Published : 23 Dec 2013 03:04 PM
Last Updated : 23 Dec 2013 03:04 PM

மாடுலர் கிச்சனுக்கு மாறப் போறீங்களா?

மாடுலர் கிச்சன் என்ற வகை தற்போது எல்லா வீடுகளிலும் பிரபலமாகி வருகிறது. இப்போது புதிதாகக் கட்டப்படும் எல்லாச் சமையலறைகளும் இந்த வகையிலேயே கட்டப்படுகின்றன. ஆனால், ஏற்கனவே கட்டப்பட்டுப் பத்து பதினைந்து ஆண்டுகள் ஆன வீடுகளில் உள்ளச் சமையலறைகளையும் மாடுலர் கிச்சன்களாக மாற்ற முடியுமா? நிச்சயம் முடியும். பழைய வீடுகளில் இத்தகைய மாடுலர் கிச்சன்களைப் பொருத்த வேண்டுமானால் சில வழிமுறைகளை அறிந்துகொள்வது முக்கியம்.

மாடுலர் கிச்சன்களை அமைத்துக் கொடுக்க இன்று நிறைய நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை விசாரித்து அழைத்தால், அவர்கள் வீட்டுக்கு வந்து ஆய்வு செய்வார்கள். எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் அவர்கள் சொல்லி விடுவார்கள். இதுதான் முதல் படி. முன் பணம் கட்ட வேண்டியிருக்கும்.

நேரில் கடைக்குச் சென்று தேவையான மாடல், வண்ணம் போன்றவற்றைத் தேர்வு செய்வது அடுத்த நிலை. பொதுவாக மற்ற நிறங்களைக் காட்டிலும் பழுப்பு நிறத்தைத் தேர்வு செய்வதே நல்லது.

நிறுவனத்திலிருந்து பொறியாளர் வந்து அறையின் நீளம், அகலம் போன்றவற்றைத் துல்லியமாக அளப்பார்கள். பழைய சமையலறை, மாடுலருக்கு ஏற்றதாக இல்லாவிட்டால், சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அந்தப் பொறுப்பும் செலவும் தனி.

நீங்கள் தேர்ந்தெடுத்த வரைபடத்தில் கையெழுத்து போட்டு ஒப்பு கொண்ட பின், மூன்று நான்கு வாரங்களில் மாடுலர் கிச்சன் அமைப்பதற்கான பேனல்கள் வரும். கோப்பைகள், தட்டுகள், அழகு வகைகள் வைப்பதற்கான கண்ணாடிகளும் இதில் அடக்கம்.

வேலைச் செய்ய வரும் நிபுணரிடம் எங்கெங்கு என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும் ( கரண்டி, ஸ்பூன், டம்பளர், பாத்திரங்கள்) என்பதை முன்கூட்டியே ஆலோசித்துத் தெரிவித்து விட வேண்டும். சமையலறையிலேயே சிறு பூஜை அறையும் சில இல்லங்களில் இருக்கக் கூடும். அப்படி இருந்தால் சாமி படங்களை மாட்டுகிற விதத்தையும் தெரிவித்து விட வேண்டும்.

சமையல் சிலிண்டர் வெளியே தெரியாதவாறு பொருத்துவார்கள். அப்போது உடன் இருந்து கண்காணிக்க வேண்டும். துவாரம் வைத்து அமைப்பதுதான் அவர்கள் வேலை. பிறகு சிலிண்டர் குழாயை அடுப்புடன் இணைப்பது காஸ் கம்பெனியைச் சார்ந்தது.

பழைய சமையலறைகளை மாடுலர் கிச்சன்களாக மாற்றக் குறைந்தபட்சம் ரூ.1.50 லட்சம் செலவு ஆகும். அறையின் நீள அகலம் இவற்றைப் பொருத்து செலவு கூடுதல் ஆகவும் வாய்ப்பு உள்ளது.

மாடுலர் கிச்சன் அமைக்கத் துளை போடுவது உள்ளிட்ட பணிகள் மின்சாரத்தைச் சார்ந்தது. எனவே,மின்வெட்டு நேரத்தை முன்கூட்டியே சொல்லி விடுவதும் நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x