Published : 01 May 2023 04:15 AM
Last Updated : 01 May 2023 04:15 AM

நோணாங்குப்பம் படகு குழாமில் போதிய படகுகள் இயங்காததால் நீண்ட நேரம் காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்

நோணாங்குப்பம் படகு துறையில் படகுகளில் பயணிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் சுற்றுலா பயணிகள். படம்: செ. ஞானபிரகாஷ்.

புதுச்சேரி: நோணாங்குப்பம் படகு குழாமில், போதிய படகுகள் இயங்காததால் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் நோணாங்குப்பம் படகு துறை புதுச்சேரி நகரிலிருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த படகுத் துறையில் ஸ்பீட் போட், மோட்டார் போட், பெடல் போட், ஃபெராரி ரைட் என பல வகையான படகுகள் உள்ளன. ஆனால் இவை முழுவதும் இயங்குவதில்லை. பல படகுகள் பழுதாகியிருப்பதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இது பற்றி ஊழியர்கள் தரப்பில் விசாரித்தபோது, "புதுச்சேரி நோணாங்குப்பம் படகு குழாமில் தற்போது அதிகளவில் படகுகள் இயங்கவில்லை. குறிப்பாக 80 பேர் சவாரி செய்யும் பெரிய படகு மட்டுமே உள்ளது. அத்துடன் 40 பேர் சவாரி செய்யும் படகு, 35 பேர், 25 பேர் சவாரி செய்யும் இரண்டு படகுகள், 20 பேர் சவாரி செய்யும் ஐந்து சிறிய படகுகள் இயக்கப்படுகின்றன.

பல படகுகள் பழுதடைந்து ஓரம் கட்டி நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரி வருகின்றனர். அதிலும் வாரவிடுமுறை நாட்களில் கூட்டம் அதிகளவில் அலைமோதுகிறது. ஆனால் போதிய படகுகள் இல்லா ததால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது.

இதுகுறித்து அரசு தரப்பில் தெரிவித்துவிட்டோம். எளிதாக சில குறைகளை சரி செய்தால் பயணிகள் காத்திருக்கும் நேரம் குறையும். வாரந்தோறும் விடுமுறை நாட்களில் ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. சேதமடைந்த படகுகளை சீரமைத்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும்" என்று தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பயணிகள் நீண்ட வரிசையில் படகு பயணத்துக்காக பல மணி நேரம் காத்திருந்து பயணித்தனர். இது குறித்து பயணிகள் கூறுகையில், "நோணாங்குப்பம் படகு குழாமில் அடிப்படை வசதிகளே இல்லை. கடந்த முறை வந்தபோது இது குறித்து புகார் தெரிவித்தோம். எவ்வித நடவடிக்கையும் இல்லை. படகு பயணத்துக்கே நீண்ட நேரம் காத்திருக்கிறோம்.

படகுகளில் பாரடைஸ் பீச் சென்றால், அங்கு வெயில் காலத்தில் ஒதுங்க நிழற்குடைகளே இல்லை. குடிநீர் கூட இல்லை. கிட்டத்தட்ட படகு போக்குவரத்துக்கு ரூ. 400 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அடிப்படை வசதியில்லாமல் தனியாரிடம் செல்ல அரசு தரப்பே எங்களை தள்ளுகிறதோ என்று தோன்றுகிறது" என்று குற்றம் சாட்டினர்.

நோணாங்குப்பம் படகு குழாம் அரசு வசம் உள்ளது. தற்போது கரோனா காலத்துக்கு பிறகு அதிகவருவாய் ஈட்டதொடங்கி உள்ளது.தேவைக்கு ஏற்ப படகுகளை இயக்கவேண்டும். போதிய அடிப்படை வசதிகளை இனியாவது செய்வார்களா என சுற்றுலா பயணிகள் கேள்வி எழுப்பு கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x