்டும் ஒரே வகை நியூரான் செல்களின் அயணி சேனல் தூண்டுதலால் ஏற்படுவது இல்லை.
அதற்கான நியூரான் அயணி சானல்கள் தூண்டப்படும்போது அந்தச் சமிக்ஞை மூளைக்கு சென்று தும்மல் இருமல் ஏற்படுகிறது. இருமலையும் தும்மலையும் ஒன்றுக்கு மேற்பட்ட அயணி சேனல்கள் நியூரான்செல்கள் தூண்டலாம். இவற்றை இனம் காணும் முயற்சி தீவிரம் அடைந்து வருகிறது.
அது சரி, எலியில் உள்ள அதே அமைப்புதான் மனிதர்களிடமும் உள்ளதா? ஆம்! மனிதர்களிடமும் இதேபோன்ற தும்மல் இருமலுக்கான அயணி சேனல்கள் உள்ளன என ஆரம்பக்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விடாமல் இருமல் தொடர்ந்தால் நோயாளி மயக்கம் அடையக்கூடும்.
ஆயினும் தற்போது இருமலை கட்டுப்படுத்தத் திறன் மிக்க மருந்துகள் இல்லை. மேலும் இன்று உள்ள மருந்துகள் மயக்க நிலைக்கு எடுத்து செல்கிறது. போதை ஏற்படுத்தும் தன்மையும் கொண்டது. இந்த ஆய்வுகளின் தொடர்ச்சியாக இருமலை கட்டுப்படுத்தவும் தும்மல் போன்ற உடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரும் திறன் மிக்க மருந்துகள் உருவாக்கவும் வழி பிறக்கும்.
- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி; தொடர்புக்கு: tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT