Published : 29 Sep 2013 06:56 PM
Last Updated : 29 Sep 2013 06:56 PM

மன்மோகன் சிங்கை அவமதித்தாரா நவாஸ் ஷெரீப்?

பிரதமர் மன்மோகன் சிங்கை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் 'கிராமத்துப் பெண்' என ஒப்பிட்டுக் கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸுக்கும் மோடிக்கும் கருத்து மோதல்களும் வலுத்துள்ளது.



அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு அதிபர் ஒபாமாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பாகிஸ்தான் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்துக்கு உதவிவருவதாக அவரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமரின் இந்த அணுகுமுறை குறித்து நவாஸ் ஷெரீப் தன்னிடம் பேசியதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஹமித் மிர் தகவல் ஒன்றை வெளியிட்டார். அதில், கிராமத்துப் பெண்ணைப் போல மன்மோகன் சிங் நடந்துகொள்வதாக, நவாஸ் ஷெரீப் கூறியதாகக் குறிப்பிடிருந்தார்.

இந்த விவகாரம், ட்விட்டரில் இணையவாசிகளால் பெரிய அளவில் பேசப்பட்டது. இதனால், சர்ச்சை வலுக்க ஆரம்பித்தது.

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில், இந்த விவகாரத்தைக் கையிலெடுத்த அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி, இந்திய நாட்டின் பிரதமரை பாகிஸ்தான் பிரதமர் அவமானப்படுத்திவிட்டதாகவும், இதைத் தாங்கிக்கொள்ள முடியாது என்றும் ஆவேசமாகப் பேசினார். இதனால், இந்த சர்ச்சை மேலும் வலுவானது.

அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒரு விளக்கத்தை அளித்தார். அதில், நவாஸ் ஷெரீப் ஒருபோதும் மன்மோகன் சிங்கை அவமானப்படுத்தும் வகையில் பேசவில்லை. கிராமத்துப் பெண் போல இன்னொருவரிடம் புகார் அளித்திருக்கிறார் என்று ஆஃப் தி ரெக்கார்டாகவே கூறினார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தேவையற்ற ஒரு விஷயத்தைக் கையிலெடுத்துக்கொண்டு, பிரதமர் மன்மோகன் சிங்கை மோடி அவமானப்படுத்திவிட்டார் என்று காங்கிரஸ் காட்டமாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜய் மாக்கான் கூறும்போது, "பாகிஸ்தான் பத்திரிகையாளரை மேற்கோள்காட்டி மோடி பேசியிருக்கிறார். தன்னை தேசியவாதி என்று அறிவித்துக்கொள்ளும் அவர், இந்திய பத்திரிகையாளர்கள் சொல்வதைக் கேட்காமல், பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் சொல்வதை நம்புகிறார்.

முன்னதாக, பிரதமர் மன்மோகன் சிங்கை தனது நடவடிக்கைகளால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாகவும் மோடி குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x