Published : 23 Jul 2024 06:00 AM
Last Updated : 23 Jul 2024 06:00 AM
வெடித்து சீறக்கூடிய டி கொரோனே பொரியாலிஸ் (T CrB) விண்மீன் ஏன் 80 ஆண்டுகளுக்கு ஒருமுறை திரும்ப திரும்ப சீறுகிறது? பாத்திரத்தில் நீரை எடுத்து தட்டு போட்டு மூடி அடுப்பில் வைக்கிறோம். பாத்திரத்தின் உள்ளே வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க நீராவி உருவாகும். தட்டு மூடி உள்ளதால் உருவான நீராவி அடைபட்டு தேங்கும்.
நீர் கொதிக்க கொதிக்க ஒரு கட்டத்தில் நீராவியின் அழுத்தம் கூடி தட்டு மேல் நோக்கி எழும். அந்த கட்டத்தில் உள்ளே தேங்கிய நீராவி புஸ் என வெளியேறும். ஓரளவு தேங்கிய நீராவி வெளியேறியதும் அழுத்தம் குறைந்துவிடும். எனவே தட்டு மறுபடியும் கிழே தாழ்ந்து மூடிவிடும்.
இப்போது ஆவி எதுவும் வெளிவராது. மறுபடி உள்ள நீராவி அழுத்தம் கூடிக்கொண்டே போகும்; மறுபடியும் ஒரு கட்டத்தில் அழுத்தத்தின் வலு தட்டை தூக்கும் அளவுக்கு உயர்ந்ததும் மறுபடி தட்டு மேலே உயரும், ஆவி வெளியேறும், அழுத்தம் குறையும் மறுபடி தட்டு மூடிக்கொள்ளும்.
இதுபோன்ற ஒரு நிகழ்வே T CrB விண்மீன் ஜோடியிலும் நிகழ்கிறது. சிவப்பு ராட்சச விண்மீனின் பொருள் பெருமளவு ஹைட்ரஜனாக இருக்கும். இந்த ஹைட்ரஜன் வெள்ளைக்குள்ள விண்மீனின் மேலே படரும்போது அங்குள்ள மீ ஈர்ப்பு ஆற்றலில் அழுந்தும் பிறகு மீ வெப்பமடையும்.
ஓரளவு பொருள் சேர்ந்ததும் அழுத்தமும் வெப்பமும் எல்லை மீறி சட்டென்று வெள்ளைக்குள்ள விண்மீனின் மேற்பரப்பில் ஹைட்ரஜன் கருப்பிணைவு நிகழும். அதன் காரணமாக ஒளியும் ஆற்றலும் சீறி வெளிப்படும். ஆனால் மேலே படிந்த ஹைட்ரஜன் ஓரளவு தீர்ந்து போனதும் அழுத்தமும் வெப்பமும் குறைந்து போக கருப்பிணைவு வினை நின்று போய்விடும். எனினும் தொடர்ந்து சிவப்பு ராட்சச விண்மீனிலிருந்து பொருளைக் கவர்வதால் திரும்பத் திரும்ப அவ்வப்போது மேற்பரப்பில் கருப்பிணைவு விளைவு ஏற்படும்.
இதுதான் மாறிமாறி சீற்றம் கொள்வது போன்ற தோற்றத்தை நமக்குத் தருகிறது. புலி பதுங்கிதான் பாயும் என்பதுபோல சீற்றம் ஏற்படுவதற்கு முன்னர் சுமார் எட்டு ஆண்டுகள் வரை இதன் பிரகாசம் மெல்ல மங்கும். அதன் பின்னர்தான் சீற்ற நிகழ்வு ஏற்படும். 2015-ல் T CrB பிரகாசம் மங்க தொடங்கியது. தற்போது இதன் பிரகாசம் சற்றே கூடியும் குறைந்தும் மினுமினுக்கத் தொடங்கியுள்ளது. இதுவே சீற்றம் ஏற்படுவதற்கான அறிகுறி என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
- கட்டுரையாளர்: முதுநிலை விஞ்ஞானி, புதுடெல்லி; தொடர்புக்கு: tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT