Published : 11 May 2023 09:16 PM
Last Updated : 11 May 2023 09:16 PM

நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா: இறுதி முடிவு எடுக்கப்படவில்லை; தமிழக அரசு

கோப்புப்படம்

சென்னை: நீலகிரி மாவட்ட கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்துவது குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஊட்டியில் நடைபெறும் இந்த ஆண்டிற்கான கோடை விழாவில், 200 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக ஊட்டியில் உள்ள தீட்டுக்கல்லில் மே 13 முதல் 30ஆம் தேதி வரை ஹெலிடூரிசம் என்ற பெயரில் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடைபெற உள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பேராசிரியர் T.முருகவேல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மலைப் பகுதிகளில் சுற்றுலா நோக்குடன் ஹெலிகாப்டர்களை பறக்கவிடுவது மிகவும் ஆபத்தானது. மலைபகுதிகளில் ஏற்படும் சிறிய சத்தம்கூட வனப்பகுதிக்குள் அதிக ஒலி அலைகளை ஏற்படுத்தும். இதனால் பொதுமக்கள், யானை உள்ளிட்ட விலங்குகளும், பறவைகளும் பாதிக்கப்படும்.

வனப்பகுதிக்கு அருகில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் ஹெலிபேட் அமைந்துள்ளதால், பறவைகள், வன மற்றும் வீட்டு விலங்குகள் ஆபத்துகளை சந்திக்க நேரிடும். பறவைகள் மோதினால் ஹெலிகாப்டர்கள் கடுமையாக பாதிக்கப்படும். 2021ம் ஆண்டு வானிலை சீற்றத்தால் நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் நாட்டின் பாதுகாப்புப் படைத் தலைவர் பிபின் ராவத் உள்ளிட்டோர் பலியான சம்பவம் நடந்துள்ளது. நீலகிரி வனப்பகுதியில் ஏறத்தாழ 250 கழுகுகள் மட்டுமே உள்ளன. ஹெலிகாப்டர் போக்குவரத்து, மனித நடமாட்டம், வாகன போக்குவரத்து, வேட்டையாடுதல் போன்றவற்றால் அவற்றின் வருகை 35.7 சதவீதம் குறைந்துள்ளது. எனவே வரும் 13ம் தேதி தொடங்கவுள்ள ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் எம்.நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.வி.சுரேஷ்குமார், "மணிக்கு ஒருமுறை கால நிலை மாறுவதால் ஹெலிகாப்டர் சுற்றுலாவை இயக்குவது பாதுகாப்பானது அல்ல. நீலகிரியில் ஹெலிகாப்டர் சுற்றுலாவை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் ஆராயவில்லை. வனத்துறையிடம் ஆலோசிக்கவில்லை என செய்தி வெளியாகி உள்ளது" என்று வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், "பஃப்பர் ஜோன் என அழைக்கப்படும் காடுகளுக்கு இடைப்பட்ட இடங்கள் மற்றும் நகர பகுதிகளில் மட்டுமே ஹெலிகாப்டர்களை தரையிறக்கப்பட உள்ளது. மேலும், ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்தும் விவகாரத்தில் எந்த இறுதி முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. விளம்பரம் மட்டுமே வெளியிடபட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

அரசு தரப்பு விளக்கத்தை பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மே 17ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x