Published : 27 Aug 2024 06:25 AM
Last Updated : 27 Aug 2024 06:25 AM

புதுமை புகுத்து 31: காகித மடிப்பு விளக்கு போன்ற அதிசய ஒரு செல் உயிரி

சிலவகை தவளைகள் தங்கள் நாக்கை வெளியே நீட்டித் தொலைவில் உள்ள பூச்சியைப் பிடிக்கும். அதுவே ஒரே ஒரு செல் உயிரியான லாக்ரிமரியா ஒலோர் (Lacrymaria olor) 30 நொடிகளில் தனது உடலின் நீளத்தை 30 மடங்கு நீட்டி தனது இரையைப் பிடித்துவிடக் கூடியதாகும். தன் உடலில் தும்பிக்கை போன்ற அமைப்பு இருப்பதினால் இப்படி செய்கிறது.

மடித்து வைக்கப்பட்ட குடை பிடியை இழுத்து நீட்ட முடிவதுபோல 1.2 மில்லி மீட்டர் அளவுக்கு லாக்ரிமரியா ஒலோர் நீள்கிறது. சராசரியாக 1.7 மீட்டர் உயரம் உள்ள ஒரு நபர் தனது கழுத்தை இதே விகிதத்தில் நீட்ட முடிந்தால் சென்னை கோட்டையில் உள்ள கொடிமரத்தின் உச்சியை கீழே நின்று கொண்டு தொட முடியும்!

இது பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட ஸ்டான்போர்ட் பல்கலை உயிரியல் இயற்பியலாளர் எலியட் ஃப்ளாம் முதலில் நம்பவில்லை. ஆனால், தொடர் ஆய்வில் இந்த ஒரு செல் உயிரி உணவை எக்கிப் பிடிக்க தன் உறுப்பை நீட்டுவதைக்கண்டு மலைத்துப் போனார். வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை நுண்ணுயிரியலாளர் விட்டோ ரியோ போஸ்காரோ, ஸ்டான்போர்டில் உயிரி பொறியாளர் மனு பிரகாஷ் ஆகிய இருவரும் இவருடன் சேர்ந்து ஆய்வில் ஈடுபட்டனர்.

ரோபோவுக்கு பயன்படுமா? - செயற்கையாக இந்த உறுப்பை பிடித்து இழுத்து நீட்ட முடியுமா என்று சோதித்தனர். நுண் அளவில் சுருட்டி மடித்து 30 மடங்குவரை நீட்ட முடிந்தால் அதே பொறியை வைத்து ரோபோக்களின் கைகளைச் செய்ய முடியும்; உடலில் செலுத்தும்போது மடித்து சிறிதாக வைத்துக்கொண்டு சிகிச்சை செய்ய வேண்டிய பகுதி வந்ததும் விரித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்படியான ரோபோடிக் நுண் அறுவை சிகிச்சை கருவிகளை உருவாக்க முடியும்.

நுண்ணோக்கி படமாக்கல் வழியே இந்த ஒருசெல் உயிரியின் இயக்கத்தை வீடியோ பதிவு செய்து ஆய்வு செய்தனர். மைக்ரோடியூபில் எனப்படும் நுண்குழாய் போன்ற பாலிமர் பொருளினால் இந்தத் தும்பிக்கை போன்ற உறிஞ்சு குழல் அமைப்பு கட்டமைக்கப்பட்டிருக்கிறது எனக் கண்டனர்.

ஸ்ப்ரிங்கா அல்லது சுருளா? - அழுத்தப்பட்ட ஸ்ப்ரிங் சிறிதாக இருக்கும்; விரியும்போது அளவு பெரிதாகும். பொம்மைகளில் சாவி கொடுத்துச் சுருங்க வைக்கும் சுருள் அமைப்பும் சுருங்கி விரிய முடியும். இதில் லாக்ரிமரியா ஒலோர் உயிரியில் உள்ளது ஸ்பிரிங் போன்ற அமைப்பா அல்லது சுருள் போன்ற அமைப்பா என ஆய்வு செய்ய எத்தனித்தனர். செயற்கையாக நீட்டிப் பார்த்தபோது முழுமையாக விரிவடையவில்லை. ஆனால், அது ஸ்ப்ரிங்கும் அல்ல சுருளும் அல்ல என்பது மட்டும் புரிந்தது.

ஜப்பானில் பேப்பரை மடித்து ஆரிகாமி முறையில் தயார் செய்யப்படும் சோச்சின் விளக்குகள் பிரபலம். சுருட்டி மடித்து கையடக்க அளவில் இருக்கும் இந்த விளக்குகளை விரித்துப் பெரிதாக்கலாம். தற்செயலாக ஜப்பான் சென்ற மனு பிரகாஷின் கண்களில் இந்த ஆரிகாமி சோச்சின் விளக்குகள் தட்டுப்பட்டன. அவருக்கு மூளையில் பொறி தட்டியது.

சேலை கட்டும்போது கொசுவ மடிப்புக்கள் செய்து கட்டுவது போல காகிதத்தை மடித்து கையடக்க அளவில் செய்வார்கள். இந்த மடிப்புக்களை விரித்து வைத்தால் விளக்கின் அளவு பெரிதாகும். லாக்ரிமரியா ஒலோர் ஒரு செல் உயிரியின் நீளும் அமைப்பும் இதுபோன்ற ஆரிகாமி மடிப்பு முறையில்தான் உள்ளது என்பதை கண்டுபிடித்தார்கள்.

தும்பிக்கை போன்ற உறுப்புப் பகுதி நீள்வது குறித்து விடை கிடைத்தாலும் வாலு போய்க் கத்தி வந்தது கதையானது. ஏனெனில் எப்படி இந்த உறுப்பு உருவாகிறது என்பதும், எந்தத் திசையில் உணவு உள்ளது என்பதை எப்படி இந்த உயிரி உணர்கிறது என்பதும் புதிய புதிராகவே உள்ளது.

- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி; தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x