Published : 30 Apr 2023 04:22 AM
Last Updated : 30 Apr 2023 04:22 AM

சுற்றுலா பயணிகளை கவர்ந்த சுற்றுப் பேருந்து சேவை - உதகையில் களைகட்டும் சுற்றுலா தலங்கள்

உதகை: உதகையி்ல் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக அரசு போக்குவரத்து கழகம் மூலமாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘சர்க்கியூட் பஸ்’ எனப்படும் சுற்றுப் பேருந்து சேவை, சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தாவரவியல் பூங்கா, சிறுவர்பூங்கா, தொட்டபெட்டா, முதுமலை சரணாலயம், படகு இல்லம் ஆகியபகுதிகள் களைகட்டி வருகிறது.குறிப்பாக தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் திரள்வதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இந்நிலையில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஆண்டுதோறும் ‘சர்க்கியூட் பஸ்’ எனப்படும் சுற்றுப் பேருந்து சேவை தொடங்கப்படும். இந்த பேருந்து உதகையிலுள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம்,தொட்டபெட்டா மலை சிகரம், ரோஜா பூங்கா (நுழைவு வாயில்), சிறுவர் பூங்கா ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

அரை மணி நேரத்துக்கு ஒரு முறை என 20 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகள், ஃபிங்கர்போஸ்ட், ஆவின் நிறுவனம், மத்தியபேருந்து நிலையம், காந்தல் பகுதிகளை மையமாக கொண்டுஇயக்கப்படுகின்றன. பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50, குறிப்பிட்ட சுற்றுலா தலத்தை பார்க்க செல்பவர்களுக்கு ரூ.20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கார், வேன்களில் அதிக கட்டணம்கொடுத்து செல்ல முடியாத நிலையில், ஏழை மற்றும் நடுத்தரமக்களுக்கு இந்த சர்க்கியூட் பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. அனைத்து பேருந்துகளும் பயணிகளால் நிரம்பி வழிகின்றன.

இது தொடர்பாக சுற்றுலா பயணிகள் கூறும்போது, "இந்த சுற்றுப்பேருந்து சேவையை சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்துவதால், போக்குவரத்து நெரிசலும் கணிசமாக குறைகிறது. வாடகை வாகனங்களில் பயணித்தால் செலவு அதிகமாகும் நிலையில், இந்த பேருந்து சேவை பயனுள்ளதாக உள்ளது.

பழைய பேருந்துகள் அல்லாமல் புதிய பேருந்துகளை இயக்க வேண்டும்" என்றனர். போக்குவரத்துக்கழக பொது மேலாளர் நடராஜன் கூறும் போது, "கோடை சீசனையொட்டி முதற்கட்டமாக 20 சுற்றுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளில் பயணிக்க டிக்கெட் வாங்கும் சுற்றுலா பயணிகள், எந்த ஓர் சுற்றுலா தலத்திலும் ஏறலாம், இறங்கலாம்.

அதே டிக்கெட்டுடன் ஒரு நாளில் எந்த சுற்றுப்பேருந்திலும் பயணிக்கலாம். வரும் நாட்களில்சுற்றுலா பயணிகள் எண்ணிக்கைக்கேற்ப, கூடுதல் பேருந்துகள் இயக்கநடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x