Published : 17 Dec 2013 12:00 AM
Last Updated : 17 Dec 2013 12:00 AM
எங்கள் வீட்டிற்கு முன்புறமுள்ள புங்கை மரத்துக்கு ஆந்தை ஜோடி ஒன்று வர ஆரம்பித்துள்ளது. மாலை இருள் கவிழும் நேரத்தில் அவை குரல் கொடுக்கத் தொடங்கும். பண்டிட் ஹரிபிரசாத் செளராஸியா கச்சேரி ஆரம்பிக்கும் முன் புல்லாங்குழலை ஊதிஊதிப் பார்ப்பது போன்ற மனதைக் கவரும் ஒலி. டார்ச் ஒளியைப் பொருட்படுத்தாமல் இவை மாறிமாறிக் குரலெழுப்பும் அழகை, நாங்கள் அருகிலிருந்து பார்க்க முடிகின்றது. நம் நாட்டிலுள்ள ஆந்தை வகைகளில் மிகச் சிறியது இது (Scops owl), புல்புல் அளவுதானிருக்கும்.
சாதாரணமாகக் கிராமங்களருகே காணக்கூடிய, மரப்பொந்துகளில் வாழும் சிறிய புள்ளி ஆந்தையைப் போல் முப்பது வகை ஆந்தைகள் நம் நாட்டில் இருக்கின்றன. இரவில் சஞ்சரிக்கும் பறவையாதலால், மக்கள் இவற்றைப் போற்றுவதில்லை. கவிஞர்கள் பாடிச் சிறப்பிப்பது இல்லை. ஆனால் கூர்ந்து கவனிப்பவர்களை அவை ஈர்த்துவிடும்.
எல்லா ஆந்தைகளுமே இரவில் நடமாடும் வேட்டையாடிகள். மற்ற பறவைகளைப் போலல்லாமல் ஆந்தையின் இரு கண்களும் மனிதர்களின் கண்களைப் போல முன்புறம் நோக்கி அமைந்திருக்கின்றன. ஆந்தையால் தன் தலையை முழுவதுமாகப் பின்புறம் திருப்ப முடியும். சக்தி வாய்ந்த செவிகளின் மூலம், ஒலி வரும் தூரத்தை வைத்தே இரை இருக்கும் இடத்தைத் துல்லியமாகக் கணிக்க இப்பறவையால் முடியும். குறைந்த வெளிச்சத்திலும் பார்க்கக்கூடிய பார்வைத் திறன், மெல்லிய இறகுகள் புசுபுசுவென்று நிறைந்திருப்பதால் ஓசையின்றிப் பறக்கக்கூடிய ஆற்றல், கூரிய, வலிமையான நகங்கள், வளைந்த கூர்மையான அலகு, ஆகியவற்றைக் கொண்டு ஆந்தைகள் திறமைமிக்க இரைகொல்லிகளாக இயங்குகின்றன. இந்த இரவாடிப் பறவையின் வலிமையைத் திருவள்ளுவர் சுட்டிக்காட்டியுள்ளார்
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. (481)
முதுமலை போன்ற காடுகளில் வாழும் காட்டாந்தை, முயலை எளிதாக அடித்து உண்ணும். மாலை வேளைகளில் மரங்களில் அடையவரும் மயிலைக்கூடக் கொல்லும் வலுவுடையது இந்த ஆந்தை. நீர்நிலைகளருகே வசிக்கும் இன்னொரு வகை ஆந்தை மீன், தவளை, நண்டுகளைத் தனது கால்களால் பிடித்து இரையாக்கி உயிர் வாழ்கின்றது. பயிர்த் தோட்டங்கள், வயல்களருகே இருக்கும் வெண்ணாந்தைகளுக்கு (கூகை) அதிகமாக இரையாவது எலிகள்தான்.
நம் நாட்டில் உணவு தானியங்களைச் சேதம் செய்வதில் முதலிடம் வகிக்கும் எலிகளைக் கொன்று, இந்த ஆந்தைகள் விவசாயிகளுக்குப் பெரும் உதவி செய்கின்றன. உலகின் பல இடங்களில் தோட்டங்களில் வெண்ணாந்தைகளை ஈர்க்கச் சிறிய மரப்பெட்டிகளை மரத்தில் கட்டி விடுகிறார்கள். இனப்பெருக்கக் காலத்தில் ஓர் ஆந்தை ஒரே இரவில் ஐந்தாறு எலிகளைக் கொன்றுவிடும்.
இன்று ஆந்தைகளின் எண்ணிக்கை குறையும் ஆபத்து வந்திருக்கின்றது. மாந்த்ரீக சடங்குகளில் ஈடுபடுத்தப்படுவதற்காகவும் பாரம்பரிய மருத்துவத்துக்காகவும் பல்வேறு இன ஆந்தைகள் ஆயிரக்கணக்கில் பிடிக்கப்பட்டுக் கொல்லப்படுவதை பற்றி அறிய முடிகிறது. செல்வத்தின் கடவுளான லக்ஷ்மியின் வாகனம் என்றாலும்கூட, ஆந்தை என்றதுமே அச்சமும் அருவருப்புமே மக்கள் மனதில் உருவாகிறது. மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் பேய், பிசாசுகளுடன் தொடர்புபடுத்தி இவை வெறுக்கப்படுகின்றன.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள பறவை ஆர்வலரான என் நண்பர் ஒருவர், அடுத்த வீட்டு மாடியில் உள்ள ஒரு பொந்தில் வெண்ணாந்தை ஒன்று குடியிருப்பதை ஜன்னல் வழியாக எனக்குக் காட்டினார். அது அங்கிருப்பது அந்த வீட்டுக்காரருக்குத் தெரிந்துவிட்டால் விரட்டிவிடுவாரோ என்று அஞ்சினார்.
2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெதர்லாந்தில் ஆந்தைகளைப் பாதுகாக்க நடத்தப்பட்ட பன்னாட்டு மாநாடு ஒன்று, இந்தப் பறவைகளின் எண்ணிக்கை உலக அளவில் குறைந்துவருவதைப் பதிவு செய்தது. காட்டுயிர் சார்ந்த கள்ள வணிகத்தைக் கண்காணிக்க, பன்னாட்டளவில் இயங்கி வரும் TRAFFIC என்ற அமைப்பு இந்தியாவில் நடத்திய ஒரு மதிப்பாய்வின்படி, ஆயிரக்கணக்கான ஆந்தைகள் இன்றும் விற்பனைக்காகப் பிடிக்கப்படுகின்றன. பாரம்பரியமாகக் காட்டுயிர்களைப் பிடித்து வாழ்ந்த மக்கள் குழு இந்த வணிகத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலங்களில் இந்தப் பழக்கம் அதிகம் நிலவுகிறது. இங்கு நடக்கும் பல கிராமத்துச் சந்தைகளில் ஆந்தை வியாபாரம் நடக்கிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது. சில இடங்களில் இவை பலியாகவும் கொடுக்கப்படுகின்றன. வேறு சில இடங்களில் பில்லி சூனியம் போன்ற மாந்த்ரீக சடங்குகளில் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டு மருத்துவத்துக்காகவும் ஆந்தைகள் கொல்லப்படுகின்றன. ஆந்தைக் கூடுகளைக் கண்டுபிடித்து, குஞ்சுகளைப் பிடித்துவிடுகிறார்கள். அல்லது கீழே தரையில் கிடக்கும் எச்சத்தின் மூலம் ஆந்தை அடிக்கடி வந்தமரும் கிளையை அறிந்து, அதில் ஃபெவிகால் போன்ற பசைகளைத் தடவி இவற்றை எளிதாகப் பிடித்து விடுகிறார்கள். அதிகமாகப் பிடிபடுபவை புள்ளி ஆந்தைகளும் வெண்ணாந்தைகளும்தான். ஆனால் அதிக விலைக்குப் போவது உருவில் பெரிய கோட்டான். ரூபாய் ஐந்தாயிரம்வரை போகிறது என்கின்றனர் வனத்துறையினர். வீட்டில் குடியிருப்பவரை காலி செய்யக் கால்கள், தேர்தலில் வெற்றி பெறத் தலை, எதிர்காலத்தைக் கணிக்க ஈரல், வேகமாகப் பயணிக்க எலும்புகள் என ஆந்தையின் ஒவ்வொரு உடற்பாகமும் சடங்குகளில் பயன்படுத்தப்படுகின்றன.
சரி, எப்படித்தான் ஆந்தையைப் பாதுகாக்க முடியும்? முதலில் இந்தப் பறவையினம் பற்றிய அச்சம், ஆதாரமற்ற தப்பெண்ணங்கள் ஆகியவற்றைப் பொதுமக்களிடம் இருந்து அகற்ற வேண்டும். காட்டுயிர் பற்றிய அறிவு வளர வேண்டும். எல்லா வகை ஆந்தைகளும் காட்டுயிர் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டவை. அவற்றைப் பிடிப்பதோ கூண்டில் அடைத்து வைத்திருப்பதோ சட்டத்துக்குப் புறம்பானது. சுற்றுச்சூழலைச் சமநிலையில் வைத்திருப்பதற்கும், வேளாண்மை, தானியப் பாதுகாப்பிலும் அவை முக்கியப் பங்காற்றுகின்றன. அது மட்டுமல்ல; மாலை நேரத்தில் வீட்டருகே வந்து உங்கள் வாழ்க்கைக்கும் அவை செறிவூட்டக் கூடும்.
சு. தியடோர் பாஸ்கரன் - தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT