Published : 29 May 2023 09:55 AM
Last Updated : 29 May 2023 09:55 AM
கடலூர்: சிதம்பரம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இங்கு கடற்கரையை ஒட்டியுள்ள உப்பனாற்றில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 4 ஆயிரத்து 500 கால்வாய்களுடன் மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ளன. சுரபுன்னை மரங்களை கொண்ட இந்த காடுகள் மருத்துவ குணம் கொண்டவையாகும். ஒருபுறம் கடல், இன்னொருபுறம் பச்சைபசேல் என்று படர்ந்து காணப்படும் சுரபுன்னை மரங்கள் என இயற்கை எழில் மிகுந்து காணப்படும்.
இந்த மாங்குரோவ் காடுகளை கழிமுக ஆற்றுப் பகுதியில் படகுகளில் சென்று பார்த்தால் உற்சாகம் பொங்கும். தற்போது கோடை விடுமுறை தினம் என்பதால் கடலூர், திருவண்ணாமலை, சென்னை, புதுச்சேரி, வேலூர், திருச்சி, திருவாரூர், கும்பகோணம், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர்களும் குவிந்து வருகின்றனர். அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து கழிமுக ஆற்றில் படகு சவாரி செய்தவாறே மூலிகை தாவரங்கள், வெளிநாட்டு பறவைகள், நீர் நாய் உள்ளிட்டவற்றை கண்டு ரசிக்கின்றனர். நேற்று சுற்றுலா மைய வளாகம் முழுவதும் கூட்டம் அதிகளவில் இருந்தது. நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT