Published : 17 Jan 2014 01:21 PM
Last Updated : 17 Jan 2014 01:21 PM

தமிழ் குறித்த பெருமித உணர்வே இன்றைய தேவை: மாலன்

தமிழ் இலக்கியம் என்பது தமிழ்நாட்டில் படைக்கப்படுவது மட்டுமே அல்ல. தாயகம் கடந்து வாழும் தமிழர்களின் எழுத்துக்கள் உத்வேகத்துடன் செழுமையடைந்திருக்கின்றன. மாறாக தமிழ்நாட்டில் தமிழ் மொழி குறித்த பெருமித உணர்வு மங்கிய நிலையில் இருக்கிறது. கோவையில் நடைபெறும் தாயகம் கடந்த தமிழ் என்ற தலைப்பில் நடைபெற இருக்கும் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு அதற்குப் புத்துணர்ச்சியை ஊட்டும் என்று மாநாட்டின் அமைப்புக் குழுத் தலைவரான எழுத்தாளர் மாலன் தெரிவிக்கிறார்.

மூன்று நாள் மாநாடு

கோவையில் வரும் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்கள் தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆதரவில் ‘தாயகம் கடந்த தமிழ்' என்ற தலைப்பில் உலகத தமிழ் எழுத்தாளர்கள் பங்குபெரும் சர்வதேச மாநாடு நடக்கிறது. இதில் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளிகள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப அறிஞர்கள் எனப் பலர் கலந்துகொள்ளும் சர்வதேசக் கருத்தரங்கு இது. உலக முழுவதும், பரவி வாழும் தமிழ் எழுத்தாளர்களையும், அவர்தம் படைப்புகளையும் ஒருங்கிணைப்பதே இம்மாநாட்டின் நோக்கம் என்கிறார் மாலன்.

அமர்வுகள்

மாநாட்டில் ’தாயகம் பெயர் தல் வலியும் வாழ்வும்’, ’மொழி பெயர்ப்பு’, ’தாயகத்திற்கு அப்பால் தமிழ்க் கல்வி’ முதலான ஏழு அமர்வுகள் நடக்க விருக்கின்றன. அ.முத்துலிங்கம். சிற்பி பாலசுப்ரமணியம், பேராசிரியர் ப.க. பொன்னுசாமி, எஸ்.பொன்னுதுரை, சேரன், பெருந்தேவி, இந்திரன், புவியரசு முதலான ஆளுமைகள் கலந்துகொள்கிறார்கள். மாநாட்டின் தலைவர் நல்ல பழனிசாமி.

கோவையில் உள்ள தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்தும் இந்த மாநாடு தமிழ் குறித்த பெருமித உணர்வை மீட்டெடுக்கும் எனத் தான் நம்புவதாக மாலன் குறிப்பிடுகிறார். தமிழ் படித்தால் வேலை வாய்ப்பு இல்லை என்ற மனச்சோர்வை நீக்கி, தமிழால் முடியும் என்ற நிலையை உருவாக்குவதே இம்மாநாட்டின் இலக்குகளில் ஒன்று என்கிறார். கையடக் கருவிகள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் தமிழ் மறுமலர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகளையும் இம்மாநாடு ஆராயும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மாநாட்டில் கலந்துகொள்ள விரும்புவோர் மாநாட்டின் இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என மாநாட்டின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. கலந்துகொள்ளக் கட்டணம் ஏதும் இல்லை. >www.centerfortamilculture.com என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம்.

மாநாட்டின் அமர்வுகள், பங்கேற்போர் குறித்த தகவல்களை மாநாட்டின் இணையதளத்தில் (www.centerfortamilculture.com) காணலாம். தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கல்வி யாளர்கள், மாணவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மாநாட்டில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x