Published : 24 Sep 2024 06:36 AM
Last Updated : 24 Sep 2024 06:36 AM

தாய் பாசத்தை தூண்டும் மூளை நியூரான்கள் | புதுமை புகுத்து 35

பிறந்த முதல் சில நாட்களிலேயே தாயுடன் பாசப்பிணைப்பை ஏற்படுத்தும் சிறப்பு நியூரான்களை சுண்டெலியின் மூளையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதிலும் தாயிடமிருந்து பிரித்தாலும் இந்த நியூரான்களைத் தூண்டினால் தாயுடன் உள்ளபோது உருவாகும் ஆறுதல், மன நிம்மதி முதலிய உணர்வுகள் தூண்டப்படுவது தெரியவந்துள்ளது.

ஹார்வர்ட் பல்கலை நரம்பியல் விஞ்ஞானி கேத்தரின் துலாக் மற்றும் யேல் பல்கலை நரம்பியல் நிபுணர் மார்செலோ டீட்ரிச் இருவரும் இணைந்து நடத்திய ஆய்வு இது. பிறந்து 16 முதல் 18 நாட்களே ஆன எலிக்குட்டிகளின் மூளையை ஆய்வு செய்தனர். தாய்ப்பால் அருந்தும் குட்டிகளாக இருக்கும்போது தாயுடன் வினைபுரியும்போது மூளையின் தாலமஸுக்குக் கீழே அமைந்துள்ள சாம்பல் நிறப் பொருளின் மெல்லிய அடுக்கானஜோனா இன்செர்டா (zona incerta-ZI) துடிப்பது தெரிந்தது.

அறுவை சிகிச்சை மூலம் சுண்டெலி குட்டிகளின் மூளையில் இந்த பகுதியில் ஃபைபர்-ஆப்டிக் கருவியைப் பொருத்தினர். அப்போது நியூரான்கள் துடிக்கும் தீவிரத்துக்கு ஏற்ப இந்த கருவிஒளியை உமிழும். ஒளியின் பிரகாசத்தைப் பதிவு செய்து மூளையின் இயக்கத்தை ஆய்வு செய்தனர்.

உற்சாகம் பிறந்தது: பால் அருந்தும் நாட்களில் தாயோடு நெருங்கி இருக்கும் நிலையில் மூளையின் இந்த பகுதியில் சோமாடோஸ்டாடின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. கலக்கத்தைத் தூண்டும் கார்டிகோஸ்டிரோன் ஹார்மோன் போன்ற பிற ஹார்மோன்களின் உமிழ்வை இதுமட்டுப்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.

வேறு பல கோணங்களிலும் இந்த ஆய்வு மேற்கொண்டு நடத்தப்பட்டது. அதில், பொம்மைகளுடன் நேரத்தை செலவிடும்போது இந்த நியூரான் இயங்கவே இல்லை. தனது உடன் பிறந்த எலிக்குட்டி, தன்னையொத்த வயதுடைய ஏனைய எலிக்குட்டிகள், ஏனைய முதிர்ந்த எலிகளோடு நேரத்தை செலவழிக்கும்போது இந்த மூளைப்பகுதி ஓரளவு இயங்கியது. ஆனால், அவற்றின் தாயோடு உள்ளபோது சோமாடோஸ்டாடின் சுரப்பி நியூரான்கள் மிகவும் வலுவாக செயல்பட்டன.

இந்த சோமாடோஸ்டாடின் சுரப்பி நியூரான்கள் தாய்-குழந்தை பிணைப்பின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கியது. தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட 11 நாள் வயதான குட்டி எலிகளிடம் அடுத்ததாக ஆய்வு செய்தனர். 12 நிமிடங்கள் வரை தாயிடமிருந்து பிரித்து வைக்கும்போது மூளையின் இந்த பகுதி செயலிழந்தது.

அழுகுரல் போன்ற ஒலிகளை சுண்டெலிக் குட்டிகள் எழுப்பின; மனக்கலக்கத்தின் அடையாளமாக கார்டிகோஸ்டி ரோன் உமிழ்வு அதிகரித்தது. இதே குட்டிகளை மறுபடி தாயோடு சேர்த்தவுடன் இந்த பகுதி செயல்படத் தொடங்கியது. அழுகுரல் இல்லை; கார்டிகோஸ்டிரோன் அளவு சடசடவென குறைந்து போனது.

செயற்கையாக கிடைக்கும் அமைதி: அடுத்த கட்ட ஆய்வில் தாயிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட சுண்டெலி குட்டிகளில் செயற்கையாக இந்த நியூரான்களை தூண்டினால் ஏற்படும் விளைவு சோதிக்கப்பட்டது. செயற்கையாக நியூரான்களை தூண்டினாலும் மனக்கலக்கம் அகன்று குட்டி எலிகள் அமைதி அடைந்தன. தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு இந்தபகுதி தூண்டப்பட்ட குட்டி எலிகளில் மன அழுத்த ஹார்மோன் கார்டிகோஸ்டிரோனின் அளவு குறைவாக இருந்தது.

மேலும் தாயின் வாசத்தை நினைவில் நிறுத்தி அந்த வாசத்தை முகரும்போது அமைதி அடைய முடிந்தது. தூண்டப்படாத குட்டிகளுக்குத் தாயின் வாசத்தை முகரக் கொடுத்தாலும் மனக்கலக்கம் அகலவில்லை. குட்டி எலிகளின் மனக்கலக்கத்தைக் குறைப்பதில் ZI சோமாடோஸ்டாடின் நியூரான்கள் பங்கு வகிக்கின்றன என்பதற்கான சான்றுகளை இந்த ஆய்வு வழங்குகிறது. இதே நியூரான்கள் மனித தாய்-குழந்தை பிணைப்பிலும் தாக்கம் செலுத்தலாம். குறிப்பாகப் பிறந்த குழந்தை தன்னை சுற்றியுள்ள சமூகத்தை எப்படி புரிந்து கொள்கிறது என்பதை அறிய உதவும்.

- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி; தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x