Published : 13 Mar 2014 07:27 PM
Last Updated : 13 Mar 2014 07:27 PM
# ஓசூரில் உள்ள தொழிற்சாலைகளில் குண்டூசி முதல் குட்டி விமானம் வரை தயாரிக்கப்படுகின்றன. இங்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய, சிறிய தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளாலும், மின்வெட்டு காரணமாகவும் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துவிட்டனர்.
# கெலவரப்பள்ளி அணையை, கால்வாய் மூலமாக சூளகிரி, உத்தனப்பள்ளி கிராமங்களில் உள்ள ஏரிகளுடன் இணைக்க வேண்டும் என்பது அந்தப் பகுதி மக்களின் கோரிக்கை. இதுவும் நிறைவேற்றப்படவில்லை.
# கிருஷ்ணகிரி நகரில் உள்ள சின்ன ஏரியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஏரியின் மீதமுள்ள பகுதி ஆக்கிரமிப்பிலும் பராமரிப்பு இல்லாமலும் காணப்படுகிறது. இந்தப் பகுதி ஏரியைத் தூர்வாரி, நீர் ஆதாரம் ஏற்படுத்த வேண்டும்.
# கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை - திண்டிவனம் - புதுச்சேரி இரு வழிப்பாதை தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், தொகுதி மக்களின் நீண்ட நாள் கனவு. எம்.பி. முயற்சியால் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்து பணிகளும் நடந்தன. ஆனால், மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை என்று கூறி, சில மாதங்களுக்கு முன்பு பணிகளை நிறுத்திவிட்டனர். இதை மீண்டும் தொடங்க எம்.பி. எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிறார்கள் தொகுதி மக்கள்.
# ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கிருஷ்ணகிரியில் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. தற்போது கிருஷ்ணகிரி, ஓசூர் நகரின் சில பகுதிகளுக்கு மட்டுமே அந்தத் திட்டத்திலிருந்து காவிரிக் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, தளி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்குக் காவிரிக் குடிநீர் விநியோகம் செய்யப்படுவது இல்லை.
# கிருஷ்ணகிரியில் 40 ஹெக்டேர் பரப்பளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மாம்பழ ஏற்றுமதி மண்டலம் அமைக்க வேண்டும். இங்கு புளி மற்றும் மலர் விளைச்சலும் அதிகம். அவற்றுக்கும் ஏற்றுமதி மண்டலம் அமைக்க வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.
# தமிழகத்திலேயே நான்கு வழிச்சாலைகள் சிறப்பாக இருப்பது கிருஷ்ணகிரியில்தான். ஆனால், நகரத்துக்குள்ளும் கிராமங்களிலும் சாலை வசதிகள் சுமார்தான் என்கிறார்கள் மக்கள். போக்குவரத்து வசதிகளும் போதுமான அளவுக்கு இல்லை.
# நாம் காவிரித் தண்ணீரைக் கேட்கிறோம். ஆனால், கர்நாடகாவோ கழிவு நீரை நமக்கு அளிக்கிறது. பெங்களூரு - ஓசூர் நகர எல்லையான கொடியாளம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் பெங்களூரு நகரத்தின் மொத்தக் கழிவுகளும் கலக்கின்றன. அந்தக் கழிவு நீர் அங்கிருந்து கெலவரப்பள்ளி அணையிலும், அங்கிருந்து கிருஷ்ணகிரி அணையிலும் கலக்கிறது. இதனால், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் பிரச்சினைக்கு இதுவரை யாருமே தீர்வு காணாததுதான் வேதனை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT