Published : 10 Sep 2024 06:30 AM
Last Updated : 10 Sep 2024 06:30 AM

கோடிக்கணக்கான மாணவர்களின் கல்வி கனவுகளும் ரூ.573 கோடி பணமும்!

கல்வி இன்றைக்கு குழந்தைகளின் அடிப்படை உரிமை ஆகும். குழந்தைகள் என்றால் யார்? யுனெஸ்கோ அறிவிப்பின்படி 18 வயது நிரம்பாதயாவரும் குழந்தைகளே. இந்த குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு. ஒருகாலத்தில் இந்திய அரசியல் சட்டத்தின்படி குடிமகனுக்கு கல்வி அளிக்கும் கடமை மாநில அரசுக்கு உரியது. காமராஜரும், அண்ணாதுரையும் தமிழகத்தின் முதல்வர்களாக இருந்தபோது கல்வி மாநில பட்டியலில் இருந்தது.

ஆனால், 1976-ல் மத்திய மற்றும் மாநில அரசு ஆகிய இரண்டுக்கும் பொதுவான ஒத்திசைவு பட்டியலுக்கு கல்வி மாற்றப்பட்டது. இந்த மாற்றம் வந்த பிறகு நம் குழந்தைகளின் கல்விக்கு இரண்டு அரசுகளுமே ஒன்றாக ஒத்திசைவோடு பாடுபட வேண்டும். இதில், மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டும் இணைந்து ரூ.3586 கோடியை சர்வ சிக்ஷா அபியான் எனும் திட்டத்திற்காக 2024-25 கல்வியாண்டிற்கு ஒதுக்க வேண்டும். இதில் 60 சதவீதமான ரூ. 2,152 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும். மாநில அரசின் சார்பில் 40% அதாவது ரூ.1,434 கோடி வழங்கப்படவேண்டும்.

ஏற்க மறுப்பதேன்? - இதில் முதல் தவணையாக ஒரு குறிப்பிட்ட தொகையை மத்திய அரசு வழங்கிவிட்டது. இப்போது இரண்டாவது தவணையில் ரூ.573 கோடியை நிறுத்தி வைத்துள்ளது. இந்த பணம் ஒதுக்கப்படாவிட்டால் சர்வ சிக்ஷா அபியான் எனும் திட்டத்தின்கீழ் இயங்குகின்ற ஆயிரக்கணக்கான பள்ளிகள் பாதிக்கப்பட உள்ளன. எதற்காக இந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளது? கடந்த ஜூலை மாதம் புது டெல்லியில் பி.எம்.ஸ்ரீ எனும் பிரதம மந்திரி மாதிரிப்பள்ளி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையொப்பமிட்டிருக்க வேண்டும்.

இதில் மும்மொழி கொள்கையான தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி பேசாத மாநிலங்கள் இந்தியையும் கற்க வேண்டும் என்கிற ஒரு கட்டாயம் இணைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலோ, 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு இருமொழி கொள்கைக்கான சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. அதுமட்டு மல்ல தமிழக அரசு நம்முடைய மாநில கல்விக் கொள்கைக்காக நீதியரசர் முருகேசன் தலைமையில் அமைத்த கல்விக் குழுவும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த கூடாது என்று பரிந்துரைத்துவிட்டது.

மேலும் தமிழகத்தில் வழக்கமாக பின்பற்றப்படும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் பரிந்து ரைத்துள்ளது. ஆனால், தேசிய கல்விக் கொள்கை 8-ம் வகுப்போடு ஒரு பொதுத் தேர்வை நடத்தி 9,10,11,12 வகுப்புகளுக்கு செமஸ்டர் முறை எனும்ஒரு ஆண்டிற்கு இரண்டு பொதுத் தேர்வுகளை அறிமுகம் செய்ய முயற்சிக்கிறது. மேலும், 3-ம், 5-ம், 8-ம் வகுப்பிலும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் தமிழகத்தில் ஏற்கப்படவில்லை.

ஒத்திசைவு முக்கியம்: இவற்றை உள்ளடக்கிய தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்க நிர்பந்திப்பதற்காக கல்விக்கான ஆதார தொகையான ரூ. 573 கோடியை கொடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது ஏற்க கூடியதாக இல்லை என்பது கல்வியாளர்கள் பலரின் கருத்தாகும். மாநில கல்விக் கொள்கை என்கிற ஒன்றை உருவாக்கி மத்திய கல்விக்கொள்கையின் இதுபோன்ற சரத்துக்களை ஏற்க முடியாது என்று சொல்வதற்கு ஒரு மாநிலத்திற்கு உரிமை உள்ளது. கல்வி தற்போது ஒத்திசைவு பட்டியலில் இருப்பதால் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் நமக்கு கல்வி வழங்குவதில் ஒரு ஒத்திசைவு மனப்பான்மை ஏற்பட வேண்டும்.

தமிழ்நாடு மட்டுமல்ல கேரளம், மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகியவையும் மத்திய அரசினுடைய பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை. இதனால் அவர்களுக்கும் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். கோடிக்கணக்கான குழந்தைகளின் கல்வி கனவுகளை இப்படி நிறுத்தி வைப்பது நியாயமாக தெரியவில்லை.

இதற்கு வரலாற்றிலிருந்து ஒரு உதாரணத்தைச் சொல்லி முடிப்போம். 1966-ல் கோத்தாரி கல்விக் கொள்கை அமலுக்கு வந்தது. இதுதான் 10+2+3என்கிற தற்போதைய 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை அறிமுகம் செய்தது. அப்போது நாம் எஸ்எஸ்எல்சி என்னும் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வை வைத்து இருந்தோம். உடனடியாக நாம் கோத்தாரி கல்விக் குழுவின் இந்த முடிவை ஏற்கவில்லை.

பத்தாண்டுகளுக்கு மேல் விவாதித்து 1980-ல்தான் முதல் மேல்நிலை பொதுத் தேர்வை தமிழ்நாடு நடத்தியது. அதேபோல தேசிய கல்வி கொள்கையை ஏற்கவும் விவாதிக்கவும் நமக்கு இன்னும் கூடுதல் கால அவகாசத்தை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். அதற்காக நமக்கு வரவேண்டிய தார்மிக உரிமையான இதுபோன்ற கல்வித் தொகைகளை நிறுத்தக் கூடாது என்பதே அனைவரின் விருப்பமும் ஆகும்.

- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x