Published : 19 Dec 2013 12:26 PM
Last Updated : 19 Dec 2013 12:26 PM

சவாலான படிப்பு கம்பெனி செகரட்டரிஷிப்

இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செகரட்டரிஸ் ஆஃப் இந்தியா மூலம் கம்பெனி செகரட்டரிஷிப் தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 2 முடித்தவுடன் கம்பெனி செகரட்டரி ஷிப் படிக்க விரும்புபவர்கள், பவுண்டேஷன் புரோகிராம், எக்ஸிகியூடிவ் புரோகிராம், புரஃபசனல் புரோகிராம் ஆகிய மூன்று தேர்வுகளை எழுத வேண்டும். மிகப்பெரும் சவாலான பதவியாக விளங்கும் கம்பெனி செகரட்டரிஷிப் படிப்புக்கு ஷேர் மார்க்கெட், சட்ட விதிகள், திட்டமிடுதல், சமயோசித புத்தி, மூலதன முதலீட்டை கையாளும் திறன், ஆங்கில மொழி, எழுத்துத் திறன் உள்ளிட்ட விஷயங்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

ஐந்து கோடி ரூபாய் பங்கு முதலீட்டுடன் இயங்கும் அனைத்து தனியார் மற்றும் பொது நிறுவனங்களில், கம்பெனி செகரட்டரிஷிப் பணியிடம் இருக்க வேண்டும் என்பது விதி. இதனால், இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பெரிய நிறுவனங்களில் ஏராளமான பணியிட வாய்ப்புக் காத்திருக்கிறது. பி.காம்., பி.பி.ஏ., மட்டுமின்றி கணிதம், அறிவியல் எடுத்து படித்த மாணவர்களும், இந்தப் படிப்பைப் படிக்கலாம். ஆங்கிலம், ஹிந்தி மொழியில் மட்டுமே குறிப்பிட்ட பெரு நகரங்களில் தேர்வு நடத்தப்படும்.

பவுண்டேஷன் புரோகிராம் நான்கு தாள்களைக் கொண்டது. இரண்டு பிரிவாக தேர்வு நடத்தப்படும். எக்ஸிகியூடிவ் புரோகிராம் தேர்வு மொத்தம் ஏழு தாள்களைக் கொண்டது. இரண்டு பிரிவாக தேர்வு நடத்தப்படும். திறமை உள்ளவர்கள் ஒரே நேரத்திலும் எழுதலாம். புரஃபசனல் புரோகிராம் தேர்வுக்கு மொத்தம் ஒன்பது தாள்கள்.

இதில் ஐந்து தாள்கள் கம்பெனிச் சட்டம், தொழிலாளர் சட்டம், பொதுச் சட்டம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை கொண்டது. 3 பிரிவாக எழுத வேண்டும். இதில் ஒரு தாள், விருப்பப் பாடப்பிரிவு.

புரஃபசனல் புரோகிராம் தேர்வு, கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். ஒவ்வொரு தாளிலும் 100க்கு 40 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி. ஆனால், அனைத்து பாடங்களில் எடுத்த கூட்டு மதிப்பெண் சராசரி 50 சதவீதம் இருக்க வேண்டும்.

பவுண்டேஷன் புரோகிராம் படிக்க ரூ.4,500, எக்சிகியூடிவ் புரோகிராம் பயில ரூ.9 ஆயிரம், புரஃபசனல் புரோகிராமுக்கு ரூ.12 ஆயிரம் கல்விக் கட்டணமாகும். தேர்வு எழுதி முடித்தவர்கள், கம்பெனி செகரட்டரிஷிப்பிடம் 15 மாதங்களும் கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்ட தனியார் அல்லது பொது நிறுவனங்களில் இரண்டு முறை 15 நாட்களும் பயிற்சி பெற வேண்டும். கவுன்சில் பரிந்துரைக்கும் நிறுவனங்களில் 15 நாள் மேனேஜ்மென்ட் ஓரியண்டல் ஸ்கில் பயிற்சியும் எடுக்க வேண்டும்.

கம்பெனி செகரட்டரிஷிப் முடித்தவர்களை கார்ப்பரேட் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பத் துறை, ஷேர் மார்க்கெட், தொழில் கூடங்கள் ரத்தனக் கம்பளம் விரித்து வரவேற்கக் காத்திருக்கின்றன. சுயமாகவும் பிராக்டிஸ் செய்து வருமானம் ஈட்டலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x