Published : 24 Nov 2013 12:00 AM
Last Updated : 24 Nov 2013 12:00 AM
பண்ருட்டி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பலாப் பழமும், முந்திரிப் பருப்பும்தான். அந்த அளவுக்கு உலக அளவில் பிரசித்தி பெற்றவை பண்ருட்டி பலாவும், முந்திரியும். மேல்வர்க்கத்தினர் விரும்பி உண்ணும் உணவாகக் கருதப்படும் முந்திரி, கிராமப்புறத்தில் படிப்பறிவு இல்லாத ஏழை எளிய பெண்களின் தொழில்நுணுக்கத்தின் மூலமாக உலகை வலம்வருகிறது. இந்தத் தொழிலில் முழுமூச்சாக ஈடுபட்டாலும் தினக்கூலிகளாக அடிமை வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறோமே தவிர, முன்னேற்றம் காணமுடியவில்லை என்கின்றனர் பண்ருட்டி கிராமப்புறப் பெண்கள்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் சமார் 40 ஆயிரம் ஏக்கரில் முந்திரி பயிரிடப்பட்டு வந்தது. ஆண்டுக்கு சராசரியாக 10 ஆயிரம் டன் வரை முந்திரிப் பருப்பை மகசூலாக ஈட்டிவந்தனர். இவை 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை. 2011-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி வீசிய ‘தானே’ புயல் முந்திரி விவசாயிகள் வாழ்வையும் புரட்டிப் போட்டுவிட்டது.
பெண்களின் கடும் உழைப்பு
பண்ருட்டியில் விளையும் முந்திரிகளை மகசூல் செய்வது வரைதான் ஆண்களின் பங்கு. அதன் பின்னர், முந்திரிக்கொட்டையை உடைத்து, பருப்பை, பதப்படுத்தி, தரம் பிரித்து பாக்கெட் செய்து, சந்தைக்குக் கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளில் கைதேர்ந்தவர்கள் பண்ருட்டி கிராமப்புறப் பெண்கள்.
பண்ருட்டி மட்டுமல்ல வெளிநாடுகள், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் விளையும் முந்திரிகளையும் சந்தைக்குத் தயார் செய்வதற்கு பண்ருட்டி பெண்களைவிட்டால் வேறு ஆளில்லை. இவர்களிடம் இருக்கும் தொழில்நுட்பமே இதற்குக் காரணம்.
இந்தப் பகுதியைச் சேர்ந்த 90 சதவீதப் பெண்கள் குடிசைத் தொழிலாக செய்துவருகின்றனர். தொழில் நுணுக்கத்தைக் கற்றுக்கொண்ட இவர்கள், நல்ல கல்வி பின்புலம் இல்லாததால் தினக் கூலிகளாகவே இருந்துவருகின்றனர்.
கடந்த இரு ஆண்டுகளாக விளைச்சல் இல்லாததால் வருமானத்துக்குக் கஷ்டப்பட்டனர்.
விவசாயிகள் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து கமிஷன் அடிப்படையில் முந்திரிக் கொட்டைகளை பெற்று, உடைத்து பதப்படுத்தி, தரம் பிரிக்கும் பணியை செய்துவருவதால் முந்திரி தொழிலாளர்கள் தற்போது அரை வயிற்றுக் கஞ்சியாவது குடிக்க முடிகிறது
என வரிசாங்குப்பத்தைச் அஞ்சம்மாள் தெரிவித்தார்.
பயிற்சி மையம் தேவை
இது தொடர்பாக முந்திரி ஏற்றுமதி மேம்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் கூறியதாவது:
ஆண்டுக்கு 10 ஆயிரம் டன்னுக்கு குறையாமல் உற்பத்தி செய்து 70 சதவீதம் ஏற்றுமதி செய்கிறோம். இதில் பெரும்பாலும் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதப்படுத்துதல் மற்றும் தரம் பிரித்தலில் இவர்களுக்கு ஈடாக எவரும் இல்லை என்பதால், இந்தப் பகுதியில் பயிற்சி மையம் அமைத்து பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கவேண்டும். அதன் மூலம் இந்தக் கிராமப் பெண்களுக்கு போதிய வெளி அனுபவம் கிடைக்க வாய்ப்புண்டு என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT