Published : 27 May 2023 11:41 PM
Last Updated : 27 May 2023 11:41 PM
சேலம்: ஏற்காடு கோடை விழா மலர்க்கண்காட்சியில் நாளையுடன் நிறைவடையும் நிலையில், அங்கு குவிந்த சுற்றுலாப் பயணிகளால் ஏற்காடு திணறியது.
கோடை விழாயையொட்டி, இன்று நடைபெற்ற செல்லப்பிராணிகள் கண்காட்சியில் சிப்பிப்பாறை, அல்சேஷன், ஜெர்மன் ஷெப்பர்டு என 20-க்கும் மேற்பட்ட நாயினங்கள் பங்கேற்று, சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியடைய வைத்தன.
ஏற்காட்டில் கோடை விழா மலர்க்கண்காட்சி நிறைவு நிலைக்கு வந்ததாலும், வார விடுமுறை நாள் என்பதாலும், ஏற்காட்டுக்கு இன்று சுற்றுலாப் பயணிகள் வருகை வழக்கத்துக்கு மாறாக, மிகவும் அதிகமாக இருந்தது. தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கார்கள், வேன்கள் ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வந்த வண்ணம் இருந்தனர். சேலம் மக்கள், இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் ஏற்காடு வந்தனர்.
ஏராளமானோர் ஏற்காட்டுக்கு வந்ததால், சேலம் அடிவாரம் ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும், ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்கா, படகு இல்லம், ஏரிப்பூங்கா, பேருந்து நிலையம் என அனைத்து சுற்றுலா இடங்களிலும், சாலையோரத்திலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் புறப்பட்டுச் செல்வதில் பெரும் இடையூறு ஏற்பட்டது.
இதனிடையே, கோடை விழா மலர்க்கண்காட்சியையொட்டி, ஏற்காடு ஏரி அருகே உள்ள திடலில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இணை இயக்குநர் சாந்தி தலைமையில், செல்லப்பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது. குறிப்பாக, வளர்ப்பு நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில், நாட்டின வகைகளான சிப்பிப்பாறை, கன்னி, ராஜபாளையம், கோம்பை உள்ளிட்ட நாய் இனங்களும், ஜெர்மன் ஷெப்பர்டு, அல்சேஷன், டாபர்மேன், கிரேடன் பொமரேனியன், காக்கர்ஸ்பேனியல், டால்மேஷன், பூடுல்ஸ், ராட்வீலர், பெல்ஜியம் ஷெப்பர்டு என 20-க்கும் மேற்பட்ட வகை நாயினங்கள் பங்கேற்க வைக்கப்பட்டன.
சேலம் மாவட்ட காவல்துறை, சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆகியவற்றை சேர்ந்த மோப்ப நாய்களும் போட்டியில் பங்கேற்றன. நாய்கள், அவற்றின் உரிமையாளர்களின் கட்டளைக்கு கீழ் படிதல், சாகசம் நிகழ்த்துதல், மோப்ப சக்தி ஆகியவற்றின் அடிப்படையில், சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த அடிப்படையிலும் நாயின் உரிமையாளருக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.
இது தவிர, லவ் பேர்ட்ஸ், சேவல், ஆடு, பூனை, மாடு என பல்வேறு வகை செல்லப்பிராணிகளும் கண்காட்சியில் பங்கேற்க வைக்கப்பட்டன. பங்கேற்ற அனைத்து செல்லப் பிராணிகளுக்கும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டன. கண்காட்சியில், சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் செல்லப்பிராணிகளை பங்கேற்க வைத்து, மகிழ்ந்தனர். செல்லப்பிராணிகள் கண்காட்சி, சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்தது.
ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்திட சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால், பலரும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதானது. எனினும், பலரும் பொறுமையுடன் காத்திருந்து, படகு சவாரி செய்து, மகிழ்ந்தனர். அண்ணா பூங்காவில் இருந்த மலர்ச்சிற்பங்கள் அருகே நின்று, புகைப்படம் எடுத்துக் கொள்வதில் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வமுடன் இருந்தனர்.
இதனிடையே, சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அடிவாரம்- ஏற்காடு சாலை, வாகனங்கள் ஏற்காடு வருவதற்கான சாலையாகவும், ஏற்காடு- குப்பனூர் சாலை, வாகனங்கள் வெளியேறும் சாலையாகவும் மாற்றப்பட்டு, போக்குவரத்து கண்காணிக்கப்பட்டது. ஏழு நாட்களாக நடைபெற்று வரும் கோடை விழா மலர்க்கண்காட்சி நிறைவடைய இருப்பதால், ஏற்காட்டில் நாளை (28-ம் தேதி) சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிக அதிகமாகவே இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT