Published : 31 Oct 2013 02:58 PM
Last Updated : 31 Oct 2013 02:58 PM
ஒரு காலத்தில் தமிழரின் தற்காப்பு கலைகளில் முதலாவதாகவும், போட்டிக்களத்தில் மூத்த விளையாட்டாகவும் இருந்தது சிலம்பாட்டம். காற்று வேகத்தில் கம்பைச் சுழற்றி விளையாடும் இந்த ஆட்டத்துக்கு அப்போது பெரும் வரவேற்பு. ஆனால் இன்றைய இளம்தலைமுறைக்கு சிலம்பம் என்றால் அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. பழைய சினிமாக்களில் பார்த்ததோடு சரி.
மெல்ல மெல்ல அழிந்து வரும் பல பாரம்பரியக் கலைகளோடு இந்த சிலம்பாட்டமும் கரைந்து கொண்டிருக்கிறது. அருமையான இந்தக் கலையை தம்மால் முடிந்தவரை சில நூறு பேருக்காவது கற்றுத் தந்துவிட வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறார் சேலம் அருகேயுள்ள உடையாப்பட்டியைச் சேர்ந்த இளங்கோ.
காலையில் பிளம்பிங் வேலை, மதியத்தில் லோடு ஆட்டோ டிரைவர், மாலையில் சிலம்ப ஆசிரியர் என பன்முகம் காட்டும் இவர், தனது பகுதியில் உள்ள இளைஞர்கள், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு மாலை நேரம்… மாசிநாயக்கன்பட்டியில் கம்பு சுழற்றிக் கொண்டிருந்த அவரைச் சந்தித்தோம். எதிரே இருந்த பள்ளி மாணவிகள், கல்லூரி இளைஞர்களை கம்பு சுழற்றச் சொல்லிவிட்டு பேசினார் இளங்கோ…
படிக்கிற காலத்துல குளத்துலயும் ஆத்துலயும் மீன்பிடிச்சுட்டு திரிஞ்சதால மண்டையில படிப்பு ஏறல. அதனால, டவுசர் போட்ட வயசுலயே பைப் வேலைக்கு போயாச்சு. படிக்கத்தான் செய்யல.. உருப்படியா வேற ஏதாச்சும் கத்துக்கலாமேன்னு தோணுச்சு. முப்பதஞ்சு வருஷத்துக்கு முந்தி சிலம்பம், மல்யுத்தம், வாள் சண்டை இப்படி நம்மூரு வித்தைங்கதான் பிரபலம். அதனால கையில் கம்பைத் தூக்கிட்டேன் .வேலைக்கு போன நேரம் போக மத்த நேரத்துல சிலம்பமும் கையுமாவே சுத்திக்கிட்டு இருப்பேன். அதனால, உடையாப்பட்டி பகுதியில 20 வருஷமா கவர்மென்ட் ஸ்கூல் புள்ளைங்களுக்கு காசு வாங்காம இனாமா சிலம்பம் சொல்லிக் குடுத்துட்டு வர்றேன். பத்துப் பேரு ஒரே சமயத்துல வந்து தாக்கினாக்கூட, அடிச்சுத் துரத்தக் கூடிய அற்புதமான கலை இது. முறையா கத்துக்கிட்டா மட்டும்தான் நாம சொல்லுறபடி கேட்கும்.
சிலம்பத்துல 23 அடி கத்துக்கிட்டவங்கதான் சிலம்பம் மாஸ்டர். ஆனா, 23 அடி சிலம்பாட்டத்தை நம்மாளுங்க சொல்லிக் குடுக்காம விட்டுட்டாங்க. அதனால நாலடி வரிசை தெரிஞ்சவங்களே இப்ப மாஸ்டர்னு சொல்லிக்கிறாங்க. எனக்கு ஏழடி வரிசை தெரியும். சிலம்பம் மாத்திரமல்ல.. நெஞ்சில பாறாங்கல்லை வெச்சு உடைக்கிறது. உரலை நெஞ்சு மேல வெச்சு நெல்லு குத்துறது, நின்ன இடத்துல இருந்து நெஞ்சுல செயின கட்டிக்கிட்டு தீப்பந்தத்த வட்டமா சுத்தறதுன்னு இன்னும் நிறைய வித்தைகள் கத்து வெச்சிருக்கேன்.
அரசு பள்ளிகளில் சிலம்பாட்டம் பத்தி பாடம் இருக்கு. ஆனா, மாஸ்டர் இல்லை. தமிழக முதல்வர் மனசு வெச்சா, அழிஞ்சுட்டு வர்ற சிலம்பக் கலைக்கு மறுவாழ்வு கொடுக்க முடியும். அரசுப் பள்ளிகளில் சிலம்பத்தை கட்டாய பயிற்சியா கொண்டு வரணும். கிராமப்புற இளைஞர்களை ஊக்கப்படுத்துறதுக்காக முதல்வர் தங்கக் கோப்பை போட்டிகளை அரசாங்கத்துல நடத்துறாங்க. அதுல கோகோ, கபடி, ஈட்டி எறிதல், குண்டு எறிதல் போட்டியெல்லாம் இருக்கு. ஆனா, சிலம்பத்துக்கு இடமில்லை. வரும் காலத்திலாவது சிலம்பத்தையும் லிஸ்ட்டுல சேர்த்து மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தினா அருமையான ஒரு கலை அழியாமல் காக்கப்படும்.
கோரிக்கையுடன் பேச்சை முடித்துவிட்டு மீண்டும் கம்பை கையில் எடுத்தார் இளங்கோ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT