Last Updated : 07 Oct, 2013 04:41 PM

 

Published : 07 Oct 2013 04:41 PM
Last Updated : 07 Oct 2013 04:41 PM

கலையின் வலிமை

செவாலியே விருது என்றாலே நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் நினைவுக்கு வருவார். நடனக் கலைக்காக செவாலியே பட்டம் பெற்ற பரத நாட்டியக் கலைஞர் அலர்மேல்வள்ளி. ஃபிரெஞ்ச் அரசாங்கம் சார்பில் அலர்மேல் வள்ளிக்கு இந்த உயர் விருது வழங்கப்பட்டு ஆண்டுகள் நகர்ந்துவிட்டன. பந்தநல்லூர் எனப்படும் பாணியில் பரதக் கலையை வழங்கிவரும் இவர், இந்தியாவிலும் பல நாடுகளிலும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளார். பத்மஸ்ரீ, பத்மபூஷன் எனப் பல விருதுகளைக் குவித்த அலர்மேல்வள்ளி, செப்டம்பர் மாதம் ஒரு நடனக் கவிதைத் தொகுப்பை சென்னை மியூசிக் அகாடமியில் வழங்கினார்.

‘இஸ் தேர் ஸம் வே, ஐ கேன் ரீச் யூ?’ என்ற இந்த நடனத் தொகுப்பு தெலுங்குக் கவிஞர் அன்னமாச்சாரியா எழுதிய கவிதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. பக்திரசமும் கவித்துவமும் சங்கமிக்கும் அன்னமாச்சார்யாவின் ஒவ்வொரு கவிதைக்கும், பிரபல கவிஞர் அருந்ததி சுப்ரமணியம் விளக்கம் கொடுத்தது கூடுதல் சுவாரசியம். அலர்மேல்வள்ளியின் நளினமான உடல் அசைவுகளும் அற்புதமான முத்திரைகளும் எழிலார்ந்த அபிநயங்களும் பேசாமல் பேசிய முகபாவங்களும் அந்த அரங்கில் கலையும் பக்தியும் கலந்த அதிர்வலைகளை எழுப்பின.

கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் அலர்மேல்வள்ளியின் வீட்டில் அவரைச் சந்தித்துப் பேசியபோது, தன் நடனம், நாட்டியப் பயணங்கள், சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

முதலில் அவர் கடந்து வந்த பாதையைப் பார்த்துவிடுவோம். பந்தநல்லூர் சொக்கலிங்கம் பிள்ளை, அவரது மகன் சுப்பராய பிள்ளை அலர்மேல்வள்ளியின் குருமார்கள். அரங்கேற்றம் நிகழ்ந்தது 1966இல். பின் ஃபிரான்ஸ் தியேட்டர் டி லா என்ற இடத்தில் நிகழ்ச்சி.

“பரதம் கற்பது சுலபமல்ல. காலை 5 மணிக்கு எழுந்தால்தான் நாட்டியப் பயிற்சிக்குப் போக முடியும்” என் று தன் நினைவுகளை அசைபோடும் அலர்மேல்வள்ளியிடம் அவர் குரு அடிக்கடி சொல்வாராம்: “மினுக்கைவிட, சரக்கு முக்கியம்.” அலர்மேல்வள்ளியின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட வாசகம் இது. எப்போதும் தன் கலையில் உள்ளார்ந்த வலிமை இருக்க வேண்டும் என்று மெனக்கெடுவதற்கான ஊக்கத்தை இது அளிக்கிறது என்கிறார்.

அரங்கேற்றத்துக்குப் பிறகு விரைவிலேயே பிரான்ஸ் நாட்டின் தியேட்டர் டிலாவில் நிகழ்ச்சி நடந்தது. படிப்பு தடைப்பட்டது. இருப்பினும் பி.ஏ. ஆங்கிலம் முடித்தார்.

ரசிகர்களின் மனதைப் புரிந்துகொள்ள என்ன செய்கிறார்?

“ரசானுபவம் என்ற கண்ணுக்குத் தெரியாத ஒரு நூல் கலைஞர்களையும், ரசிகர்களையும் இணைக்கிறது. அந்தப் பிணை உருவாக்குவதற்குப் படும்பாடு. ஒவ்வொரு அசைவும், ஒவ் வொரு அபிநயமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற உந்துதலால் ஏற்படுவது. வெறும் பொழுதுபோக்காக மட்டுமே நிகழ்ச்சி அமைந்துவிடக் கூடாது.”

வள்ளியின் சமீபத்திய ‘நான் உன்னை எவ்வாறு அடைவேன்?’ என்ற நடனத் தொகுப்பு, திருமலையானும் அலர்மேல்மங்கையும் செய்யும் காதல், ஊடல் சார்ந்த கவிதைகள் இளைஞர்களை கவர்ந்தன.

கவிஞர் அருந்ததி சுப்ரமணியம் காட் ஆன் த இல் என்ற புத்தகத்தை அலர்மேல்வள்ளியிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அது அன்னமாச்சாரியாவின் கவிதைக் தொகுப்பு (பி. நாராயணராவும் டேவிட் ஷூல்மனும் எழுதியது.) அந்தக் கவிதைகள் மனதில் ஐக்கியமானதன் விளைவுதான் ‘இஸ் தேர் ஸம் வே ஐ கேன் ரீச் யூ?’ பதினைந்தாவது நூற்றாண்டின் தெலுங்குப் புலவர் அன்னமாச்சாரியாவின் கவிதைகள் அலர்மேல்மங்கையும் திருவேங்கடவனும் செய்யும் காதல், ஊடலைப் பற்றி விவரிக்கின்றன. கடைசியில் அலர்மேல்மங்கை திருவேங்கடவனின் காதலில் பரவசமடைகிறார். இது ஒரு பக்தையின் யாத்திரை எனக்கூடச் சொல்லலாம்.

அலர்மேல்வள்ளிக்கு சங்கத் தமிழ் மீது தீராத காதல். எனவே, ‘நான் உன்னை எவ்வாறு அடைவேன் ?’ தொகுப்பில் முதல் பாடலில் ஒரு சங்கத்தமிழ் பாடலையும் சேர்த்தார். ‘தீயினுள் தெரல் நீ’ என்னும் பரிபாடல் அழகாக எடுப்பட்டது. அலர்மேல்வள்ளியின் தாய், தாத்தா போன்றோர் இலக்கியச் சுவையை ஊட்டி வளர்த்ததால் அவர் நடனத்தில் சங்கத்தமிழ் பலமுறை அரங்கேறியுள்ளது.

ஐரோப்பாவின் பொற்காலத்தில் அங்கு சென்றதையும், ரஷ்யா போல்ஷாய் தியேட்டரில் ஆடியதும் மறக்க முடியாத அனுபவங்கள் என்கிறார் இந்த நடனமணி. இவர் ஐரோப்பாவில் பல அரங்கங்களிலும் ஆடிப் பெயர் பெற்றுள்ளார்.

அலர்மேல்வள்ளியின் நளினமான உடல் அசைவுகளும் அற்புதமான முத்திரைகளும் எழிலார்ந்த அபிநயங்களும் அரங்கில் கலையும் பக்தியும் கலந்த அதிர்வலைகளை எழுப்பின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x