Published : 06 Aug 2024 06:05 AM
Last Updated : 06 Aug 2024 06:05 AM
லட்சம் என்பதை lac, lack, lakh என்று எப்படி வேண்டுமானாலும் எழுதலாமா? - Lakh என்பது பிரிட்டிஷ் ஆங்கிலம். ரிசர்வ் வங்கி தனது அறிக்கைகளில் lakh என்பதைத்தான் பயன்படுத்துகிறது. அமெரிக்கர்கள் lac என்று எழுதுவதை இயல்பாகக் கருதுகிறார்கள். அரக்கு என்பதைக் குறிக்கவும் lac என்ற சொல் பயன்படுகிறது.
Million என்பது 10 லட்சத்தைக் குறிக்கும். ஆயிரம் என்ற பொருள் கொண்ட இத்தாலியச் சொல் இது. ஏனோ காலப்போக்கில் இது 1000 ஆயிரம் (அதாவது பத்து லட்சம்) என்பதைக் குறிக்கலாயிற்று. ஆனால் lack என்பது எந்த எண்ணையும் குறிக்கவில்லை. ஏதோ ஒன்றில் குறைபாடு என்பதை இது குறிக்கும். Lack of vitamins, lack of iron nutrient, lack of affection.
He did it wantonly என்பது அவன் வேண்டும் என்றே ஒன்றைச் செய்தான் என்ற பொருளைத் தருகிறது. இதன் உள்ளர்த்தம் என்ன? அந்தச் செயல் நன்மையாகவும் இருக்கலாம், தீமையாகவும் இருக்கலாமா? - இல்லை. தமிழில் கூட ‘வேண்டும் என்றே’ ஒன்றைச் செய்வது என்றால் தீங்கு இழைக்கும் நோக்கத்தோடு செய்யப்படும் என்றுதானே பொருள்? அதே அர்த்தம்தான் ஆங்கிலத்திலும்.
இளைஞர்கள் நடுவே ‘ஃபோமோ’ என்ற புதிய பாதிப்பு ஒன்று இருப்பதாக படித்தேன். அது என்ன? - அது FOMO. அதன் விரிவாக்கம் Fear of Missing Out. பதின்ம வயதினர் இடையே இது அதிகம் புழங்குகிறது. ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளாவிட்டால் சக வயதுத் தோழர்கள் தன்னை ஒதுக்கி விடுவார்களோ என்ற பதற்றம்.
கிரிக்கெட் என்பதையே வெறுக்கும் ஒருவன் FOMO காரணமாக தன் தோழர்களோடு உட்கார்ந்துகொண்டு கிரிக்கெட் போட்டியை ரசிப்பது போல் காட்டிக் கொள்வான். பார்ட்டி ஒன்றில் அனைவரும் கலந்து கொண்டால், அதில் கலந்து கொள்ள ஈடுபாடு இல்லாவிட்டால்கூட, அப்படிச் செய்யவில்லை என்றால் அதற்கு பிறகு தன்னை இவர்கள் எதிலும் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள் என்ற பயம் காரணமாக அந்த பார்ட்டியில் கலந்து கொள்வான். அதாவது பொது வெளியில் தன் சக வயதுடையவர்கள் என்ன செய்வார்களோ, அவற்றை எல்லாம் (தனக்கு விருப்பம் இல்லாமல் கூட) செய்வதன் அடிப்படை FOMO.
Ad hoc payment என்பது என்ன? - Ad hoc என்ற லத்தீன் சொற்களுக்குப் பொருள் 'இந்த நோக்கத்துக்காக’. அதாவது அந்தத் தொகை ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக வழங்கப்படுகிறது. அதைப் பிற காரணங்களுக்குப் பயன்படுத்துவது தவறு. The governor appointed an ad hoc committee to study the project. We will hire more staff on an ad hoc basis.
- கட்டுரையாளர்:‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT