Published : 20 May 2024 02:15 PM
Last Updated : 20 May 2024 02:15 PM
பத்தாம் வகுப்பு பரிட்சையின் முடிவைக் கண்டு பயந்து போயிருந்தான் தேனப்பன். மகனின் மதிப்பெண்கள் குறைந்து போனதால் தாயின் கண்களிலே கண்ணீர். தந்தைக்கோ பொங்கியது கோபம். அவரது கடுமையான வார்த்தைகள் அம்பாய் பாய்ந்து தேனப்பனின் இதயத்தை கிழித்தது. பதில் எதுவும் சொல்லாமல் மௌனம் சாதித்தான் தேனப்பன்.
அப்பாவின் கோபம் இமயமலைக்கே ஏறியது. அவர் கோபத்தில் தெளித்த வார்த்தைகள் தேனப்பனின் உடம்பில் முள்ளாய் தைத்தது. இதோ பாருடா! நீ படிச்சதெல்லாம் போதும். இந்த அப்பனுக்கு உதவியா நாளையிலிருந்து நம்ம மளிகை கடைக்கு வேலைக்கு வந்துடு என கடுமையுடன் கட்டளையிட்டார் அப்பா.
கணவன் கடைக்கு சென்றதும் மகனை அம்மா விசாலாட்சி கட்டிப்பிடித்து அழுதாள். மகனை திட்டிய கணவனை வசைமாரிப் பொழிந்தாள். ஆனால், மகனின் முகத்திலோ அத்தனை தெளிவு. வேண்டாம்மா! அப்பாவை திட்டாதே! நீ வெளியில் கொட்டும் பாசத்தை அப்பா இதயத்துல பூட்டி வெச்சிருக்கார். என்னை கண்டிக்கவும் தண்டிக்கவும் அவருக்கு உரிமை உண்டு. என்னை நெனச்சு நீ பயப்படாதே! நான் அப்பாவின் பேச்சால எந்த ஒரு தப்பான முடிவுக்கும் வந்துட மாட்டேன்.
அப்படியே நான் பரீட்சையில் தோல்வியை அடைஞ்சிருந்தாலும் கூட அதுக்காக உயிரை போக்கிக்க மாட்டேன். உன் மகன் அந்த அளவுக்கு கோழை இல்ல. கஜினிமுகமதைபோல மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெறுவேன். அப்பா அயராமல் உழைச்சு என்னை பெரிய பள்ளியில படிக்க வெச்சாரு. அவரோட கஷ்டம் எனக்கு புரியுது அதனால நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். நாளையிலிருந்து நம்ம மளிகை கடைக்கு வேலைக்கு போக போறேன். இனி இதில எந்த மாற்றமும் இல்ல என் படிப்புக்கு இன்னையோட முற்றுப்புள்ளி வெச்சுட்டேன் என்று சொன்ன மகனைப் பார்த்து அம்மா அதிர்ந்து போனாள்.
டேய் தம்பி! எப்படியோ பரீட்சையில் பாஸ் செஞ்சுட்ட. ஆனால் குறைந்த மதிப்பெண்களே பெற காரணம்தான் என்ன? என்றாள் அம்மா. நான் படிக்காம போனதுக்கு நீங்களும் அப்பாவும் தான் காரணம் என சொல்லி ஒரு குண்டை தூக்கி போட்டான் தேனப்பன். மகனின் பதிலைக் கேட்டு துடித்துப் போனாள் அம்மா.
ஆமாமா. தினமும் மளிகை கடைய மூடிட்டு வீட்டுக்கு வரும் அப்பா பதட்டத்துல உன்கிட்ட ஏதாவது ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி சண்டை போடுறாரு. பதிலுக்கு நீயும் கத்துற. இந்த மன கவலையில் ராத்திரிபூரா என்னால் படிக்க முடியல. பகல்ல படிப்போம்னு பாத்தா நினைவுகள் பின்னோக்கி நகருது. நீங்க சண்டையில பேசிய வார்த்தைகள் மட்டும்தான் எனக்கு எதிரொலிச்சுக்கிட்டே இருக்கு. இப்படி இருக்கிறப்ப நான் எப்படிம்மா படிப்பேன்? என சொல்லி தேம்பித் தேம்பி அழுதான் தேனப்பன்.
மறுநாள் காலை அப்பாவுடன் கடைக்கு செல்ல தயாரானான் தேனப்பன். அவர்கள் கிளம்பும் நேரம் வீட்டின் முன் ஆட்டோ சத்தம். அதிலிருந்து இறங்கினர் தேனப்பனின் தாத்தாவும் பாட்டியும். மாப்ள! நாங்க இந்த வயசான காலத்துல துணையில்லாம வாழ்ந்துட்டு இருக்கோம். எங்களுக்கு துணையா இருக்க பேரனை எங்க ஊருக்கு கூட்டிட்டு போக வந்திருக்கோம். உங்க அளவுக்கு எங்களால அவனை பெரிய பள்ளியில படிக்க வைக்க முடியலனாலும் எங்க ஊர்ல இருக்கிற நல்ல பள்ளியில படிக்க வைப்போம் என கேட்க அதை மறுக்க முடியாமல் சம்மதித்தார் அப்பா வீராச்சாமி.
மகன் ஓடிப்போய் அம்மாவை கட்டிக் கொண்டான். அவனுக்கு தான் தெரியும் திடீரென தாத்தா பாட்டி எப்படி வந்து இருப்பார்கள் என்று. அவர்களாகவே வந்தார்களா? அம்மாவால் வரவழைக்கப்பட்டார்களா? மகனின் படிப்பு தொடர இது அம்மாவின் யுக்தியோ? எதுவாக இருந்தால் என்ன? எந்த ஊரானாலும், அரசு பள்ளி ஆனாலும் படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் உசந்த பள்ளிதான். இதோ தாத்தா பாட்டியுடன் ஊருக்கு சென்று அமைதியான சூழ்நிலையில் படிக்க தயாரானான் தேனப்பன்.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், ஆவடி, சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment