Published : 01 Dec 2013 12:00 AM
Last Updated : 01 Dec 2013 12:00 AM
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள மேலப்பாளையத்தில் எங்கு பார்த்தாலும் மண்பாண்ட ஓடுகள் நிறைந்து கிடக்கின்றன. எந்த இடத்தில் குழி தோண்டினாலும் மதமதக்காப் பானை என்று மக்களால் கூறப்படும் முதுமக்கள் தாழி கிடைக்கிறது.
இந்த ஊரில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி, நாராயணசாமி, திருநாராயணன், துரை, ரெங்கநாதன், அன்பழகன், அழகர், சம்பத் உள்பட பெரும்பாலானோர் வீடுகளில் தோண்டியெடுக்கப்பட்ட ஒன்றிரண்டு முதுமக்கள் தாழிகள் உள்ளன.
நவ. 24-ம் தேதி தருமலிங்கம் என்பவர் வீடுகட்ட பள்ளம் தோண்டியபோது முதுமக்கள் தாழி தட்டுப்படவே அதனைப் பாதுகாப்பாகத் தோண்டி எடுத்தார். இதுவரை இந்தப் பகுதியில் எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் இதுதான் மிகப் பெரியது.
இதுபற்றி அறிந்த அண்ணாமலை பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர் சிவராமகிருஷ்ணன் அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வில் ஈடுபட்டார். அவரது ஆய்வில் பல அரிய தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
தருமலிங்கம் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட தாழியில் அபூர்வ வகை வாள் ஒன்றும் இருந்தது தெரியவந்தது. குப்பையில் எறியப்பட்டு சிதைந்த நிலையிலிருந்த அந்த வாளை தற்போது எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்துள்ளனர்.
அந்தப் பகுதி முழுவதையும் சுற்றி ஆய்வு செய்தபோது பலவித வண்ணங்களில் மண்பாண்டங்களின் ஓடுகள் கிடைத்தன. அவற்றில் பலவற்றில் உடுக்கை போன்ற குறியீடுகள் இருந்தன. எல்லாவற்றையும் விரிவாக ஆய்வு செய்த சிவராமகிருஷ்ணன் இது குறித்து கூறியது:
“எடமணல் மேலப் பாளையம் ஒரு பண்பாட்டு மேடு என்று போற்றப்பட வேண்டிய பகுதி. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் மக்கள் வசிப்பிடம் இருந்திருக்கிறது. கி.மு 3-ம் நூற்றாண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து இங்கு மக்கள் வசித்து வந்திருக்கிறார்கள் என்று இங்கு கிடைத்திருக்கும் சான்றுகள் தெரிவிக்கின்றன.
சிந்து சமவெளி காலத்தைய குறியீடுகள் என்று ஐராவதம் மகாதேவன் வகைப்படுத்தியிருக்கிற குறியீடுகளில் உடுக்கை குறியீடும் ஒன்று. அத்தகைய குறியீடுகள் இங்குள்ள மண்பாண்டச் சிதைவுகளில் இருக்கிறது. கருப்பும் சிவப்பும் சேர்ந்த மண்பாண்ட ஓடுகளும் கிடைக்கிறது. இரும்பு வாளும் இருந்திருக்கிறது. அதனால் பெருங்கற்காலம், இரும்பு பயன்பாட்டு காலம், முதல் இடைக்காலம், சங்கக் காலம் தொடங்கி சோழர்கள் காலம் தொடர்ந்து தற்போது வரை மக்கள் இங்கு வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். பூம்புகார், தலச்சங்காடு ஆகியவற்றோடு இந்த ஊர் வரையிலும் சேர்ந்து ஒரேவிதமான பண்பாட்டோடு மக்கள் வாழ்ந்திருக்கலாம்” என்கிறார் சிவராமகிருஷ்ணன்.
மாமல்லபுரம், அரிக்கன்மேடு, பூம்புகார், நாகப்பட்டினம், காயல்பட்டினம், தூத்துக்குடி தனுஷ்கோடி, ராமேஸ்வரம் என்று தமிழகத்தின் வங்கக் கடற்கரை ஓரம் முழுவதுமே பண்பாட்டு பொக்கிஷங்களாகத்தான் இருந்திருக் கின்றன. அவை மக்கள் நாகரிக வளர்ச்சி அடைந்து வாழத் தொடங்கிய வாழ்க்கை முறையை காட்டும் சரித்திர ஆதாரங்களாக விளங்குகின்றன.
இவைதவிர, கடற்கரையோரம் இன்னும் பல ஊர்கள் வரலாற்றாளர்களின் கால்கள் படாமலே இருக்கின்றன. அவற்றில் முழுமையாக வரலாற்று ஆய்வுகள் தொடங்கப்படுமானால் காலத்தின் அழுத்தமான பதிவுகள் பலவற்றை கண்டெடுக்க முடியும்.
எடமணல் மேலப்பாளையம் கிராமத்திலும் முறையாக அகழாய்வு செய்யப்படுமானால் கற்கால ஆயுதங்கள் தொடங்கி, தமிழ் எழுத்துருக்கள், மணிகளாலான ஆபரணங்கள் வரையிலும் பல அரிய பொக்கிஷங்கள் கிடைக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT