Published : 08 Oct 2013 12:23 PM
Last Updated : 08 Oct 2013 12:23 PM
மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தர அளவீடுகள் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன.
காய்ச்சல், தலைவலி என்று சாதாரண மான நோய்கள் முதல் இதய அறுவை சிகிச்சை உள்பட மனிதர்களை அதிகம் அச்சுறுத்துகின்ற நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். இவர்களில் சிலருக்கு மருத்துவமனை சார்ந்த கிருமிகளாலோ, மருத்துவ சிகிச்சையின்போது ஏற்படும் தவறுகளாலோ உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மேற்கண்ட குறைகளைக் களை வதற்காக இந்திய மருத்துவமனை உரிமையாளர்கள் சங்கம் நோயாளிகளின் பாதுகாப்புக்கான தர அளவீடுகளை சென்னையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது. நாடெங்கும் செயல்படுத்தப்படவுள்ள இந்த அளவீடுகளை முதன்முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது இதில் சிறப்புக்குரிய விஷயமாகும்.
மருத்துவமனைகளுக்கான தேசிய மதிப்புச் சான்றிதழ் வழங்கும் வாரியத்தின் ஆட்சிக்குழு உறுப்பினரும் மருத்துவமனை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைமை இயக்குனருமான மருத்துவர் கிரிதர் கியானி 'தி இந்து' நிருபரிடம் கூறியதாவது:
''நோயாளிகளின் பாதுகாப்பும் மருத்துவமனைகளின் தரமும் ஒன்றுக்கொன்று கைகோர்த்திருப்பவை. 2006ல் இந்திய நாட்டில் உள்ள மருத்துவமனைகளின் தரத்தை உறுதிப்படுத்த ஒரு செயல்வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்மூலம் 18 அரசு மருத்துவமனைகளும், 182 தனியார் மருத்துவமனைகளும் சர்வதேசத் தரச் சான்றிதழ் பெற்றன. நாடு முழுக்க உள்ள சிறிய மருத்துவமனைகள் இந்தத் தரச் சான்றிதழ் பெறுவதற்கு மிகப்பெரிய முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்பதால், அவற்றின் சக்திக்கு உள்பட்டு மருத்துவமனைகளை மேம்படுத்த இன்று புதிதாக தர அளவீடுகளை அறிமுகப்படுத்துகிறோம். இந்த அளவீடுகள் மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றால் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டவை’’ என்றார்.
இந்தப் புதிய தர அளவீடுகள் 'தொடக்க நிலை அளவீடுகள்’ மற்றும் 'முன்னேறிய நிலை அளவீடுகள்’ என்று இரு வகைகளில் செயல்படுத்தப்படும். இந்திய மருத்துவமனை உரிமையாளர்கள் சங்கத்தின்கீழ் தற்போது சுமார் 10,000 சிறிய மருத்துவமனைகள் உறுப்பினராக இருப்பதால் முதலில் இந்த மருத்துவமனைகளில் இந்த தர அளவீடுகளை நடைமுறைப்படுத்த உள்ளது இந்தச் சங்கம். சென்னை நகரில் மட்டும் சுமார் 30 அல்லது 40 மருத்துவமனைகளில் இவை நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. மூன்று அல்லது நான்கு மாதங்களில் தமிழகம் முழுக்க உள்ள அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் முதற்கொண்டு அனைத்து மருத்துவமனைகளிலும் இந்தத் தர அளவீடுகள் நடைமுறைப்படுத்தப்படும் எனச் சொல்லப்பட்டது.
"இந்தத் தர அளவீடுகளை மருத்துவமனைகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. எனினும், ஒவ்வொரு நோயாளியும் தரமான மருத்துவமனைகள் எது என்று அறிந்து கொள்ளவும், அதன் மூலம் தன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் இந்த அளவீடுகளை ஒவ்வொரு மருத்துவமனையும் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்’’ என்று மருத்துவர் கிரிதர் கூறினார்.
தொடக்க நிலை மற்றும் மேம்பட்ட நிலை என இரு வகையாக உள்ள இந்தத் தர அளவீட்டில் ஒவ்வொரு நிலையும் உள்கட்டமைப்பு, இயங்கும் முறைகள், பயன்கள் என மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. தொடக்க நிலையில் 110 குறிக்கோள்களும், முன்னேறிய நிலையில் 155 குறிக்கோள்களும் உள்ளது. இந்த மூன்று பிரிவுகளிலும் தனித்தனியாக 75 சதவிகித மதிப்பெண்களைப் பெற்று தேர்வானால் மட்டுமே ஒரு மருத்துவமனைக்குத் தரச் சான்றிதழ் வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT