Published : 28 May 2023 04:10 AM
Last Updated : 28 May 2023 04:10 AM
சேலம்: ஏற்காடு கோடை விழா மலர்க் கண்காட்சி இன்று மாலை நிறை வடைகிறது. கோடை விழாவை யொட்டி, நேற்று நடைபெற்ற செல்லப் பிராணிகள் கண்காட்சியில் 20-க்கும் மேற்பட்ட நாயினங்கள் பங்கேற்று, சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியடைய வைத்தன.
ஏற்காட்டில் கோடை விழா மலர்க் கண்காட்சிக்கு நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகை வழக்கத்துக்கு மாறாக, மிகவும் அதிகமாக இருந்தது. இதனால், சேலம் அடிவாரம் ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும், ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்கா, படகு இல்லம், ஏரிப்பூங்கா, பேருந்து நிலையம் என அனைத்து இடங்களிலும், சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே, கோடை விழா மலர்க் கண்காட்சியையொட்டி, ஏற்காடு ஏரி அருகே உள்ள திடலில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இணை இயக்குநர் சாந்தி தலைமையில் செல்லப்பிராணிகள் கண்காட்சி நடத்தப்பட்டது. அதில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில், நாட்டினங்களான சிப்பிப்பாறை, கன்னி, ராஜபாளையம், கோம்பை உள்ளிட்டவையும், ஜெர்மன் ஷெப்பர்டு, அல்சேஷன், டாபர்மேன், கிரேடன் பொமரேனியன், காக்கர்ஸ் பேனியல், டால்மேஷன், பூடுல்ஸ், ராட்வீலர், பெல்ஜியம் ஷெப்பர்டு உள்ளிட்ட வெளிநாட்டு இனங்களும் என 20-க்கும் மேற்பட்ட நாயினங்கள் பங்கேற்றன.
சேலம் மாவட்ட காவல்துறை, சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த மோப்ப நாய்களும் போட்டியில் பங்கேற்றன. நாய்கள், அவற்றின் உரிமையாளர்களின் கட்டளைக்கு கீழ் படிதல், சாகசம் நிகழ்த்துதல், மோப்ப சக்தி ஆகியவற்றின் அடிப்படையில், சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த அடிப்படையிலும் நாயின் உரிமையாளருக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.
இது தவிர, லவ் பேர்ட்ஸ், சேவல், ஆடு, பூனை, மாடு என பல்வேறு வகை செல்லப்பிராணிகளும் கண்காட்சியில் பங்கேற்றன. பங்கேற்ற அனைத்து செல்லப் பிராணிகளுக்கும், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. கண்காட்சியில், சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் செல்லப் பிராணிகளை பங்கேற்க வைத்து, மகிழ்ந்தனர். செல்லப் பிராணிகள் கண்காட்சி, சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்தது.
ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்திட சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால், பலரும் நீண்ட நேரம் காத்திருந்து, படகு சவாரி செய்து, மகிழ்ந்தனர். அண்ணா பூங்காவில் இருந்த மலர்ச்சிற்பங்கள் அருகே நின்று, புகைப்படம் எடுத்துக் கொள்வதில் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வமுடன் இருந்தனர்.
இதனிடையே, சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அடிவாரம்- ஏற்காடு சாலை, வாகனங்கள் ஏற்காடு வருவதற்கான சாலையாகவும், ஏற்காடு- குப்பனூர் சாலை, வாகனங்கள் வெளி யேறும் சாலையாகவும் மாற்றப்பட்டு, போக்குவரத்து கண்காணிக்கப்பட்டது. ஏற்காடு கோடை விழா மலர்க் கண்காட்சி, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இன்று (28-ம் தேதி) நிறை வடைகிறது.
சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் மாலையில் பரிசளிப்பு விழா நடக்கிறது. ஏற்காட்டில் இன்றும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிக அதிகமாகவே இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT