Published : 16 May 2023 04:05 AM
Last Updated : 16 May 2023 04:05 AM
சேலம்: ஏற்காட்டில், 46-வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி வரும்21-ம் தேதி தொடங்கி 8 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மலர்க் காட்சியில், பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிராகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீம் உள்ளிட்ட பல்வேறு மலர்ச்சிற்பங்கள் 5 லட்சம் வண்ண மலர்களைக் கொண்டு வைக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் உள்ள முக்கிய கோடைகாலசுற்றுலாத் தலங்களில் ஒன்றாக, சேலத்தை அடுத்துள்ள ஏற்காடு உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக, ஆண்டுதோறும் கோடை காலத்தில் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு ஏற்காடு கோடைவிழா மற்றும் மலர்க் கண்காட்சி வரும் 21-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடக்கிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஏற்காட்டில், 46-வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம், சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் வரும் 21-ம் தேதி தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசவுள்ளனர்.
கோடை விழாவில் குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் என அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் தோட்டக்கலைத் துறை சார்பில் அண்ணா பூங்காவில் பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிராகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீம் உள்பட பல்வேறு மலர்ச் சிற்பங்கள் கார்னேஷன், ஜெர்பைரா, ஆந்தூரியம், ஆர்க்கிட் உள்ளிட்ட வகைகளின் 5 லட்சம் மலர்களைக் கொண்டு, வடிவமைக்கப்படவுள்ளது.
மேலும், பார்வையாளர் களின் கண்களை கவரும் வகையில் டேலியா, மேரி கோல்ட், ஜீனியா, டோரினியம், சால்வியா உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் வண்ணமலர்களை கொண்ட 10 ஆயிரம் மலர் தொட்டிகள், மலர்க் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட வுள்ளன. மேலும், மலைப் பகுதிகளில் விளையக்கூடிய பல்வேறு வகை பழங்களைக் கொண்டு, பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகளும் அமைக்கப் படவுள்ளன. அரசின் திட்டங்களை விளக்கும் பல்துறை பணி விளக்க முகாமும் நடத்தப்படவுள்ளது.
கோடை விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் அனைத்து நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலை ஏற்றம் (டிரக்கிங்), கைப் பந்து, கயிறு இழுத்தல், மாரத்தான், சைக்கிள் ஓட்டுதல், சிலம்பம், படகு போட்டி, கிரிக்கெட் போட்டிகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
மேலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி, சுற்றுலாத்துறை, கலைப் பண்பாட்டுத் துறை ஆகியவற்றின் சார்பில் தினந்தோறும் பல்வேறு இன்னிசை, கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. வரும் 21-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறவுள்ள கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சிக்கு சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் உள்ளிட்டோர் ஆர்வ முடன் வருகை தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT