Last Updated : 26 Nov, 2013 12:00 AM

 

Published : 26 Nov 2013 12:00 AM
Last Updated : 26 Nov 2013 12:00 AM

அன்று குழந்தைத் தொழிலாளி... இன்று பள்ளி தலைமை ஆசிரியை!

அண்மையில் சென்னையில் நடந்த குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் ஏ.ராஜேஸ்வரி. இவரது தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அவரது தற்போதைய முன்னேற்றம் ஆகியவற்றுக்காக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அவரைப் பாராட்டி கெளரவித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஒன்றியம் ஓடக்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றுகிறார் ராஜேஸ்வரி. சாதாரண தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு ஏன் இந்த கௌரவம், பாராட்டு? என கேட்போருக்கு இவரது கடந்த காலம் குறித்து தெரிந்தால், முன்னுதாரணமான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் ராஜேஸ்வரி என்பது புரியும்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்தான் இவரது சொந்த ஊர். ராஜேஸ்வரியின் இளமைப் பருவம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கவில்லை. அதைப் பற்றி சொல்கிறார்..

ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஆறாம் வகுப்புக்குச் சென்றேன். அந்த நேரத்தில் வீட்டில் ரொம்ப வறுமை. அதனால் படிப்பைத் தொடர முடியவில்லை. குடும்பத்தாருடன் சேர்ந்து தீப்பெட்டிகளுக்கு லேபிள் ஒட்டும் வேலையை நானும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்புறம் படிப்பே மறந்துபோய்விட்டது.தீப்பெட்டி ஆலையில் முழுநேர தொழிலாளியாகிவிட்டேன்.

அந்த நேரத்தில் குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், எனது பெற்றோரை அணுகினர். படிப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தினர். அதனால் மனம் மாறிய. எனது பெற்றோர், குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளிக்கு என்னை அனுப்பி வைத்தனர். 1989 முதல் 1991-ம் ஆண்டு வரை சிறப்புப் பள்ளியில் பயின்றேன். அதன்பிறகு வழக்கமானப் பள்ளியில் என்னை 6-ம் வகுப்பு சேர்த்தனர். ஏற்கெனவே என்னோடு 5-ம் வகுப்பு படித்தவர்கள், அப்போது 10-ம் வகுப்புக்குச் சென்றுவிட்டார்கள். அந்த வயதில் 6-ம் வகுப்பு என்பது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது.

விடுமுறை நாள்களில் எனது வகுப்புத் தோழர்கள் எல்லாம் தங்கள் பாட்டி வீடு, உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். ஆனால் நான் மட்டும் தீப்பெட்டி ஆலைக்குச் செல்வேன். எனது படிப்புச் செலவுகளை ஈடுகட்ட வேலைக்கு செல்வது கட்டாயமாக இருந்தது. இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி படித்ததால் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர முடிந்தது. அதன் பின் இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். பதவி உயர்வு பெற்று தற்போது தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன்".

நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் ராஜேஸ்வரி. வாழ்க்கை, லட்சியம் என்று ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டால், “பள்ளியில் இடையில் நிற்கும் குழந்தைகளுக்கெல்லாம் எனது வாழ்க்கை அனுபவங்களையே முன்னுதாரணமாகக் கூறி கல்வியின் அவசியத்தை உணர்த்த வேண்டும். இதற்காக சிவகாசி செல்லும்போதெல்லாம் குழந்தைத் தொழிலாளர்களுக்காக நடைபெறும் பள்ளிகளுக்குச் சென்று எனது அனுபவங்கள் பற்றி மாணவர்களுடன் பேசி வருகிறேன்” என்றார் ராஜேஸ்வரி.

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்ட மாநில ஆலோசகர் யோ.ஜெயப்பிரகாஷ் கூறுகையில், “இந்தியாவிலேயே முதல்முறையாக சிவகாசியில்தான் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின்கீழ் 1987-ம் ஆண்டு சிறப்புப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அந்தப் பள்ளிகள் அளித்த பலனை இப்போது ராஜேஸ்வரி போன்றவர்கள் மூலம் பார்க்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x