Published : 23 Nov 2013 12:00 AM
Last Updated : 23 Nov 2013 12:00 AM

கஸ்தூரிரங்கன் அறிக்கை: அமல்படுத்தினால் 30 லட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ஒட்டுமொத்த கேரள மாநிலமும் கொந்தளித்துப் போய்க் கிடக்கிறது கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையால். மலைப் பகுதியை ஒட்டிய 13 மாவட்ட மக்கள் போராட்டக் களத்துக்கு வந்திருக்கிறார்கள். இடதுசாரி கட்சிகள் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸுக்கு எதிரான அஸ்திரமாக மாறிக்கொண்டிருக்கிறது இந்த அறிக்கை.

இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள முக்கியமான மலை தொடர் மேற்குத் தொடர்ச்சி மலை. இது அரபிக் கடலில் இருந்துவரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து, அதன் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கேரளாவுக்கு மழை பொழிவை உருவாக்குகிறது. இந்த மலைத் தொடரைப் பாதுகாக்க வலியுறுத்திச் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் எழுப்பினர். மேற்கு தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு குறித்துக் கஸ்தூரிரங்கன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது.

அறிக்கை சொல்வது என்ன?

மத்திய அரசுக்கு, இக்குழு கொடுத்த அறிக்கையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். அங்குள்ள மணல் குவாரிகள், சுரங்க பணிகளுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும். 20 ஆயிரம் சதுர கி.மீ. அல்லது அதற்கு மேல் கட்டுமானம் எழுப்பக்கூடாது. 50 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் குடியிருப்பு உருவாக்கக் கூடாது. மேற்கு தொடர்ச்சி மலைப் பாதுகாப்பை முன்னிறுத்தி அது செல்லும் பகுதிகளில் ரசாயன, பூச்சிக்கொல்லி தயாரிப்பு, சிமென்ட், அனல்மின் நிலையக் கூடங்கள் அமைக்கக் கூடாது என பட்டியல் நீள்கிறது.

இதனால் கேரளத்தில் 11 மாவட்டங்களில் வாழும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று களத்தில் இறங்கியிருக்கிறார்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை குறித்து, கேரள மாநிலத்தின் முன்னாள் வேளாண்மைத் துறை அமைச்சர் முல்லக்கர ரத்னாகரன் (மார்க்சிஸ்ட்) நம்மிடம் கூறியதாவது:

மத்திய அரசு மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து ஆய்வு செய்து, இதற்கு முன் ‘காட்கில் அறிக்கை’ வெளியிட்டது. அதில் பல தவறுகளும் சரியான புரிதலும் இல்லாததால்தான், கஸ்தூரிரங்கன் குழு அமைக்கப்பட்டது. இது முன்பைக் காட்டிலும் இடியாப்பச் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது.

30 லட்சம் பேர் பாதிப்பு

கஸ்தூரிரங்கன் அறிக்கையைச் செயல்படுத்த காங்கிரஸ் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்த அறிக்கையை அமல்படுத்தினால் 30 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். 11 மாவட்டங்களில் 123 ஊராட்சிகளில் வாழும் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். மலைப் பிரதேசங்களில் வாழும் மக்களைப் பஞ்சாயத்து வாரியாகக் குழு அமைத்து அவர்களின் வாழ்வியல் சூழலைப் புரிந்துகொண்டு அவர்களின் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து அதன் பின்தான் அறிக்கை கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் செய்யவில்லை.

கேரள இடதுசாரி கட்சிகளின் நிபந்தனையெல்லாம் ஒன்றே ஒன்றுதான். மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யவும், இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரவும், அறிவியல்பூர்வமாக ஒரு குழு அமைக்க வேண்டும். அந்தக் குழு பாதிப்புக்கு உள்ளாகும் மலைவாழ் மக்களின் கருத்துகளைக் கேட்டு, அதன்படி முடிவு எடுக்க வேண்டும் என்கிறார்.

பாமர மக்களுக்கு வேட்டு

கேரளப் பல்லுயிர் பெருக்க வாரியத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் விஜயன் கூறியதாவது:

மேற்குத் தொடர்ச்சி மலை 1,64,280 சதுர கி.மீ. பரப்பு கொண்டது. இதில் 33% பகுதிகளைத்தான் கஸ்தூரிரங்கன் கமிட்டி பாதுகாக்கப்பட்ட பகுதியாகச் சொல்கிறது. மீதம் 67% பகுதிகளில் பெரிய முதலாளிகள் மணல், கனிமக் குவாரிகளை வைத்துள்ளனர். இக்குழு அறிக்கையால் அப்பாவி விவசாயிகளும், பொதுமக்களும் வசித்துவரும் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது பெரும் முதலாளிகளுக்கு வாழ்வளிக்க அப்பாவிகளுக்குச் செய்யும் துரோகம் என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x