Published : 29 Aug 2023 04:30 AM
Last Updated : 29 Aug 2023 04:30 AM
சில காலங்கள் காதலித்தவர் பிரிந்ததால், ஏமாற்றியதால், இறந்ததால், குடிப்பது, மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரை மாய்த்துக்கொள்ளத் துணிவது போன்றவற்றைச் செய்பவர்கள் கூறும் காரணம் பிரிவின் வலியை, ஏமாற்றியதை தங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதுதான்.
காதல் தோல்வியால், உலகைவிட்டுச் சென்றவர் இனி திரும்பப்போவதில்லை. ஆனால், தற்சமயம் காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு காதலர் பிரியும் நிலை உருவாகி தவறான முடிவெடுக்க முனைபவர்களுக்கு, அம்முடிவின் தவறை உணர்த்தவும், அம்முடிவால் பெற்றவருக்கு ஏற்படப்போகும் வலிகள், வேதனைகளை உணர்த்துவதற்கான முயற்சியே இந்த கட்டுரை.
குடும்பத்தினரின் வலி: காதல் தோல்வியால் உயிர் துறந்தவரை, பத்து மாதங்கள் சுமந்து பெற்றதாய்க்கும், அவரின் நல்வாழ்விற்காக அரும்பாடுபட்ட தந்தைக்கும், அவரின்உயர்வுக்காக உழைத்த உடன்பிறந்தோருக்கும் உண்டான வலிகளின் துன்பத்தின் அளவைவிட, காதலர் பிரிவின் வலி பெரியதா? என எண்ணிப் பார்க்க வேண்டும். காதலருக்காக உயிரைவிடத் துணிந்தவருக்கு, தன் குடும்பத்தினரின் வலி புரியாததற்கு காரணம், அவ்வலிகளை அனுபவிக்காத வயதில் காதல் மலர்ந்து அழிந்துவிட்டதால் இருக்கலாம்.
குடும்பத்தினரை விட காதலர் எவ்விதத்தில் உயர்ந்தவரென்று சிந்தித்தால், காதலரால் நன்மையடைந்த ஒரு சிலருக்குத் தவிர, பலருக்கு தாங்களும் காதலிக்கப்படுகிறோம் என்ற இனிய உணர்வை ஏற்படுத்த மட்டுமே உதவுவதை உணரலாம். செம்புலப் பெயல் நீர் போல் கலந்த அன்புடை நெஞ்சங்களாகவும், இன்பதுன்பங்களில் பங்கெடுத்தும், பலகாலம் இரண்டற கலந்தும் வாழ்ந்தவொரு இணையர் இறந்தால்கூட அவரின் இணையர் உயிரை விடுவதில்லை. இதை, காதலருக்காக உயிர்விடத் துணிபவர்கள் மனதிலிருத்திக் கொள்ளவேண்டும். யாருக்காகவும் யாரும் உயிரைவிடத் தேவையில்லை என்பதுதான் முக்கிய கருத்து.
எவ்விதத்தில் நியாயம்? - காதலர் இறப்புக்காக உயிர் துறத்தலைக்கூட, அன்பு மிகுதி காரணமென ஒப்புக்கொள்ளலாம். ஆனால்,காதலர் விலகியதற்காக, ஏமாற்றியதற்காக உயிரைவிடத் துணிவது எவ்விதத்தில் நியாயம்? விலகிச் சென்ற காதலர், வாழத்தானே செய்கிறார்? இதைப் புரிவது அவசியம்.
காதலருக்காக உயிரை விடுபவரின்துயரம் அந்த நொடியில் முடிந்துபோகிறது. ஆனால், பெற்றவர்களின் துக்கம் அந்நொடியிலிருந்து இறக்கும் வரை தொடர்கிறது. பிள்ளைகளின் நல்வாழ்விற்காக அயராத உழைத்ததும், பிற்காலத்தில் காப்பாற்றுவார்களென்ற நம்பிக்கையும் வீணாகிப்போகும் போது ஏற்படும் வலியும் வேதனையும் விட, காதலரின் பிரிவால் ஏற்படும் வலி பெரியதா? சீர்தூக்கிப் பாருங்கள்.
பொதுவாக காதலிக்கும் வயது16-30 வயது வரை. இதில் ஏதோவொரு வயதில் தான் காதலர் பிரிவால் உயிரை விடுவது நடக்கிறது. வாழ்க்கை காலம் 80-100 ஆண்டுகள் என்றால், அதில் 60-70 ஆண்டுகளை எவருக்கும் பயனில்லாமல் வீணாக்கி,தங்கள் கனவுகளைக் கைவிட்டு, செய்யவேண்டிய நற்செயல்கள் பலவற்றை முடிக்காமல் செல்லப்போகிறோம் என்பது புரிந்திருந்தால் உயிர்விடுவதை தவிர்த்திருப்பார்கள்.
காதலியுங்கள் தவறில்லை. காதலரின் பிரிவிற்காக உயிர்விடுதல் கோழைத்தனம், முட்டாள் தனம் என்பதை மனதில் ஆழப் பதிய வையுங்கள்.
காத்திருக்கிறது பல அற்புதங்கள்: வாழ்க்கை உங்களுக்காகப் பலஅற்புதங்களை நிகழ்த்தக் காத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்காகவும், உங்கள் மூலம் மற்றவர்களுக்காகவும் பலநற்செயல்கள் நிகழ்வதற்குத் தான்,உங்களின் காதலில் பிரிவு ஏற்படுகிறது என நம்புங்கள்.
வேறு உயர்வான காதல்: ‘’வாழ்க்கை என்பதொரு அடர் மூடுபனி பாதை’’. அப்பாதையில் நம் முன்னே என்ன இருக்கிறதென்பதை வாழ்க்கை வெளிக்காட்டுவதில்லை. மூடுபனியினூடே செல்லச் செல்லத் தான் அடுத்தென்ன இருக்கிறதென்பது தெரியும்.
வாழ்விலும் ஒவ்வொரு நொடியையும் வாழ்ந்து பார்க்கும் போது தான், வாழ்க்கை உங்களுக்கு என்னவெல்லாம் கொடுக்கக் காத்திருக்கிறது என்பது தெரியும். உங்களின் காதலில் பிரிவு ஏற்பட்டாலும்,அது வேறு உயர்வான காதல் கைகூடுவதற்காகவும் இருக்கலாமல்லவா? யாரறிவார்? வாழ்க்கை தரும் ஒவ்வொரு நொடியையும் வாழ்ந்து பாருங்கள். அற்புதங்கள் பல உங்களுக்காக அதனுள் மறைந்து கிடக்கிறது.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், வல்லமை சேர், வேர்களின் கண்ணீர் நூல்களின் ஆசிரியர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment