Published : 25 May 2023 06:34 AM
Last Updated : 25 May 2023 06:34 AM

உதகை மலர்க் கண்காட்சி சிறப்பு மாடத்தில் 125 நாடுகளின் தேசிய மலர்கள் - இந்த வார இறுதி வரை கண்டு ரசிக்க அழைப்பு

உதகை தாவரவியல் பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 125 நாடுகளின் தேசிய மலர்கள் . படம்: ஆர்.டி.சிவசங்கர்

உதகை: உதகை மலர்க் கண்காட்சியில் இடம்பெற்ற 125 நாடுகளின் தேசிய மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன. உதகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான உதகை மலர்க் கண்காட்சி கடந்த 19-ம் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இக்கண்காட்சியை 1.35 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்துள்ளனர்.

மக்களின் அமோக வரவேற்பு காரணமாக மலர்க் கண்காட்சியை இந்த வார இறுதி வரை தோட்டக்கலைத் துறையினர் நீட்டித்துள்ளனர். இந்நிலையில், 125-வது உதகை மலர்க் கண்காட்சியில் உலகின் 125 நாடுகளின் தேசிய மலர்களை ஓரிடத்தில் கண்டு ரசிக்கும் வகையில் முதன்முறையாக அமைக்கப்பட்ட சிறப்பு மலர் மாடம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘சிறப்பு மலர் மாடத்தில் இந்தியாவின் தாமரை, டென்மார்க்கின் மார்குரட் டெய்சி, தென்னாப்பிரிக்காவின் கிங் புரோட்டியா, பங்களாதேஷின் அல்லி, உக்ரைனின் சூரியகாந்தி, பின்லாந்து நாட்டின் லில்லி உள்ளிட்ட 125 நாடுகளின் தேசிய மலர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இம்மலர்களைக் காணும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படங்களை எடுத்துச் செல்கின்றனர்’’ என்றனர்.

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறும்போது, ‘‘பல நாடுகளின் தேசிய மலர்களை ஓரிடத்தில் பார்த்தது வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. 125 நாடுகளின் தேசிய மலர்களின் பெயர்களையும், அவற்றின் தன்மைகளையும் அறிந்துகொள்வதற்கு இக்கண்காட்சி நல்ல வாய்ப்பாக இருந்தது‌‌. உதகைக்கு சுற்றுலா வரும் மாணவர்களுக்கு மலர்க்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு மலர் மாடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x