Last Updated : 26 Sep, 2018 04:10 PM

 

Published : 26 Sep 2018 04:10 PM
Last Updated : 26 Sep 2018 04:10 PM

புதுச்சேரியில் முதன்முறையாக சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்; செப்.30 வரை நடக்கிறது: 124 திரைப்படங்கள் திரையிடல்

 

புதுச்சேரியில் சர்வதேச திரைப்படவிழா தொடங்கியது. முதன்முறையாக நடக்கும் இவ்விழா 30-ம் தேதி வரை நடைபெறும். இதில் 3 இடங்களில் 124 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. சிறந்த திரைப்படங்களுக்கு விருதும் அளிக்கப்பட உள்ளது.

புதுச்சேரியில் முதன்முறையாக நடைபெறும் இவ்விழாவை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

“புதுச்சேரியில் முதல்முறையாக சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் 124 பன்மொழி திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளது. இந்தோ - பிரெஞ்சு கலாசாரம் உள்ள புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகிறது. அந்த வரிசையில் இந்த சர்வதேச திரைப்பட விழாவும் இணைந்துள்ளது. இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்” என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் இயக்குநர் சாய்பால் சாட்டர்ஜி பேசுகையில்,

“மாற்றுத்திரைப்படங்கள் இயக்க இளையோர் வரத்தொடங்கியுள்ளனர். திரைப்படத்துறையிலிருந்து தயாராவதுதான் திரைப்படங்கள் என்ற மாயத்தோற்றமுள்ளது. விநியோகஸ்தர் முறையானது மாற்றுத்திரைப்படங்களை அனுமதிப்பதில்லை. இவ்வகையான வழிமுறைகளே உண்மையான திரைப்படங்களை அழிக்கிறது” என்று குறிப்பிட்டார்.

திரைப்பட நடிகர் அதில் ஹூசைன் பேசுகையில்,

“திரைப்படம் அதிக தாக்கம் ஏற்படுத்தும் சாதனம். பல விஷயங்களை திரைப்படங்கள் விதைக்கின்றன. கலை, கலாச்சாரம், மனித உறவுகள் என பலவற்றை அறிய இயலும். மனித மனங்களை எளிமையாக அறிய வைக்கும் மாற்றுத்திரைப்படங்களின் திரையிடும் இச்சூழல் வளரும்” என்று குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து தேசிய விருது வென்ற தமிழ் திரைப்படமான செழியன் இயக்கிய ‘டூ லெட்’ திரைப்படம் முதலில் திரையிடப்பட்டது.

எங்கெங்கு பார்க்கலாம்?

இன்று தொடங்கிய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலி, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளை சார்ந்த 124 படங்கள் திரைப்படுகின்றன. இதில் 10 நிமிடங்கள் முதல் 2 மணி வரை கூடக்கூடிய திரைப்படங்கள் இடம் பெறுகின்றன.

அவை அலையன்ஸ் பிரான்சே, ஆரோவில், புதுவை பல்கலைக்கழக ஆடிட்டோரியம் ஆகி்ய இடங்களில் திரைப்படுகின்றன. இதில் வெற்றி பெறும் படங்களுக்கு 30-ம் தேதி பரிசுகள் வழங்கப்படுகின்றன.

முக்கிய திரைப்படங்கள்

நடிகர் அதில் ஹூசைன் நடித்த ‘வாட் வில் பீபிள் சே’,  அத்தனூ கோஷ் இயக்கிய ‘மயூராக்ஷி’, நிகில் மஞ்சுவின் ‘ரிசர்வேசன்’, அபேய சிம்ஹாவின் ‘பட்டாயி’ போன்ற சிறப்பு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

 

           

           

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x