Published : 14 Aug 2023 04:13 AM
Last Updated : 14 Aug 2023 04:13 AM
செவ்வாய்க் கோள் ஆராய்ச்சிக்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சி 1960களிலேயே தொடங்கிவிட்டது. 2013க்கு முன்புவரை இந்த வகையில் வெற்றி அடைந்திருந்த நாடுகள் ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் கூட்டமைப்பு மட்டுமே. இந்த நிலையில்தான், செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டப் பாதைக்குள் முதல் முயற்சியிலேயே விண்கலத்தை நிலைநிறுத்திய நாடு என்ற பெருமையை 2013இல் இந்தியா பெற்றது.
‘மங்கள்யான்’ விண்கலத்தை ‘செவ்வாய் சுற்றுக்கலன் திட்ட’த்தின் (Mars Orbiter Mission) கீழ் இஸ்ரோ 2013 நவம்பர் 5 அன்று விண்ணில் செலுத்தியது. அந்த விண்கலன் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாகச் சென்றடைந்தது. இந்தத் திட்டத்திற்கு ஆன செலவு 450 கோடி ரூபாய் மட்டுமே. உலகிலேயே செவ்வாய் கோளுக்கு மிகக் குறைந்த செலவில் அனுப்பப்பட்ட விண்கலம் என்கிற பெருமையும் இதற்கு உண்டு.
மங்கள்யானில் அதி நவீன கேமராக்கள், கடந்த 7 ஆண்டுகளாகச் செவ்வாய்க் கோளில் ஏற்படும் சூறாவளி உள்ளிட்ட நிகழ்வுகளை ஒளிப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பிவருகின்றன. மார்ஸ் கலர் கேமரா (Mars Color Camera) மூலம் apoapsis நிலையிலிருந்து, அதாவது 72,000 கி.மீ. தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட இந்த ஒளிப்படங்கள் செவ்வாய் கோளின் வளிமண்டலத்தின் மேகங்கள், தூசு, எதிரொளித்திறன் குறித்த தரவுகளை வழங்குகின்றன. Periapsis நிலையிலிருந்து எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் செவ்வாயின் மேற்பரப்பு பற்றிய செய்திகளை வழங்குகிறது. இந்தியாவின் அறிவியல் திறனை உலகுக்கு அழுத்தந்திருத்தமாக உணர்த்திய திட்டம் இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT