Published : 28 Aug 2017 09:58 AM
Last Updated : 28 Aug 2017 09:58 AM
பீகார் மாநிலம் பாட்னாவில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் சார்பில் நடந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட லாலுவின் ஆதரவாளர்கள் பலர் மெகா கூட்டணிக்கு முதல்வர் நிதிஷ் குமார் துரோகம் செய்துவிட்டதாக குற்றம்சாட்டினர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் ‘பாஜகவை வெளியேற்றுவோம். தேசத்தைக் காப்போம்’ என்ற பெயரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் நேற்று பிரம்மாண்ட கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாட்னாவில் நடந்த இக்கூட்டத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அண்டை மாநிலமான ஜார்க்கண்ட்டில் இருந்தும் ஏராளமானோர் கூட்டத்துக்கு வந்திருந்தனர். பீகாரில், சமீபத்தில் லாலுவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறி முதல்வர் பதவியை ராஜினாமா செய்து பாஜக கூட்டணியில் சேர்ந்து மீண்டும் புதிய அரசின் முதல்வராக நிதிஷ் குமார் பொறுப்பேற்றார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களில் பலர் லாலுவுக்கு ஆதரவாகவும் நிதிஷ் குமாருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர். ‘பீகாரில் மெகா கூட்டணிக்கும் லாலு பிரசாத்துக்கும் நிதிஷ் குமார் துரோகம் செய்துவிட்டார். பாஜகவுடன் சேர்ந்ததன் மூலம் லாலுவையும் அவரது மகன் தேஜஸ்வி யாதவையும் நிதிஷ் குமார் ஏமாற்றிவிட்டார். கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்காக இருவரையும் நிதிஷ் பயன்படுத்திக் கொண்டார்’ என்று ஜெகனாபாத்தில் இருந்து தொண்டர்கள் குழுவுடன் வந்திருந்த சமரேந்திர யாதவ் என்பவர் தெரிவி்த்தார்.
முன்னதாக, நிருபர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், ‘‘இந்த கூட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நிதிஷ் குமாரையும் பாஜகவையும் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுப் பேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT