Published : 06 Feb 2014 08:04 PM
Last Updated : 06 Feb 2014 08:04 PM
தமிழர் பண்பாட்டில் தொட்டில் முதல் சுடுகாடு வரை தாலாட்டாகவும், ஒப்பாரியாகவும் இசையின் பரிமாணம் உருமாறுகிறது. இசைக்கு மயங்காதவர்கள் உலகில் யாரும் இல்லை. இத்தகைய இசையை இசைக்கும் இசைக் கலைஞர்கள், இளைஞர்களின் ‘ரோல் மாடல்களாக’ உள்ளனர்.
போர், துப்பாக்கி, பீரங்கி என வீரம் நிறைந்த ராணுவத்தின் இசைக்குழு அதனுள் உள்ள மெல்லிய ஈரத்தை பறைசாற்றுகிறது. உலகில் உள்ள அனைத்து ராணுவங்களிலும் முக்கிய அங்கம் வகிப்பது அதன் பேண்டு வாத்தியக் குழுக்கள். இந்திய ராணுவத்தில் குன்னூர் வெலிங்டன் ராணுவ மைத்தின் ‘பேண்ட் வாத்தியக் குழு’ தனியிடம் பிடித்துள்ளது.
வெலிங்டன் ராணுவ மையத்தில் இந்திய ராணுவத்துக்கு தேர்வாகும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், இந்த மையத்தில் சர்வதேச ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியும் உள்ளது. இந்தக் கல்லூரியில் பாகிஸ்தான், இலங்கை, ஆங்கிலேயர்கள், ஆப்பிரிக்க நாடுகளின் ராணுவ அதிகாரிகள் தங்கி பயிற்சி பெற்றுச் செல்கின்றனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ராணுவ மையத்துக்கு இந்த ‘பேண்டு வாத்தியக்குழு’ கூடுதல் சிறப்பை சேர்க்கின்றது.
இந்த பேண்டில் உள்ள ‘பேக் பைப்’ வாத்தியம் சிறப்பம்சம் படைத்தது. ஆங்கிலேயர் காலத்தில் ஸ்காட்லாந்திலிருந்து இந்த ‘பைப்’ வாத்தியங்கள் இந்திய ராணுவத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது வெலிங்டன் ராணுவ மையத்தில் மட்டுமே இந்த ‘பேக் பைப்’ வாத்தியம் இசைக்கப்படுகிறது. சுபேதார் விஜயன் தலைமையில் இந்த குழுவில் மொத்தம் 23 பேர் இதனை இசைக்கின்றனர்.
ஐந்து மொழியில் பாடல்களை இந்த குழுவினர் இந்த வாத்தியத்தில் இசைப்பதைக் கேட்பது தனி சுகம். தங்கள் வாத்திய திறமையாக இந்த குழுவினர் பெங்களூரில் நடந்த போட்டியில் தென் மண்டல அளவில் முதலிடம் பிடித்தனர். டெல்லியில் நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் கடந்த 94ம் ஆண்டு மற்றும் 96 ஆண்டுகளில் இரண்டாம் இடம் பிடித்தது. உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இந்த வாத்தியக் குழு சாதித்துள்ளது.
ஆசிய அளவில் நடந்த போட்டியில் இந்த பேண்டு குழுவின் இசையே முதலிடம் பிடித்துள்ளது. ரம்மியமான இந்த இசை குழுவினரின் இசை நீலகிரியில் நடக்கும் அனைத்து ராணுவ நிகழ்ச்சிகள் மற்றும் அரசு விழாக்களில் இடம் பிடிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT