Published : 19 May 2023 10:39 AM
Last Updated : 19 May 2023 10:39 AM
உதகை: நீலகிரியில் கோடை சீசனின் முக்கிய நிகழ்வான மலர்க்கண்காட்சி இன்று (மே 19) தொடங்கியது. மலர் கண்காட்சியின் சிறப்பம்சமாக 50 ஆயிரம் கார்னேசன் மலர்களால் தேசிய பறவையான மயில் வடிவமைக்கப்பட்டது.
சர்வதேச சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர கோடை காலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடை விழா நடத்தப்படும்.
இதில் முக்கியமாக ரோஜா காட்சி, மலர்க் கண்காட்சி மற்றும் பழக்காட்சி ஆகியவை அடங்கும். உதகை மலர்க்கண்காட்சி உலக பிரசித்தி பெற்றது என்பதால் மலர் கண்காட்சியை காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருவார்கள்.
மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சி கண்டு ரசித்து செல்வார்கள். இந்தாண்டு 125-வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. கண்காட்சியின் சிறப்பம்சமாக 50 ஆயிரம் கார்னேசன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேசிய பறவையான மயில் வடிவமைக்கப்பட்டது.
மேலும், 125வது மலர்காட்சி அலங்காரம் 20 ஆயிரம் மலர்களால் மாநிலத்தின் விலங்கான வரையாடு, மாநில மலரின் செங்காந்தள் மலர், வண்ணத்துப் பூச்சி, பரத நாட்டிய கலைஞர் வடிவமைக்கப்பட்டுள்ளன. "ஊட்டி 200" 10,000 மலர்களாலும், மஞ்சப்பை 2 ஆயிரம் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததது.
இந்நிலையில், 20 ஆயிரம் வில்லியம்ஸ் மற்றும் கொய்மலர் மலர் தொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவை சுற்றுலா பயணிகள் வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் கடந்த 5 நாட்கள் மேலாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், இன்று மழை குறைந்ததால் தோட்டக்கலைத் துறையினர் நிம்மதி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய குறிக்கோளான இயற்கை வேளாண்மையை எடுத்துரைக்கும் வகையில் இயற்கை வேளாண்மை காட்சி திடல் மற்றும் தமிழ்நாட்டின் தோட்டக்கலை வளத்தை குறிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டிருந்த தோட்டக்கலைத்துறையின் காட்சித் திடல்களை சுற்றுத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பார்வையிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT