Published : 03 Oct 2013 12:06 AM Last Updated : 03 Oct 2013 12:06 AM
முதலில் கழிவறைகள், பிறகுதான் கோயில்கள்: மோடி பேச்சு
முதலில் கழிவறைகளைக் கட்ட வேண்டும்; அதன்பிறகுதான் கோயில்களைக் கட்ட வேண்டும் என்றார் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.
புது டெல்லியில் புதன்கிழமை நிகழ்ச்சி ஒன்றில், இளைஞர்கள் மத்தியில் மோடி பேசும்போது, "நான் இத்துத்துவத் தலைவன் என அறியப்படுகிறேன். ஆனால், முதலில் கழிவறைகளைக் கட்ட வேண்டும்; அதன்பிறகுதான் கோயில்கள் என்பதுதான் எனது உண்மையான சிந்தனை" என்றார்.
மன்மோகன் சிங்குக்கு பதிலடி...
மதசார்பின்மை குறித்து கேள்வி எழுப்பிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பதிலளித்த மோடி, "பொது மக்களின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கு மதசார்பின்மை என்ற கருவியை சிலர் பயன்படுத்தி வருகிறார்கள்.
அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியபோது பிரதமர் மன்மோகன் சிங் கூறிய டயலாக் வியப்பில் ஆழ்த்தியது. அது 1980களின் டயலாக். இது, 21வது நூற்றாண்டு. இன்று மக்களுக்கு முன்னேற்றம் தேவைப்படுகிறது. அவர்கள் தங்களது எதிர்காலத்தை மேம்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்" என்றார்.
முன்னதாக, தேர்தலில் மோடிக்கு எதிராக மதசார்பற்ற சக்திகள் ஓரணியில் கைகோக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
WRITE A COMMENT