Published : 19 May 2023 05:31 PM
Last Updated : 19 May 2023 05:31 PM
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் ஆபத்தான இடங்களில் மக்கள் குளிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பூங்கா, காவிரி ஆற்றில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், விஷேஷ நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். கோடைக் காலம் தொடங்கிய நிலையில் இருந்து மேட்டூர் அணை காவிரி ஆற்றில் குளிப்பதற்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் வருகின்றனர்.
தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூருக்கு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேட்டூர் அணை மற்றும் அணை நீர்த்தேக்க பகுதிகளில் பகுதியில் ஏராளமானோர் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 5-ம் தேதி ஈரோட்டைச் சேர்ந்த ராஜா (48) என்பவர் பண்ணவாடி பரிசல் அருகே அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தார். அதேபோல, கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்த திலீப்குமார் (20) என்ற இளைஞர் மாசிலாபாளையம் மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் குளித்தபோது, ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
கோடை வெயிலின் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள நீர்நிலைக்கு சென்று குளிக்கும் போது, நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்குச் சென்று உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில், 'ஆழமான பகுதி; குளிப்பதற்கு தடை' என எவ்வித அறிவிப்புப் பலகையும் வைக்கப்படவில்லை.
இதனால் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் அணை நீர்த்தேக்கப் பகுதியில் குளிக்கின்றனர். பின்னர், ஆழமான பகுதி என தெரியாமல் சென்று மூழ்கி உயிரிழக்கின்றனர். இனி வரும் நாட்களில் இதுபோன்ற உயிரிழப்பைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆபத்தான இடங்களில் எச்சரிக்கை பலகையும் வைக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT