Published : 19 May 2023 04:10 AM
Last Updated : 19 May 2023 04:10 AM
ருத்ரபிரயாக்: இந்திய சுற்றுலா வரைபடத்தில் இடம்பிடிக்கும் வகையில் ருத்ரபிரயாக் கார்த்திக் சுவாமி கோயில் மேம்படுத்தப்படும் என்று உத்தராகண்ட் மாநில சுற்றுலா, மதம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சத்யபால் மகராஜ் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநில சுற்றுலாத் துறை சார்பில், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள கார்த்திக் சுவாமி கோயிலில் தென்னகத்தில் செய்வதுபோல் அண்மையில் 108 வலம்புரி சங்கு பூஜை, கலசஸ்தாபனம், வேள்வி ஆகியன நடைபெற்றன. இதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மற்றும் சுவாமிமலை முருகப் பெருமானுக்கு சாற்றிய வஸ்திரங்கள், கார்த்திக் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பங்கேற்ற உத்தராகண்ட் மாநில சுற்றுலா, மதம் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சத்யபால் மகராஜ் பேசியதாவது: கார்த்திகேய சுவாமி கோயில் மற்றும் அனுசுயா தேவி கோயில் ஆகியன சுற்றுலா சுற்றுடன் இணைக்கப்படும். இக்கோயில்களின் வளர்ச்சியால் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சுற்றுலா வரைபடத்தில் இடம்பிடிக்கும் வகையில் இத்தலம் மேம்படுத் தப்படும் என்றார்.
சிவாச்சாரியார்கள், குருநாதர்கள் ஆகியோர் கந்தப் பெருமானின் வாழ்க்கை வரலாறு, கிரவுஞ்ச மலைக்கும் தென்னிந்தியாவுக்குமான தொடர்பு குறித்துவிளக்கினர். இதைத் தொடர்ந்துஆசிரியர்கள், குருநாதர்கள், சிவாச்சாரியார்கள் கவுரவிக்கப்பட்டனர். நிறைவாக பத்மஸ்ரீ சிவமணி (டிரம்ஸ்) மற்றும் மாண்டலின் ராஜேஷ் வழங்கிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீமத் சரவண மாணிக்கவாசக சுவாமிகள், ஸ்ரீ சாந்தலிங்க மருதாசலம், ஸ்ரீ திருஞானானந்த சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ மயிலை ஆதினம், ஸ்ரீ பேரூர் ஆதினம், ஸ்ரீ ஆரூர் சுப்பிரமணிய சிவாச்சாரியார், ஸ்ரீ சுவாமி சுசாந்தா, பிரதமரின் ஆலோசகர் பாஸ்கர் குல்பே, உத்தராகண்ட் அரசு சுற்றுலாத் துறை செயலர் சச்சின் குர்வே, கூடுதல் செயலாளர் ரவிசங்கர், கேதார்நாத் எம்எல்ஏ ஷைலா ராணி ராவத், காவல்துறை எஸ்பிக்கள் அசோக் பதானே, விஷாகா, மாவட்ட துணை மாஜிஸ்டிரேட் உகிமத் ஜிதேந்திர வர்மா, மாவட்ட சுற்றுலா அதிகாரி ராகுல் சௌபே, சுஷில் நெளட்டியால், பாஜக மாவட்ட தலைவர் மகாவீர் பன்வார், முன்னாள் மாவட்ட தலைவர் விஜய் சுப்ரவான், கோயில் கமிட்டி தலைவர் சத்ருகன் நேகி என்று 20-க்கும் மேற்பட்ட ஆதினங்கள், 50-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள், 100-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT