Published : 22 Jan 2014 10:25 AM
Last Updated : 22 Jan 2014 10:25 AM
இந்திய திரை நட்சத்திரங்களில் மூத்தவரும் தெலுங்கு திரை உலகின் பழம்பெரும் நடிகருமான அக்கினேனி நாகேஸ்வரராவ் (91) காலமானார்.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த அவர், புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு இறந்தார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வேங்கடராகவாபுரம் கிராமத்தில், வெங்கடரத்தினம், புன்னம்மாள் தம்பதிக்கு இளைய மகனாக 20-09-1924-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி நாகேஸ்வரராவ் பிறந்தார். இளம் வயதிலேயே நாடகத்துறையில் நுழைந்து பெண் வேடங்களில் நடித்தார், பின்னர் 1940ம் ஆண்டு முதன் முதலாக “தர்மபத்தினி” எனும் தெலுங்கு சினிமாவில் நடித்து தனது திரைவாழ்க்கையை தொடங்கினார். இதுவரை அவர் 256 படங்களில் நடித்துள்ளார். இதில் ஒரு இந்தி மற்றும் 20-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களும் அடங்கும்.
அன்னபூர்ணாவைத் திருமணம் செய்து கொண்ட நாகேஸ்வரரா விற்கு, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள். இதில்,மகன் நாகார்ஜுன், பேரன் நாக சைதன்யா நடிகர்களாவர். மூன்று தலைமுறை நடிகர், நடிகைகளுடன் இவர் நடித்துள்ளார். பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்மவிபூஷன், தாதா சாஹெப் பால்கே விருது உட்பட என்.டி.ஆர். விருது, நந்தி விருது, பிலிம் பேர் விருது என தெலுங்கு திரைப்பட உலகில் அதிக விருதுகளை பெற்ற நடிகர் இவர்தான்.
நாகேஸ்வர ராவ் மறைவு குறித்த செய்தி வெளியானவுடன், தெலுங்கு திரைப்பட உலகம் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அரசியல் பிரமுகர்களும், தொழில திபர்களும் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக ஆளுநர் ரோசையா, ஆந்திர ஆளுநர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, சிரஞ்சீவி மற்றும், நடிகைகள் ஜெயசுதா, ராதிகா, அனுஷ்கா, ஜமுனா நடிகர்கள் மோகன்பாபு, மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், பாலகிருஷ்ணா, சரத்குமார் மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என திரையுலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது. ஹைதராபாதில் உள்ள அவரது அன்னபூர்ணா ஸ்டுடியோவில், நாகேஸ்வரராவின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை நடை பெறவுள்ள நாகேஸ்வரராவின் இறுதி ஊர்வலம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என மாநில செய்தி மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டி.கே. அருணா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT