Published : 01 May 2023 04:20 AM
Last Updated : 01 May 2023 04:20 AM
சேலம் / மேட்டூர்: கோடை விடுமுறை என்பதாலும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனிடையே, பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. இதனால், ஏற்காட்டுக்கு கடந்த வாரத்தில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில் ஏற்காட்டுக்குச் செல்வதற்கு முக்கிய சாலையான, சேலம் அடிவாரம் - ஏற்காடு மலைப் பாதையில் பராமரிப்புப் பணி தொடங்கப்பட்டதால், அதில் 4 சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, அயோத்தியாப் பட்டணத்தை அடுத்த குப்பனூர் - ஏற்காடு மலைப்பாதை வழியாக வாகனங்கள் ஏற்காடு வந்து செல்கின்றன. இந்நிலையில், கோடை விடுமுறை காரணமாகவும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களின் விடுமுறை காரணமாகவும் ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை நேற்று மிக அதிகமாக இருந்தது.
சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் குப்பனூர் - ஏற்காடு மலைப்பாதை வழியாகவே வந்து செல்ல வேண்டியுள்ளதால், அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இரு சக்கர வாகனங்களிலும் சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர்.
இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், ‘குப்பனூர் சாலை குறுகியதாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே, சேலம் அடிவாரம் - ஏற்காடு சாலை சீரமைப்புப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்’ என்றனர்.
இதனிடையே, ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத்தோட்டம், ஏரிப் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், கரடியூர் காட்சி முனைப்பகுதி, சேர்வராயன் கோயில், உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏரியில் படகு சவாரி செய்வதற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதனிடையே, ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக மழை பெய்வதால், அங்கு குளுகுளு சூழல் நிலவுவதும், அவ்வப்போது சாரல் மழை பெய்வதும், சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் உற்சாகத்தை அளித்து வருகிறது. மே தின விடுமுறையான இன்றும், ஏற்காட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர்: மேட்டூர் அணைப் பூங்காவுக்கும் நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசித்தனர். பின்னர் அணைப் பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். நேற்று ஒரே நாளில் அணைப் பூங்காவுக்கு 10 ஆயிரத்து 97 பேர் வந்து சென்றனர்.
இதன் மூலம் பார்வையாளர் கட்டணமாக ரூ.50 ஆயிரத்து 485 வசூலானது.மேட்டூர் அணைப் பூங்காவுக்கு 10 ஆயிரத்து 97 பேர் வந்து சென்றனர். இதன் மூலம் பார்வையாளர் கட்டணமாக ரூ.50 ஆயிரத்து 485 வசூலானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT