Published : 25 Sep 2013 07:29 AM
Last Updated : 25 Sep 2013 07:29 AM

ஐந்தாம் படையினர்

மீண்டும் சர்ச்சையில்... முன்னாள் தரைப்படைத் தளபதி வி.கே. சிங். "காஷ்மீரில் ஒமர் அரசைக் கவிழ்க்க, தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு, வி.கே. சிங் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட உளவு அமைப்பு நிதி வழங்கியது. சிங்குக்குப் பின் பதவிக்கு வந்த ஜெனரல் விக்ரம் சிங் அந்தப் பதவிக்கு வரக் கூடாது என்று பொதுநலன் வழக்கு தொடர்ந்தவருக்கு நிதியுதவி செய்தது. உளவு அமைப்புக்கான நிதியில் முறைகேடுகள் செய்யப்பட்டன. தில்லியில் பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரிகளின் தொலைபேசிகள் இந்த உளவு அமைப்பின் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டன" என்றெல்லாம் சிங் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டு, "பணியில் இருந்தாலும் ஓய்வுபெற்றிருந்தாலும் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காது" என்று அறிவித்திருக்கிறார் அமைச்சர் மணீஷ் திவாரி. இதுகுறித்து ராணுவத் தலைமையகம் விசாரணை நடத்தி அறிக்கை அளித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனது வழக்குரைஞர் மூலம் அந்த அறிக்கையின் நகலைக் கோரியிருக்கும் சிங், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார். மேலும், "உளவு அமைப்பு ஒட்டு கேட்கும் கருவி எதையும் பயன்படுத்தவில்லை; அரசுக்கு ஆதரவான - பிரிவினைக்கு எதிரான காஷ்மீர் அமைப்புகளுக்குப் பணம் கொடுப்பதும் ஆதரவு அளிப்பதும் காலம்காலமாக நடந்துவருவதுதான்" என்று சொல்லியிருக்கிறார்.

ரேவாரியில் மோடியுடன் பொதுக்கூட்டத்தில் சமீபத்தில் பங்கேற்றார் சிங். தொடர்ச்சியாக அரசு சார்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள தாக்குதல் அரசியலும், சிங் வெளியிடும் மறுப்புச் செய்திகளின் பின்னணியில் உள்ள தற்காப்பு அரசியலும் யாருக்கும் புரியாதது அல்ல. நடப்பது அரசியல் சூதாட்டம். ஆனால், அதற்கான பந்தயத் தொகை என்ன... தேசத்தின் பாதுகாப்பா?

இதே தவறை முன்னரே அரசும் ஜெனரலும் செய்திருக்கிறார்கள். தளபதி ஓய்வுபெறும் தருணத்தில், "இந்திய ராணுவத்திடம் போதிய அளவு வெடிபொருட்கள் இல்லை. பாகிஸ்தானுடன் இப்போது ஒரு போர் வெடித்தால், இரு நாட்களுக்குள் எல்லா வெடிபொருட்களும் தீர்ந்துவிடும்" என்கிற உள்ளடக்கத்தோடு பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனிக்கு எழுதியதாகச் சொல்லப்படும் கடிதம் கசிந்தது; வழக்கத்தைவிட, ஒரு மாதம் முன்கூட்டியே அடுத்த தரைப்படைத் தளபதியின் பெயரை அரசு அறிவித்தது; கடைசிக் கட்டத்தில் நடந்த பாதுகாப்புக் கூட்டத்துக்குத் தளபதிக்குப் பதில் துணைத் தளபதி அழைக்கப்பட்டது... எதையும் நாடு மறந்துவிடவில்லை. இப்போது அதன் அடுத்த அத்தியாயம். உண்மையில் ராஜ ரகசியம் என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா? ரகசியக்காப்புப் பிரமாணத்துக்கு அர்த்தம்தான் என்ன?

எதிரிகள் எல்லைக்கு வெளியே மட்டும் இல்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x