Published : 01 Jun 2023 07:08 AM
Last Updated : 01 Jun 2023 07:08 AM
ஓசூர்: பராமரிப்பின்றி பாழ்பட்டுள்ள அய்யூர் இயற்கை சுற்றுச்சூழல் பூங்காவைச் சீரமைக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு உட்பட்ட அய்யூர் வனப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 1,060 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்குள்ள அடர்ந்த மரங்கள் மேற்கூரை போல் பரந்துள்ளதால், நிலப்பரப்பில் சூரிய ஒளி புகாமல் தடுக்கப்பட்டு, ஆண்டு முழுவதும் இப்பகுதியில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
இந்த வனப்பகுதியைச் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் வனத்துறை சார்பில் இங்கு இயற்கை சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்காவில் மூங்கில் குடில்கள், பாரம்பரிய குடில்கள், காட்சிக் கோபுரம், சிறுவர்கள் விளையாட்டு மைதானம், செயற்கை நீர் ஊற்றுகள், மரத்தின் மீது குடில், இயற்கை அழகைக் கண்டு ரசிக்க நடைபாதை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பூங்கா அருகே வனத்தில் சாமி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மான், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் அருந்த அடிக்கடி வந்து செல்கின்றன. இதையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க காட்சி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பூங்காவுக்கு ஆண்டு முழுவதும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலத்திலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கிச் சென்று வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இன்றி பூங்கா பாழ்பட்டுள்ளது. இதனால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையுள்ளது. எனவே, இப்பூங்காவைச் சீரமைத்து மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக சுற்றுலாப் பயணிகள் சிலர் கூறியதாவது: விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்க அய்யூர் சுற்றுச்சூழல் பூங்காவுக்குச் வருவது வழக்கம். தற்போது, பூங்காவில் குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் இல்லை. மேலும், போதிய பராமரிப்பு இல்லாததால் இங்குள்ள குடில்கள் மற்றும் காட்சி கோபுரம் சேதமடைந்துள்ளன. இதை சீரமைத்து, பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேம்படுத்த நடவடிக்கை: இதுதொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது: சுற்றுச்சூழல் பூங்காவுக்கு ஓசூர், பெங்களூரு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் விடுமுறை நாட்களில் ஓய்வு எடுக்க அடிக்கடி வந்து செல்கின்றனர்.
இங்கு ரூ.500 முதல் ரூ.1,500 வரை தங்கும் அறைகள் உள்ளன. உணவுப் பொருட்கள் வாங்கி கொடுத்தால் இங்கு சமைத்துக் கொடுப்பார்கள். பூங்கா பராமரிப்பு இல்லாததால் பயணிகள் வருகை குறைந்துள்ளது. பூங்காவை மேம்படுத்த உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT