Published : 14 Oct 2013 10:48 AM
Last Updated : 14 Oct 2013 10:48 AM
வீணை - இதிகாச காலத்துக்கு முந்தைய இசைக்கருவி என்கிறார்கள். நாயக்கர் மன்னர்கள் காலத்தில் தமிழகத்தின் தஞ்சாவூரில் தனது மெல்லிய இசைப் பயணத்தை தொடங்கியது வீணை. ஆக, வீணைக்கும் தமிழுக்கும் சுமார் ஐந்நூறு வருட பந்தம்.
தமிழகத்தில் தஞ்சையில் மட்டுமே வீணை தயாரிக்கும் பட்டறைகள் இருக்கின்றன. மரத்தை வெட்டி வடிவாக்குவதிலிருந்து ஷோரூமில் விற்பனைக்கு கொண்டுவந்து சேர்ப்பது வரை தஞ்சையில் சுமார் நூறு குடும்பங்கள் வழிவழியாய் இந்தத் தொழிலைச் சுற்றி சுழல்கின்றன. எல்லா இசைக் கருவிகளுக்கும் மாற்று டிஜிட்டல் கருவிகள் வந்துவிட்டன. எலக்ட்ரானிக் யுகத்தின் ஆக்கிரமிப்புக்குள் இன்னமும் அடங்காமல் இருப்பது வீணையின் நாதம் மட்டும்தான்! ஆனாலும், வீணைத் தொழில் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
வீணை.. தன்னை மீட்டும் விரல்களோடு பேசும் என்பது கவிஞர்களின் உருவகம். ஆனால், “வீணைக்காவது விரல்கள் இருக்கு.. எங்க குறைகளை கேக்கத்தான் யாருமில்லை’’ என்று புலம்புகிறார்கள் வீணை தயாரிக்கும் கலைஞர்கள். “பாடத் தெரியாதவர்கள் ஆடியோ கேசட் விற்கலாம். ஆனால், சங்கீத சங்கதி தெரியாதவர்கள் வீணை தயாரிக்க முடியாது” பெருமையாய் சொல்கிறார் வீணைத் தொழிலின் மூன்றாம் தலைமுறை பிள்ளை வெங்கடேசன்.
ஆரம்ப நாட்களில் மூங்கில் கருங்காலி, செஞ்சந்தன மரங்களில் வீணையை செதுக்கினார்கள். இப்போது பலா மரம் மட்டுமே உபயோகத்தில் இருக்கிறது. தஞ்சை பெரியகோயில் அருகே சிவகங்கை பூங்காவின் வாசலில்தான் வீணைக்கு ஆரம்ப வடிவம் கொடுக்கிறார்கள். “பால் மரமா இருந்தா வெடிக்காது. நல்ல அதிர்வு இருக்கும். இசையும் இனிமையா இருக்கும். அதனால பலா மரத்தை பயன்படுத்துறோம். ஒருநாளைக்கு ரெண்டு மூணு வீணை வடிவெடுத்துக் குடுப்போம். ஒரு வீணைக்கு கூலி 250 ரூபாய் கிடைக்கும்” - சிவகங்கை பூங்காவில் பலா மரத்தை வீணையாக குடைந்துகொண்டே பேசினார் காமாட்சி.
இங்கே ஓரளவுக்கு வடிவம் கொடுக்கப்படும் வீணைகள் அடுத்த கட்டமாக, பட்டறைகளில் மெருகு போடப்படுகிறது. அடுத்ததாக தந்திகள் அமைத்து முழு வீணையாக முழங்க வைக்கிறார்கள். முன்பெல்லாம் யானை, குதிரை ரோமங்களை திரித்து தந்திகளாக பயன்படுத்தினார்கள். இப்போது செயற்கை இழை வந்துவிட்டது. சாதாரணமாக, மூன்று நான்கு பேர் சேர்ந்து 25 நாட்கள் உழைத்து ஒரு வீணையை செய்கிறார்கள். இப்படித் தயாரிக்கப்படும் வீணையின் இன்றைய ஆரம்ப விலை 12 ஆயிரம்தான் என்கிறார் வெங்கடேசன். “மத்த இசைக் கருவிகளைப் போல வீணையை மெஷினில் வடிவமைக்க முடியாது. முழுக்க முழுக்க கையால்தான் கடைஞ்சு எடுக்கணும். எனக்குத் தெரிஞ்சு 1987-ல வீணை ஐந்நூறு ரூபாய்க்கு வித்துச்சு. வருஷத்துக்கு 500 ரூபாய் கூடி இன்னைக்கு 12 ஆயிரத்துக்கு வந்திருக்கு. ரோஸ் வுட்டில் தயாராகும் வீணை ஒன்றரை லட்சம் வரை போகுது. வீணையை வாங்கி வைக்கிறது சொத்து வாங்கிப் போடுற மாதிரி. இருக்க இருக்க மதிப்பு கூடிட்டே இருக்கும். நல்ல மார்க்கெட் இருந்தும், சரியான வழிகாட்டுதல் இல்லாததால இந்தத் தொழில் நலிவடைஞ்சிக்கிட்டே வருது. ஆந்திரா கவர்மென்டு அங்க இருக்கிற வீணைத் தொழிலாளர்களுக்கு பலா மரங்களை சலுகை விலையில வாங்கிக் குடுக்குது. கடன் வசதியும் பண்ணிக் குடுக்குறாங்க. நம்ம மாநிலத்துல அந்த அளவுக்கு ஆதரவு இல்லை.தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும் சேர்த்து புதுச்சேரியில மத்திய அரசின் கைவினை கலைஞர்கள் மையம் இருக்கு. அங்க உதவின்னு கேட்டுப் போனா, மாற்றாந்தாய் புள்ள மாதிரி பாக்குறாங்க. கேரளாவுல வீட்டுக்கு வீடு வீணை வைச்சிருக்காங்க. வெளிநாட்டுக்காரங்க வீணையை விரும்பி வாங்கிட்டுப் போறாங்க. தமிழ்நாட்டுல அந்த அளவுக்கு ஆர்வம் இல்லை.
என்னதான் பணம் இருந்தாலும் ஐஸ்வர்யம் இருந்தால்தான் வீணையை வாங்கி வீட்டுல வைக்க முடியும். இது இசைக்கருவி மாத்திரமல்ல.. செல்வத்தின் அடையாளம்” அற்புதமாய் சொன்னார் வெங்கடேசன்.
தஞ்சையில் தயாராகும் வீணைகளை கொள்முதல் செய்து விற்பனைக்கு அனுப்புவதற்காகவே 1952-ல் உருவானது ‘தஞ்சாவூர் இசைக்கருவி பணியாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கம்’. பயிற்சி மையம் அமைச்சுக் கொடுத்தா, புதுசா பலபேரு இந்தத் தொழிலுக்கு வருவாங்க. வீணை உற்பத்தியும் அதிகரிக்கும் என்கிறார் அதன் தலைவர் நாராயணன்.
இந்திய தேசிய பாரம்பரிய கலைப் பண்பாட்டு அறக்கட்டளையின் (INTACH) செயலாளர் முத்துக்குமார் பேசுகையில், “தஞ்சை புகழ் வீணைக்கு உலக அங்கீகாரமான புவிசார் குறியீடு கிடைச்சிருக்கு. பூம்புகார் தயாரிப்புகளுக்காக தனியாக ஷோரூம் இருப்பதுபோல வீணைக்கும் தனியா ஷோரூம் அமைச்சுக் கொடுக்கணும். சுற்றுலா வளர்ச்சித் துறை மூலமா வீணை தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். சுற்றுலாத் துறையே வீணைக்கான ஷோரூம்களையும் நடத்தலாம். அரசு ஆதரவு இருந்தால் வீணை ஷோரும்களை நாங்களே திறக்கவும் தயாராய் இருக்கிறோம்’’ என்றார்.
வீணையின் நாதம் மனதுக்கு நிம்மதியைத் தரும் என்பார்கள். அந்த நிம்மதி வீணைத் தொழிலாளர்களுக்கும் கிட்டும் காலம் மலரட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT