Last Updated : 20 Aug, 2016 02:37 PM

 

Published : 20 Aug 2016 02:37 PM
Last Updated : 20 Aug 2016 02:37 PM

யூடியூப் பகிர்வு: ஒமரானுக்காக கண்ணீருடன் செய்தி வாசிப்பாளர் கேட் போல்டன்..!

கழுத்தறுப்புகளும், கார் குண்டுகளும், தற்கொலைப்படைகளும் மனிதர்களால்தான் நடத்தப்படுகிறது. சக மனிதருக்கு எதிராகவே. அதே உலகில்தான் முன்பின் பார்த்திராத ஒருவருக்காக கண்ணீர் சிந்தும் சிலரும் இருக்கின்றனர் 'மனித' சாட்சியாக.

ஓமரான் தாக்னிஷ் என்ற 5 வயது சிரிய நாட்டுச் சிறுவன் போரின் கோர முகத்தை தன் முகத்தில் தரித்திருக்கிறான்.

அவனுக்காக அழாத மனம் பயங்கரவாதத்துக்கு துணிந்ததாக மட்டுமே இருக்கும். அதனால்தான் ஒம்ரான் பற்றிய செய்தியை வெடித்து அழுது வாசித்திருக்கிறார் இந்தச் செய்தியாளர்.

சிஎன்என் செய்தியாளர் கேட் போல்டன். அன்றைய பிரைம் டைம் செய்தியை வாசித்துக் கொண்டிருந்தார். செய்தி வரிசையில் சிரிய நாட்டின் அலெப்போ நகரில் நடந்த குண்டுவெடிப்பு குறித்தானது அது. அவர் செய்தியை வாசிக்க கேமரா மங்கிய வெளிச்சத்தில் நடைபெற்ற அந்த மீட்புப் பணிகளை காட்டிக் கொண்டிருந்தது. திடீரென பேன் ஆன கேமராவில் ஒருவர் கையில் குழந்தையை தாங்கியபடி கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டே முன்னேறுகிறார். ஆம்புலன்ஸ் வாகனத்துக்குள் இருந்த ஆரஞ்சி இருக்கையில் ரத்தக் காயங்களுடனும், புழுதியுடனும் ஒம்ரான்.

(கீழே ஸ்காரிலிங்கில் ஓடுகிறது 'ஒரு குண்டு, ஒரு சிறுவன், போரும் அதிலிருந்து மீளும் மிரட்சியும்')

அப்போது கேட் போல்டன் பேசியது, "அவனுக்காக நாம் அழுகிறோம். ஆனால் அவன் ஒருமுறைகூட அழவில்லை. அவன் அதிர்ச்சியில் இருக்கிறான். திகைத்துப்போய் இருக்கிறான். அவன் வீட்டுக்குள் இருந்தபோது வீசப்பட்ட குண்டுகளால் அதிர்ந்தான்... இப்போது போரின் குழப்ப விளைவுகளால் அதிர்ந்து போயிருக்கிறான்" (அழுகையும் வார்த்தையும் கலவையாக வெளிப்படுகிறது) தொடர்ந்து பேசுகிறார்.. "இவன் ஒமரான். இப்போது உயிருடன் இருக்கிறான். இந்தச் செய்தியைத்தான் நான் உங்களிடம் சொல்ல விழைகிறேன்"

மனித நேயம் ஓரளவேனும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை உணர்த்தும் கேட் போல்டின் செய்தி வாசிப்பு அடங்கிய இந்த வீடியோவை மனசாட்சியுள்ளவர்கள் மட்டுமே பார்க்கவும்.