Published : 22 May 2023 06:27 AM
Last Updated : 22 May 2023 06:27 AM
மசினகுடி: முதுமலை புலிகள் காப்பகத்துக்கு சுற்றுலா வரும் பயணிகள், வன விலங்குகளால் ஏற்படும் ஆபத்தை உணராமல் அத்துமீறி நடந்துகொள்வது அதிகரித்து வருகிறது.
கோடை சீசனையொட்டி, தமிழகம்மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு, உதகையிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக வரும் சுற்றுலா பயணிகள், அத்துமீறி நடந்துகொள்வது அதிகரித்துள்ளது.
இவ்வழியாக வரும் சுற்றுலா பயணிகள், அதிவேகமாக வாகனத்தை இயக்குவதுடன், வன விலங்குகள் அருகில் நின்று செல்ஃபி எடுப்பது, உணவளிப்பது, வன விலங்குகளைப் புகைப்படம் எடுப்பது, பிளாஸ்டிக் குப்பையை சாலையில் தூக்கி எறிவது, வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி உணவு சமைப்பது என பல்வேறு வகைகளில் அத்துமீறி நடந்துகொள்கின்றனர்.
இதுதொடர்பாக உள்ளூர்மக்கள் கூறும்போது, "உதகையில் மலர் கண்காட்சி நடைபெறுவதால், கேரளாவிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என தெரியும். மாவனல்லா – உதகை சாலையில் ஆபத்தை உணராமல் சுமார் நூறு கார்களில் வந்த கேரளா சுற்றுலா பயணிகள், வாகனத்தில் இருந்து கீழே இறங்கி காட்டுக்குள் சென்று செல்ஃபி, புகைப்படம் எடுக்கின்றனர்.
அதுவும்யானைகளின் முக்கிய வழிதடமாகஉள்ள மாவனல்லா - வாழைத்தோட்டம் இடையே. கடந்த ஒரு மாதமாகவே இதே நிலை தான் நீடிக்கிறது. வாகனங்களை நிறுத்தி காட்டுக்குள் செல்வோரை உள்ளூர் மக்கள் அறிவுரை கூறி அனுப்பும் நிலை உள்ளது. உள்ளூர் மக்கள் விறகு எடுக்க சென்றாலோ ஆடு, மாடு மேய்க்க சென்றாலே தேடி சென்று விரட்டும் வனத்துறையினர், நடுகாட்டுக்குள் காரை நிறுத்தி கூட்டம், கூட்டமாக காட்டுக்குள் செல்வதை ஏன் கண்டுகொள்வதில்லை.
வனத்துறையினரின் கண்காணிப்பு பணியில் சுணக்கம் உள்ளது. ஆட்கள் பற்றாக்குறை என்றால் அருகில் உள்ள வனச்சரகத்திலிருந்து ஆட்களை வரவழைத்து பணியில் ஈடுபடுத்தலாம். சிங்காரா வனச்சரகத்தில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது" என்றனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்கூறும்போது, "வனப்பகுதி வழியாக வரும் வாகன ஓட்டிகள் அத்துமீறும்போது, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT