Published : 10 Sep 2024 06:15 AM
Last Updated : 10 Sep 2024 06:15 AM
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைபோல வியாழன் கோளின் சிவந்த கண் போன்ற அமைப்பு அளவில் சிறிதாகி வருகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். தொலைநோக்கி வழி ஜுபிடர் எனும் வியாழன் கோளைக் காணும்போது அணிலின் மீது வரிவரியாக உள்ளது போல கோளின் மீது அடர் நிறத்திலும் வெளிர் நிறத்திலும் கிழக்கு-மேற்கு திசையில் பட்டை போன்ற அமைப்பு தென்படும். மேலும் அதன் தென்கோளத்தில் கோழி முட்டை போன்ற வடிவம் கொண்ட சிவந்த வடிவம் தெளிவாக தென்படும். இதனை வியாழனின் ‘சிவந்த கண்' என்பார்கள்.
2 பூமிக்கு சமம்! - வியாழன் கோளின் அருகே 1979-ல் நெருங்கி சென்ற வாயேஜர் விண்கலம் இந்த அமைப்பின் மேற்கு கிழக்கு நீளம் 23,300 கி.மீ. என அளவீடு செய்தது. அதாவது இந்த கண் போன்ற அமைப்பில் சற்றேறக்குறைய இரண்டு பூமியை வைத்து விடலாம். 1990 களில் விண்ணில் ஏவப்பட்ட ஹபுல் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் இதனை தொடர்ந்து ஆய்வு செய்தனர்.
மேலும் கலிலியோ, காசினி, நியூ ஹொரைசன்ஸ், ஜூனோ ஆகிய விண்கலங்களும் இந்த கண் போன்ற அமைப்பை ஆய்வு செய்துள்ளன. கடந்த 1995-ல் 20,950 கி.மீ. அகலம் கொண்டிருந்த இந்த அமைப்பு 2014-ல் 16,500 கி.மீ.ஆக சுருங்கி விட்டது. 1800களில் இதே கண் போன்ற அமைப்பு 41,000 கி.மீ., சற்றேறக்குறைய மூன்று பூமியை உள்ளே கொள்ளும் அளவுக்கு பெரிதாக இருந்தது.
சேகரித்த தரவுகளை கொண்டு 2012 முதல் இந்த கண் போன்ற அமைப்பை ஆய்வு செய்தபோது ஆண்டுக்கு 930 கி.மீ. சிறிதாகி வருகிறது என கண்டுபிடித்தனர். மேலும் வடக்கு தெற்கு திசையில் அளவில் மாற்றம் பெரிதாக இல்லை; மேற்கு கிழக்கு திசையில் மட்டும் அளவு சுருங்கி வருகிறது.
எனவே கோழி முட்டை வடிவத்திலிருந்து வட்ட வடிவமாக மாறிக்கொண்டிருக்கிறது எனவும், அதன் நிறம் சிவப்பிலிருந்து அடர் ஆரஞ்சு நிறமாக மாறி வருகிறது எனவும் கரோலினா மாநில பல்கலைக்கழக கடல், பூமி மற்றும் வளிமண்டல அறிவியல் துறையின் ஆய்வாளர் காலேப் டபிள்யூ. கீவேனியும் அவரது ஆய்வுக் கூட்டாளிகளான கேரி எம்.லக்மேன், திமோதி ஈ.டௌலிங்கும் கூறுகிறார்கள்.
வீசும் பேய் காற்று: பட்டையான வடிவமும் கண் போன்ற வடிவமும் வியாழன் கோள் மீது வீசும் பலத்த காற்றின் விளைவுகளே. கீழிருந்து மேலே காற்று உயரும் பகுதிகள் வெளிர் நிறத்திலும் மேலிருந்து கீழே காற்று வீசும் பகுதிகள் அடர் நிறத்திலும் காட்சி தருகின்றன. வியாழன் கோளின் மீது எப்போதும் இருக்கும் உயர் அழுத்த நிலைக் காரணமாக உருவான எதிர்ச் சூறாவளிதான் கண் போன்ற வடிவில் காட்சி தருகிறது.
தற்போது பூமியைபோல 1.3 மடங்கு அகலத்தில் உள்ளது. பூமியில் ஏற்படும் சூறாவளியின் மையம் அமைதியாக இருப்பதுபோல வியாழன் கோளின் இந்த ராட்சச சூறாவளியும் அமைதியாக உள்ளது. ஆனால், இதன் விளிம்பு பகுதிகளில் மணிக்கு 430 கி.மீ. முதல் 680 கி.மீ. வேகத்தில் பேய் காற்று வீசுகிறது. கடிகாரத்துக்கு எதிர் திசையில் காற்று சுழற்சி ஏற்படுவதால் இதனை எதிர்ச் சூறாவளி என்பார்கள்.
எதிர் எதிர் திசையில் சுழலும் இரண்டு காற்று பட்டைகளுக்கு நடுவே சிக்கி சுழல்வதால் இந்த சிவந்த கண் போன்ற சூறாவளி அமைப்பு வெகுவேகமாக 4.5 நாட்களுக்கு ஒருமுறை தன்னைத்தானே சுழன்று கொண்டிருக்கிறது. கிளை நதிகள் தரும் நீர் வரத்து காரணமாகத்தான் காவிரி, கங்கை, யமுனை போன்ற நதிகள் பிரம்மாண்டமாக தென்படுகின்றன.
அதுபோல சிறுசிறு சூறாவளிகள் தரும் ஆற்றலை உள்விழுங்கி இந்த ராட்சச சூறாவளி நிலை கொள்கிறது என்கிறார்கள். சிறு சிறு சூறாவளிகள் சேர்க்கை குறைந்து போவதால் தான் இந்த அமைப்பு அளவில் சுருங்குகிறது எனவும் கருதுகிறார்கள். இன்னும் நூறு ஆண்டுகளுக்குள் இந்த ராட்சச சூறாவளி வலுவிழந்து கண் போன்ற அமைப்பு முற்றிலும் மறைந்து விடும் எனவும் கணித்துள்ளனர்.
- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி; தொடர்புக்கு: tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT