Published : 11 May 2023 06:11 AM
Last Updated : 11 May 2023 06:11 AM

ரோஜா கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் உதகை பூங்காவில் பூக்காத ரோஜா செடிகள்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

உதகை: உதகை ரோஜா பூங்காவில் ரோஜாமலர்க் கண்காட்சி நாளை மறுநாள்தொடங்கவுள்ள நிலையில், பூங்காவில் மலர்கள் பூக்காததால் சுற்றுலாபயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசன் களைகட்டியுள்ளது. கடந்த 6-ம் தேதி கோத்தகிரி நேருபூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. காய்கறி கண்காட்சியை 11 ஆயிரத்து 792 பேர் பார்வையிட்டனர்.

அடுத்ததாக, உதகை ரோஜா பூங்காவில் மே 13, 14, 15-ம் தேதிகளில் 18-வது ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளது. இப்பூங்காவில் 4 ஆயிரம் ரகங்களில் சுமார் 30 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ரோஜா செடிகளில் மலர்கள் பூக்காமல் உள்ளன.ரோஜா கண்காட்சி நாளை மறுநாள்தொடங்கவுள்ள நிலையில், மலர்கள் பூக்காததால் தோட்டக்கலைத்துறையினர் கவலை அடைந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றமடைந்துள்ளனர். கடந்த காலங்களில் மே மாத தொடக்கத்திலேயே ரோஜா பூங்காவில் உள்ளமலர்கள் பூத்து, பூங்காவே வண்ணமயமாக காட்சியளிக்கும்.

இதுகுறித்து தோட்டக்கலை ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘ரோஜா பூங்காவில் செடிகள் கவாத்து பணி பிப்ரவரி மாதமே தொடங்க வேண்டும். இந்தாண்டு மார்ச் மாதம்தான் செடிகள் கவாத்து செய்யப்பட்டன. மேலும் பூங்கா தொழிலாளர்கள் ஒரு மாத காலம் போராட்டத்தில் ஈடுபட்டதால், பராமரிப்பு இல்லாமல் செடிகளுக்கு உரம், தண்ணீர் கிடைக்கவில்லை. செடிகளுக்கு ஊட்டச்சத்து இல்லாததால் மலர்கள் பூப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

இருப்பினும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் நீலகிரிதோட்டக்கலைத்துறை சார்பில்பல வண்ண ரோஜா மலர்களை கொண்டு அலங்கார வளைவு,பல்வேறு அலங்காரங்கள் செய்யும்பணி நடைபெற்றுவருகிறது.

ரோஜா காட்சியை முன்னிட்டு, சிறந்த ரோஜா தோட்டங்கள், பூந்தொட்டிகளில் வளர்க்கப்படும் ரோஜாக்கள், ரோஜா ரகங்கள் சேகரிப்பு, கொய்மலர் ரோஜா வகைகள், வணிக ரீதியான ரோஜா இனங்கள், தனியார் மற்றும் அரசு நிறுவன பூங்காக்களிலிருந்து கொண்டு வரப்பட்ட ரோஜா மலர்மாலைகள், ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x