Last Updated : 14 Mar, 2024 11:50 AM

 

Published : 14 Mar 2024 11:50 AM
Last Updated : 14 Mar 2024 11:50 AM

எங்கெங்கு காணினும் ‘கணித’ சக்தியடா | உலக கணித தினம் - 2024

சிலர் கூறுவதைக் கேட்டால் சிரிப்பாக இருக்கும். 'எனக்கு கணக்குன்னாலே அலர்ஜி. அதனாலதான் பள்ளியிலே கூட கணிதத்தை நான் சிறப்புப் பாடமாக எடுத்துக்கலே. நல்ல வேளையா கணிதத்தின் பிடியிலிருந்து தப்பிச்சுட்டேன்’. தப்பிக்கவே முடியாது என்பதுதான் உண்மை. உலகின் மொழி எது? சந்தேகமில்லாமல் கணிதம்தான். உலகை நாம் சரியாகப் புரிந்து கொள்வதற்கே கணிதம் தேவை.

கணிதம் என்பது ஏதோ பள்ளி வகுப்பறை தொடர்பானது மட்டுமல்ல. நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பதே அதுதான். ஒரு சமூகம் முன்னேறி இருக்கிறதா என்பதை அளவிடுவதற்கு கணிதம் உதவுகிறது. அறிவியல், தொழில்நுட்பம் என்றாலே அங்கு கணிதத்தின் பங்கு வந்துவிடுகிறது. கணிதத்தில் சரியான அஸ்திவாரம் இல்லாவிட்டால் பல சிக்கல்கள் ஏற்படும்.

கணிதம் மற்றும் கணிதம் தொடர்பான விஷயங்களைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும் நிலையை dyscalculia என்பார்கள். மூளை பாதிப்பினால் உண்டாகும் நிலை இது. அப்படிப்பட்டவர்களை கூட கணிதம் முழுமையாகச் சூழ்ந்து கொண்டு தன்னை இன்றியமையாததாக செய்துகொண்டிருக்கிறது.

கணிதத் தொடர்பே இல்லாத ஒரு வாழ்க்கையை சிந்தித்து பாருங்கள். காலையில் எழுந்தவுடன் நாம் காண விரும்புவது கடிகாரத்தை. அதில் எண்கள் இல்லாவிட்டால்? கடிகாரத்தில் எந்த இடத்தில் எந்த எண் இருக்கிறது என்பது நமக்கு பழகிப் போனதால் முட்களின் நிலையைக் கொண்டே சரியான நேரத்தை தெரிந்து கொள்ளலாம் என்றாலும் அந்த எண்களை மனதில் நிச்சயம் கொள்வோம் அல்லவா? வீட்டில் காலண்டர் இருக்காது. பஞ்சாங்கம் இருக்காது.

மருந்துக் கடைக்குப் போனால் மருந்துகள் என்று காலாவதியாகிறது என்பதை அறிய முடியாது. ஒரு மருந்து எவ்வளவு வலிமை (strength) கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை டாக்டரால் எழுதிக் கொடுக்க முடியாது. சொல்லப்போனால் சரியான விகிதத்தில் மட்டுமே உருவாக்கப்பட வேண்டுமென்பதால் மருந்துகளே இருக்காது! பள்ளிக்கு செல்லாத கிராமவாசி என்றால் கூட சில அடிப்படைக் கணிதங்களை அறிந்து வைத்திருப்பார்.

‘தம்பி 21 எண் பேருந்தில் போகணும். வந்தால் சொல்லுப்பா’ என்று கெஞ்சுதலாக வேண்டுகோள் வைக்கும் படிப்பறிவில்லாதவரை எண்ணிப்பாருங்கள். அவர் கூட பேருந்தில் ஏறியதும் நடத்துனருக்கு எண்ணித்தான் கரன்சி நோட்டை அல்லது சில்லறையைக் கொடுப்பார். பாக்கியை தவறாமல் கேட்டு வாங்கிக் கொள்வார்.

கரன்சி நோட்டுகள் இல்லாத காலத்தில் பரிவர்த்தனைகள் செய்யப்படவில்லையா என்ன என்று இடக்காக யாராவது கேட்டால், அப்போதும் ‘ஒரு பசுமாட்டை நான் கொடுத்தால் நான்கு ஆடுகளை நீ கொடுப்பாயா?’ என்பது போன்ற கணிதச் சமன்பாடுகள் இருந்திருக்குமே’ என்று மடக்காக பதில் கூறத் தோன்றுகிறது.

Algorithms எனப்படும் நிரல் நெறிமுறைகள் இல்லை என்றால் செல்போன்கள் இல்லை. கணிதம் இல்லை என்றால் அல்கோரிதம்கள் இல்லை. என்ன, செல்போன்கள் இல்லாத வாழ்க்கைக்குத் தயாரா? கணினிகளும், தொலைக்காட்சியும் கூட கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எண்கள் இல்லாத விளையாட்டுகள் இருக்க முடியாது. ரன்கள், கோல்கள், மீட்டர்கள், கட்டங்கள் என்று எந்த விதத்திலாவது கணிதம் விளையாட்டுகளோடு தொடர்பு கொண்டிருக்கும். பரம பதத்தில் கூட தாயக்கட்டை அல்லது சோழிகளில் எந்த எண் விழுந்திருக்கிறது என்பதைக் கொண்டுதான் உங்கள் காயை நகர்த்த முடியும்.

தர்க்க ரீதியாக சிந்திப்பதற்குக் கூட பல சமயங்களில் கணிதம்தான் கைகொடுக்கிறது. சமன்பாடுகள் மூலம் பல சிக்கலான விஷயங்களை விஞ்ஞானிகள் தெளிய வைக்கிறார்கள். சந்தைகளை சரிபார்த்து வருங்கால பொருளாதாரத்தை வடிவமைப்பதற்கும் கடிதம் அவசியம்.

காலங்காலமாக நமது அடிப்படை விஷயங்களாக கூறப்படுபவை உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வசிப்பிடம் ஆகியவைதான். உணவு தயாரிக்க உணவுப் பொருட்களை எந்த விதத்தில் கலக்க வேண்டும் என்பது அடிப்படை. உடுத்தும் உடைகள் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதிலும் தெளிவு அவசியம். வீடு கட்ட வேண்டும் என்றால் அதற்கான திட்டம் முழுக்க முழுக்க கணிதத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஆக கணிதமில்லாத வாழ்க்கை என்பது கற்காலத்தில் குகைகளில் மனிதன் வாழ்ந்த வாழ்க்கை போல இருக்கும் என்பதுதான் ‘கூட்டிக் கழித்துப் பார்த்தால்’ கிடைக்கும் விடையாக இருக்கிறது!

எனவே வாலன்டைன் தினத்தில் காதலர்களை நினைக்காதவர்களும், ஏப்ரல் முதல் தேதியில் முட்டாள்களை நினைக்காதவர்களும் கூட மார்ச் 14 அன்று கணிதத்தை நினைத்து ராயல் சல்யூட் செய்வதே முறையானது. எத்தனை முறை நன்றியுடன் கணிதத்தை நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதைக் கணக்கிடத் தொடங்கி விட்டீர்களா?

கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x