Last Updated : 30 Nov, 2013 12:00 AM

 

Published : 30 Nov 2013 12:00 AM
Last Updated : 30 Nov 2013 12:00 AM

எல்லோரும் விரும்பும் புதுவை

இந்தியாவின் பாரீஸ் என்றழைக்கப்படும் புதுவையின் சிறப்புகள் ஏராளம். எந்தப் பக்கம் திரும்பிச் சென்றாலும் கடற்கரைச் சாலை, பிரஞ்சுக் கட்டடக் கலையின் அழகியலைத் தாங்கி நிற்கும் கட்டடங்கள், சண்டே மார்க்கெட் என அதன் சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். அதுபோல தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது இங்கு செலவுகள் குறைவு. மேலும் அழகிய கோயில்கள், சித்தர் வாழ்விடங்கள் எனப் பல சிறப்புள்ள இந்த ஊரில் இடம் வாங்க பலருக்கும் பிரியம்தான்.

இடம் குறைவாக இருப்பதால் அதன் மதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. அழகான கடற்கரை நகரில் பல இடங்களும் தற்போது பிளாட்டுகளாக மாறி வருகின்றன. தற்போது ரியல் எஸ்டேட் சந்தை சற்று மந்தமாக இருந்தாலும் சொாத்துகளின் விலை மட்டும் புதுச்சேரியில் குறையவில்லை.

வீடு கட்டத் தேவையான பொருள்கள் அனைத்தும் தமிழகத்தில் இருந்துதான் புதுச்சேரி வருகிறது. கல், மண் தொடங்கி பல பொருள்களையும் இங்கிருந்துதான் தருவிக்கின்றனர்.

அப்ரூவல் லே அவுட் புதுச்சேரியில் குறைவுதான். சின்ன ஊர் என்பதால் தற்போது அடுக்குமாடிக் கட்டடங்கள் அதிகரிக்கத்தொடங்கியுள்ளன. இங்கு 4 மாடி வரை மட்டுமே கட்ட அனுமதியுண்டு. சென்னை, பெங்களூர் போன்று அதிக மாடி கட்ட அனுமதியில்லை. ஏனெனில் சாலை வசதி அந்தளவுக்கு புதுச்சேரி நகரப் பகுதியில் இல்லை. குறிப்பாக 10 மாடி கட்டவேண்டுமானால், 12 ஆயிரம சதுர அடி இடமும், 40 அடி சாலையும் இருக்க வேண்டும். இதற்கு புறவழிச்சாலை பகுதியைத்தான் தேர்வு செய்ய முடியும். நகரப்பகுதியில் கட்டடங்களில் மாடிகளின் எண்ணிக்கையைச் சற்று அதிகரித்துக் கட்ட அரசு அனுமதித்தால் இடநெருக்கடி குறையும்.

தமிழகப் பகுதியும், புதுச்சேரிப் பகுதியும் மாறி மாறி வரும் வகையில் நிலப்பரப்பு இருக்கிறது. ஆனால், தமிழகத்தைவிட புதுச்சேரியில் விலை அதிகம். சொத்து விலை ரூபாயில் பார்த்தால், புதுச்சேரி நகரப் பகுதியில் 2500 தொடங்கி 25000 தாண்டி விற்கிறது. லாஸ்பேட்டையில் 2500- 3000 வரையிலும், ரெட்டியார்பாளையத்தில் 2000 -3000 வரையிலும், வில்லியனூரில்1000ம் முதல் 1500 வரையிலும், முத்தையால்பேட்டில் 2,500ல் இருந்து 3500 வரையிலும், அரியாங்குப்பம், தவளக்குப்பத்தில் 1000 முதல் 1,500 வரையிலும் இருக்கிறது.

விற்பனை இடம் குறைவாகவே இருப்பதால் நிலத்தின் மதிப்பும் உயர்ந்தபடிதான் இருக்கிறது என்கிறார் கட்டுமானத்துறையில் ஈடுபட்டுவரும் ப்ராபர்டி டெவலப்பர்ஸ் சங்கப் பொருளாளர் எழில்.

“தனி வீடு என்ற அமைப்பிலிருந்து இடப்பற்றாக்குறையால் அடுக்குமாடி முறைக்கு தற்போது விருப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 20 லட்சத்திலிருந்து வீடு கிடைக்கிறது. பெரிய தொழிற்சாலைகள் ஏதும் இல்லாததால் அதிக மாசு இல்லாத தூய்மைக்காகவே வீடு வாங்குவதற்காகப் புதுச்சேரியை தேர்வுசெய்யலாம்” என மேலும் அவர் யோசனை தெரிவிக்கிறார்.

புதுச்சேரியைத் தேர்வு செய்வதற்கு இங்கு கிடைக்கும் மருத்துவ வசதி காரணம் எனப் பொறியாளர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

அரசு மருத்துவமனைகள், குழந்தைகள் -மகப்பேறு அரசு மருத்துவமனை, மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை ஆகியவை இங்கு சிறப்பான சேவையாற்றி வருகின்றன. கலாசார ரீதியாகவும் புதுவை வசீகரமான ஊர். அமைதியான மக்கள். தமிழர்கள் மட்டுமில்லாமல் பல்வேறு சமூகத்தினரும் இங்கு வாழ்வதால் புதிய கலாசாரச் சூழல் எல்லோரையும் ஈர்க்கக் கூடியது.

தெற்கு பிரான்ஸை போன்ற வடிவமைப்புடன், அங்கு நிலவும் சீதோஷ்ண நிலையும் இந்நகரை பலரும் விரும்ப முக்கியக் காரணம் என்பதும் ஓர் உண்மை. உள்நாட்டில் ஓர் வெளிநாடுதான் புதுச்சேரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x